PUBLISHED ON : ஜூன் 10, 2012

'பார்பி டால்' என்ற பெயர், உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். அமெரிக்கா வின் பிரபலமான பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'பார்பி' என்ற பெண் உருவம் கொண்ட பொம்மை, கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில், பல்வேறு தோற்றங்களில், இன்னும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு, பார்பி பொம்மை மீது, அதிக விருப்பம்.
இந்த பொம்மையின் தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த, வலெரியா லக்யானோவா என்ற இளம் பெண், அந்த பொம்மை போலவே, தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். உணர்ச்சிகளற்ற முகம், பிளாஸ்டிக் தோற்றம், அகன்ற மார்பகம், மிக குறுகிய இடை, பிளாஸ்டிக்கை போன்ற முடி அலங்காரம் என, அச்சு அசலாக, உண்மையான பார்பி போலவே தோற்ற மளிக்கிறார்.
இந்த தோற்றத்தை அடைவதற்காக, பல மாதங்கள் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தன் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப் படங்களை பார்த்த சிலர், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம், அந்த பெண், இந்த தோற்றத்தை அடைந்துள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர். மற்றொரு தரப்பினரோ, இந்த பெண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ஜோடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
— ஜோல்னா பையன்.
