
இந்தியாவில் தற்போது, 15 நகரங்களில், மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மேலும், போபால், சண்டிகர், இந்தூர், கான்பூர், லூதியானா, நாக்பூர், நாசிக், பாட்னா, புனே, சூரத், விசாகப்பட்டினம் மற்றும் கவுகாத்தி உட்பட பல இடங்களில் மெட்ரோ ரயில் வேலைகள் துவங்கியுள்ளன.
இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பயணம், கோல்கட்டாவில், 1984ம் ஆண்டு துவங்கப்பட்டது. மேலும், டில்லியில், டிச., 24, 2002லும், பெங்களூரில், அக்., 20, 2011லும் துவங்கப்பட்டது. சென்னையில், நவ., 1, 1995ல் துவக்கப்பட்டாலும், தற்போது தான் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 20 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊர்களுக்கு, மெட்ரோ ரயில் கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டது.
குர்கானில், மெட்ரோ ரயில் சேவை, நவ., 14, 2013ல் துவக்கப்பட்டது. மத்திய அரசு, 2009ல், 20 ஆயிரம் கோடி ரூபாயை மெட்ரோ ரயில் சேவைக்காக ஒதுக்கியது.
மும்பை மோனோ ரயில், தன் பயணத்தை, பிப்., 2014ல் துவக்கியது. மெட்ரோ ரயிலுக்கு பெரும்பாலும் கோச்சுகளை செய்து தருவது பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் தான். இது தவிர, ஆல்ஸ்டம் மற்றும் பொம் பார்டர் போன்ற, தனியார் நிறுவனங்களும் மெட்ரோ ரயில் கோச் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மெட்ரோ, ஆல்ஸ்டம் நிறுவனத்திடம் தான். 168கோச்சுகளை ஆர்டர் செய்துள்ளது.
கோல்கட்டாவில், மெட்ரோ ரயில் மூலம் ஆறு லட்சம் பேர் தினமும் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோவில், 55 சதவீதம் தரைக்கு அடியிலும், மீதி உயர்த்தப்பட்ட பகுதியிலும் பயணிக்கும்.
பெங்களூரு மெட்ரோ ரயில், தற்போது சராசரியாக, மணிக்கு, 30 கி.மீ., வேகத்தில் செல்கிறது. இன்றைய பரபரப்பான உலகத்தில், மெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில்கள் ஏராளமாய் வந்து, பயணிகளின் பயண நேரத்தையும், செலவையும் குறைத்தால் மகிழ்ச்சி தானே!
- ஜோல்னா பையன்.

