sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஒரு பொய்!

/

ஒரு பொய்!

ஒரு பொய்!

ஒரு பொய்!


PUBLISHED ON : ஜூலை 05, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 05, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவநாதன் பசுமலை கிராமத்தில் வந்திறங்கி, மணியக்காரரின் பழைய பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்தபோது, கிராம மக்கள், அவரை அதிசயமாக பார்த்தனர்.

''ஏன் சார் மும்பைய விட்டு, இந்த வயசுல தன்னந்தனியாக குக்கிராமத்திற்கு வந்துருக்கீங்க... உங்களுக்கு குடும்பம் கிடையாதுன்னு உங்களக் கூட்டியாந்தவங்க சொன்னாங்களே... அப்பக்கூட உங்க மாதிரி வசதியானவங்களுக்கு பெரிய பெரிய, அதென்னவோ சொல்வாங்களே... ம்... 'ஓல்ட் ஏஜ் ஹோம்'ன்னு இருக்குதுங்களாமே... அங்க எல்லா சவுகரியங்களும் கிடைக்குமாம்ல்ல... அங்க போகாம, ஏன் இந்த ஊரைத் தேடிப் பிடிச்சீங்க,'' என்றார் வியப்புடன் மணியக்காரர்.

புன்னகை செய்த தேவநாதன், ''நீங்க சொல்றது உண்மை தான்; ஆனா, அங்க போக எனக்கு விருப்பமில்ல. அதோட அங்க என்னைப் போல, வயதானவங்க தான் இருப்பாங்க. அவங்க கூட இருந்து என்ன செய்யறது... 'இந்தியாவோட இதயமே கிராமங்கள்ல தான் இருக்கு'ன்னு காந்திஜி சொன்னார். அதனால தான், குறைந்தபட்சம் இந்த வயதான காலத்திலாவது, கிராமத்தில் வாழலாம்ன்னு வந்தேன்,'' என்றார்.

''அப்படிங்களா... ரொம்ப சந்தோஷம். ஆமா... உங்க பொருட்கள்ல வெறும் புத்தகம் தானே அதிகமா இருக்கு; இதெல்லாம் நீங்க படிச்சதா இல்ல படிக்கப் போறதா,'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மணியக்காரர்.

''படித்தவை, படிக்காதவை, மீண்டும் படிக்க வேண்டியவை என்று எல்லாம் தான் இருக்கு; கல்விக்குக் கரையேது...'' என்றார் புன்னகையுடன் தேவநாதன்.

அவர் பேசியது மணியக்காரருக்கு புரியவில்லை.

''சரிங்கய்யா நான் கிளம்புறேன்; உங்களுக்கு உதவி செய்ய, ரெண்டு பசங்கள அனுப்பறேன். தினம் எங்க வீட்டிலேர்ந்து, நீங்க கேட்டபடி உங்களுக்கு சாப்பாடு அனுப்பிச்சுடறேன்,'' என்று கிளம்பினார்.

மணியக்காரர் சென்ற சிறிது நேரத்தில், 16லிருந்து 20 வயது மதிக்கத்தக்க, இரு இளைஞர்கள் வந்தனர். கிராமத்துப் பிள்ளைகள் என்பதும், உழைப்பாளிகள் என்பதும் பார்த்ததும் தெரிந்தது.

''உங்க பெயர் என்ன தம்பிகளா?'' என்று கேட்டார்.

சற்று உயரமாக, மாநிறத்தில் இருந்தவன், 'கமல்...' என்றான். அவனுக்கு, 20 வயதிருக்கும். சிறியவன், 'விஜய்...' என்றான்.

'சினிமா நுழையாத இடங்களே கிடையாது போலிருக்கு...' என்று எண்ணிக் கொண்டார் தேவநாதன்.

மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ மற்றும் மின் விசிறி என்ற சில பொருட்களுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டு கட்டாக நிறைய புத்தகங்கள் இருந்தன.

''புத்தகங்களை எல்லாம் தனித் தனியாகப் பிரித்து, ஹாலில் உள்ள அலமாரியில் அடுக்கணும்,'' என்றார்.

அவர்கள் இருவரின் கண்களும், வியப்பில் விரிந்தன.

''இத்தனை புத்தகங்களும் நீங்க படிக்கவா... இல்ல படிச்சதா?'' என்று கேட்டான் கமல்.

''அப்புறமா சொல்றேன்... முதல்ல தமிழ், இங்கிலீஷ்னு தனித்தனியா பிரிச்சுக்குங்க,'' என்றவர்,''உங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் படிக்க வருமில்ல?'' என்று கேட்டார்.

''ஓ... வருமே... நாங்க ரெண்டு பேருமே பத்தாவது வரை படிச்சிருக்கோம்,'' என்றான் கமல்.

''நல்லது... பிரிச்சு அடுக்குங்க,'' என்றார் தேவநாதன்.

அவர்கள் அவ்வேலையை செய்து கொண்டிருந்த போது, ''தம்பிகளா... நீங்க ரெண்டு பேரும் மணியக்காரர் வீட்டிலேந்து சாப்பாடு வாங்கி வரது, வீட்டை சுத்தம் செய்றது, தோட்ட வேலை செய்றதுன்னு எனக்கு உதவியா இருக்கணும்; தினமும் இங்க வரணும்; உங்களுக்கு, மாசம், 3,000 ரூபா தர்றேன்...'' என்றார்.

இதைக் கேட்டதும், இருவர் முகங்களும் மலர்ந்தாலும், சட்டென்று வாடியது.

'மூவாயிரம் ரூபா தானா சார்... இங்க அக்கம் பக்கத்தில அரசியல் கூட்டம், போராட்டம்ன்னு போனாலே ஒரு நாளைக்கு, 500 ரூபா தராங்களே சார்...' என்றனர் அப்பட்டமாக!

''அதுவும் சரி தான்... ஆனா, அதுக்கு இன்னொரு வேலை செய்ய வேண்டி இருக்கும்; அதுவும் செய்ய ஆரம்பிச்சீங்கன்னா, கூட ஒரு, 500 ரூபா தரேன்,'' என்றார்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

''என்ன வேலை சார்?'' என்றான் கமல்.

''அப்புறமா சொல்றேன்,'' என்றார் தேவநாதன்.

''எங்களால முடிஞ்சாத்தான் செய்வோம்,'' என்றான் விஜய்.

''உங்களால முடியும்; சரி... கமல் நீ போயி மணியக்காரர் வீட்டிலிருந்து சாப்பாட்டு வாங்கி வா... விஜய் நீ தமிழ், இங்கிலீஷ்ன்னு நியூஸ் பேப்பர் வாங்கிட்டு வா,'' என்றார்.

''சார்... இங்க நியூஸ் பேப்பர் வராது; மயிலாடுதுறை போகணும். அது, இங்கிருந்து,

5 கி.மீ., தூரத்துல இருக்கு,'' என்றான் விஜய்.

''சைக்கிள்ல போ...''

''என்னென்ன பேப்பர் வாங்கணும் சார்?'' என்று கேட்டான்.

''இந்து, எக்ஸ்பிரஸ், தினமலர், தினமணி,'' என்றார்.

''எழுதிக் கொடுத்திடுங்க சார்,'' என்றான் தலையைச் சொறிந்தபடி!

இப்படித்தான் ஆரம்பித்தது ஓய்வு பெற்ற பேராசிரியர் தேவநாதனின் கடைசி கால வாழ்க்கை. இதே பசுமலை கிராமத்திலிருந்து சென்னைக்கும், பின், மும்பைக்கும் பயணமான அவரது வாழக்கையில் மிஞ்சி இருப்பது, அவரது அறிவும், சிறு வயது முதல் துணையாக வந்த புத்தகங்களும், அவர் சம்பாதித்துச் சேர்த்த பணமும் தான்.

மும்பை கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், அவருக்கு அஞ்சலியின் நட்பும், காதலும் கிடைத்தது; இருவரும் மணம் புரிந்து கொண்டனர். ஆனால், விதி, அஞ்சலியை ஒரு சாலை விபத்தில் பறித்தது. அதன்பின், அவர் வாழ்க்கைத் துணையாக வேலையும், புத்தகங்களுமே அமைந்தன.

'ஓய்வுக்குப் பின் என்ன செய்வது...' என்ற கேள்வி எழுந்தபோது, 'தான் பிறந்த மண்ணிலேயே மறைய வேண்டும்...' என்று தோன்றியது.

அதன் விளைவே, அவர் பசுமலைக்குக் குடிபெயர்ந்தது. இன்று அவரையோ, அவரது மூதாதையர்களையோ தெரிந்த எவரும், அக்கிராமத்தில் இல்லை; அதற்காக, அவர் வருந்தவும் இல்லை. அவர் ஆரம்பித்திருப்பது, அவரது வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை. அவர், அதை, தான் விரும்பிய விதத்தில் முடிக்கவே விரும்பினார்.

ஒரு மாதத்தில் தேவநாதனின் வருகை, பசுமலை கிராம மக்கள் மத்தியில், பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

சுகாதாரம், நல்ல பழக்க வழக்கங்கள், கவலைகளை இறக்குவது என்று பலரும், வயது பேதமின்றி அவரிடம் வந்து பேசினர். அத்துடன், சிறு சிறு செலவுகளுக்கு அவரிடம் கடனும் கிடைத்தது.

அக்கிராமத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் அவரிடம் வந்து கல்வி பற்றிய, விளக்கங்களை பெற்றுச் சென்றனர்.

சிறுவர்கள் அவரை, 'தாத்தா' என்றும், இளைஞர்கள், 'சார்' என்றும், 'ஐயா' என்றும் மரியாதையோடு அழைத்தனர்.

பெரும்பாலும் ஏதாவது படித்தவாறும், எழுதியவாறும் இருப்பார்; சில சமயங்களில், படம் வரைவார்.

கமல், விஜய் இருவரும் அவருக்கு வலது மற்றும் இடது கைகள் ஆனது போல, பல இளம் பருவத்தினர்களும் அவருக்கு நெருக்கமாயினர்.

அன்று, புத்தகம் படித்துக் கொண்டிருந்த தேவநாதன், தன் மூக்கு கண்ணாடியைக் கழற்றி, தலையை பிடித்தவாறு இருக்கையில் சாய்ந்தார்.

தோட்ட வேலையை முடித்து உள்ளே வந்த கமல், அவரது முகத்தைப் பார்த்து, ''என்ன சார்... தலைவலியா, காபி போட்டுக் கொண்டு வரவா?'' என்று கேட்டான் அக்கறையுடன்!

'வேண்டாம்' என்பது போல் தலையசைத்தவர், அவனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். கண்களை மூடி, நாற்காலியில் சாய்ந்திருந்தவரை, கவலையுடன் பார்த்தான் கமல்.

உடம்பு சரியில்லையோ என நினைத்தபடி, ''சார்...'' என்றான் மெதுவாக!

தேவநாதன் கண்களைத் திறந்த போது, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்து பதறி, ''என்ன ஆச்சு சார்... ஏன் அழறீங்க...'' என்றான் பதட்டமாக!

புன்னகையுடன் அவன் தோளைத் தட்டி, ''வயசாயிருச்சுல்ல... கண்ணுல புரை வர ஆரம்பிச்சிருக்கு. அதனால தான் என்னால படிக்க முடியல. முயற்சித்து படிச்சா கண்ணுல இருந்து தண்ணி வருது,''என்றார்.

''டாக்டர்கிட்ட காட்டுங்க சார்...''

''காட்டிட்டேன்; அது, நல்லா முற்றியதும் தான் எடுப்பாங்களாம். கமல்... எனக்கு படிக்க கொஞ்சம் சிரமமா இருக்கு... நீ எனக்கு ஒரு உதவி செய்வியா?'' என்று கேட்டார்.

''சொல்லுங்க சார்...''

''தினம் நீயும், விஜய்யும் ஒரு ரெண்டு மணி நேரம் நான் கொடுக்கிற புத்தகத்தை, உரக்க படிச்சுக் காட்டணும்,'' என்றார்.

''அவ்வளவு தானே... தமிழ்ப் புத்தகம்ன்னா சரி... இங்கிலீஷ் படிக்க வராதுங்களே...'' என்றான்.

''இங்கிலீஷ் போகட்டும்... அதை பின்னால பாத்துக்கலாம். தமிழ் படிப்பியா... அப்படியானா, நான் அப்ப சொன்னது போல, உங்கள் இரண்டு பேருக்கும், 500 ரூபா கூடுதலாக சம்பளம் தர்றேன்,'' என்றார்.

''அவ்ளோ தானே சார்... கண்டிப்பா படிச்சுக் காட்டுகிறேன்,'' என்றான்.

முதலில் படிக்கத் துவங்கியது, தினமலர் - வாரமலர் இதழின் சிறுகதைகள், கட்டுரைகள்! படிக்கவும், புரிந்து கொள்ளவும், சுலபமாக இருந்தன.

கமல் உற்சாகமாகச் சொல்லி விட்டானே தவிர, அவர் அதற்கு பின் தந்த, ராஜாஜி எழுதிய ராமாயணத்தை அவனால் முறையாக பதம் பிரித்துப் படிக்க முடியவில்லை. சில வடமொழிச் சொற்கள், வாயில் நுழைய மறுத்தன.

'என்னங்க சார்... இவ்வளவு கஷ்டமா இருக்கு...' என்றனர்.

'நீ படிக்கும்போது நான் தான் திருத்துறேனே... அப்படித்தான் இருக்கும்; கொஞ்ச நாள்ல சரியாப் போய்டும்...' என்று கூறியவர், தமிழ் மற்றும் வடமொழி எழுத்துகளை சரியாக உச்சரிக்க பயிற்சி தந்தார்.

இதனிடையில் குட்டிக் குட்டி கதைகளாக அமைந்த ராஜாஜியின் ராமாயணமும், மகாபாரதமும் அவர்கள் மத்தியில் கொஞ்சம் ஆர்வத்தை தூண்டியது.

சில கட்டங்களில், அவர்களே அந்தப் பாத்திரங்கள் பேசுவது போல, உணர்ச்சியுடன் படிக்கத் துவங்கினர். இவைகள் கதைகள் என்பதாலும், உரக்க வாசிப்பதாலும் முதலில் குழந்தைகள் வர ஆரம்பித்தனர். பின், பெரியவர்கள் வந்து, இவர்கள் படிப்பதைக் கேட்கத் துவங்கினர்.

இவர்கள் படிப்பதையும், மற்றவர்கள் கேட்டு ரசிப்பதையும் கண்டு, இதர பையன்கள், பெண்கள், ஏன் நடு வயதினர் கூட, வலிய வந்து படிக்க ஆரம்பித்தனர்.

சிறிய கதைகளில், கட்டுரைகளில் துவங்கிய இந்த பழக்கம், மெதுவாக தேவநாதனின் நிலவறையிலிருந்த பல தமிழ்ப் புத்தகங்கள், பசுமலை கிராமத்து மக்கள் மத்தியில் அரங்கேறின.

தடங்கல்களுடன் துவங்கிய இந்த எளிய மக்களின் படிப்பு, நாளடைவில் திருத்தப்பட்டு, தெளிவு பெற்றது. அது, அவர்களின் பேச்சில், எண்ணங்களில் வெளிப்படத் துவங்கியது.

இப்போதெல்லாம் தேவநாதன் தானே படிப்பதோ, எழுதுவதோ இல்லை.

அக்கிராமத்து இளைய தலைமுறையினர், அவருக்கு எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருந்தனர்.

'இளம் பத்திரிகையாளர்கள் தேவை' என்ற விளம்பரத்தைப் பார்த்து, விண்ணப்பம் செய்து அனுப்பினான் கமல். சிறிது நாட்களில், தஞ்சையில் நடக்கும் நேர்முகத் தேர்விற்கு, அவரிடம் வந்து வாழ்த்துப் பெற்று சென்றான்.

அன்று, மிகுந்த மலர்ச்சியுடன் வந்த கமல், ''என்னைத் தேர்ந்தெடுத்துட்டாங்க சார்... அடுத்த மாசம் சென்னையில பயிற்சியாம்...'' என்றான் மகிழ்ச்சியுடன்!

''எழுத்துத் துறையில் பிரவேசிக்க வேண்டுமென்ற உன் ஆசை, இன்று நிறைவேறி விட்டது,'' என்றார்.

''அது உங்களால் தான்...''

''என்னாலயா?''

''ஆமாம்; உங்களுக்குப் படிச்சுக் காட்ட ஆரம்பிச்சதிலிருந்து தான், எனக்கு எழுதணும், நிறையப் படிக்கணும்ங்ற ஆசை வந்துச்சு; இப்ப, நான் ஊரை விட்டுப் போனாலும், உங்களுக்கு படிச்சுக் காட்ட நிறைய பசங்க வந்துட்டாங்க,'' என்றான்.

''அவசியமில்ல... நானே படிச்சுப்பேன்,'' என்றார் சிரித்தபடி!

''உங்க கண் ஆபரேஷன் இன்னும் நடக்கலயே... எப்படிப் படிப்பீங்க?'' என்றான் கவலையுடன்!

தேவநாதன் அவன் அருகில் வந்து, அவன் கைகளைப் பற்றி, ''நானா உங்ககிட்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்து, 'இதைப் படி'ன்னு சொன்னா, நீ மனசிருந்தாத்தான் படிப்பே இல்லன்னா வச்சுட்டுப் போயிடுவே. ஆனா, எனக்கு உதவி செய்ததன் மூலம், உனக்கு வருமானமும் கிடைச்சதால, நீயும், விஜய்யும் படிக்க ஆரம்பிச்சீங்க... நீங்க படிக்கிறத கேட்க, மத்தவங்களும் வந்தாங்க. அப்புறம் தானும் படிக்கிறேன்னு வலிய முன் வந்தாங்க.

''இப்ப என்னிடம் உள்ள புத்தகங்கள எல்லாம் படித்து ரசிக்கணும்ங்கற ஆசை உங்கள்ல பலருக்குத் தானாகவே வந்துருச்சு. நான் எதிர்பாத்தது இதைத் தான். புத்தங்கள் தான் நமக்கு உலகத்தை அறிமுகப்படுத்தும் வாசல். அதை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்திட்டேன்,'' என்றார் உணர்ச்சியுடன்!

''இருந்தாலும் உங்க ஆபரேஷன்...'' என்று இழுத்தான் கமல்.

சிரித்தபடி, ''என் கண்ணுல ஒரு கோளாறும் இல்ல; உங்களப் படிக்க வைக்கிறதுக்காக நான் சொன்ன பொய் அது,'' என்றார்.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த விஜய், அவரை அதிசயமாகப் பார்த்து, ''என்ன சார்... இப்படி பொய் சொல்லி எங்களப் பயமுறுத்திட்டீங்களே...'' என்றான் செல்ல கோபத்துடன்!

அவர்களைக் கனிவுடன் பார்த்து, ''பலருக்கு நல்லது நடக்கும்ன்னா ஒரு பொய் தப்பில்லன்னு சொல்லியிருக்காங்க. அது யார் தெரியுமா?'' என்று கேட்டார்.

'தெரியும் சார்...' என்றனர் இருவரும் கோரஸாக!

''இதேபோல இங்கிலீஷ் புத்தகங்களையும் படிக்க வையுங்க சார்...'' என்று ஆர்வத்துடன் சொன்னான் விஜய்.

''அதுதான் என் அடுத்த வேலை,'' என்றார் மகிழ்ச்சியுடன்!

வெளியே செல்லத் திரும்பிய இருவரும், ஏதோ நினைத்து கொண்டவர்கள் போல, அவரைப் பார்த்து, 'சார்... நாங்க உங்களக் கட்டிக்கலாமா...' என்று கேட்டனர் குரல் தழுதழுக்க!

கண்களில் நீர் ததும்ப, அவ்விருவரையும் அணைத்துக் கொண்டார் தேவநாதன்.



தேவவிரதன்






      Dinamalar
      Follow us