PUBLISHED ON : ஜூன் 10, 2012

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமையை, 'ஏ-380' விமானம் பெற்றுள்ளது. இவ்விமானத்தில், ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில், இந்த விமானம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரமாண்ட விமானத்தில் பயணிப்பது, பயணிகளுக்கு, புதுவித அனுபவத்தை தரும்.
இதை மையமாக வைத்து, சீனாவின் சோங்கிங் நகரத்தில், ஒரு அசத்தலான உணவு விடுதியை கட்டியுள்ளனர். 'ஏ-380' விமானத்தின் உட்புற தோற்றம் எப்படி இருக்குமோ, அதேபோல் இந்த உணவு விடுதியை வடிவமைத்துள்ளனர். உணவு பரிமாறுபவர்கள் உட்பட, இந்த உணவு விடுதியில் பணியாற்றும் அனைத்து ஊழியர் களும், விமான சிப்பந்திகள் அணிந்திருப்பது போன்ற உடைகளை அணிந்துள்ளனர். விமானப் பணிப் பெண்கள் பேசுவது போல், கனிவாக பேசுவதற்கும், இவர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
ஜன்னல், இருக்கை, கீழே விரிக்கப்பட்டுள்ள தரைக் கம்பளம், விளக்கு வசதி என, இந்த உணவு விடுதியில் உள்ள அனைத்து வசதிகளுமே, 'ஏ-380' விமானத்தில் உள்ளது போன்றே, வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. விமானத்தில் பயணிப்பவர்களுக்கு, குறிப்பிட்ட சில உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்படும். இந்த உணவு விடுதியிலோ, சைனீஸ், வெஸ்டர்ன் உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளும், சுடச் சுட பரிமாறப் படுகின்றன. 'ஏ-380' விமானத்தின் உட்புற தோற்றம் எப்படி இருக்கும் என, காட்டுவதற்காக, மாணவர்களையும், சில பள்ளி நிர்வாகங்கள் அழைத்து வருவதால், இந்த உணவு விடுதியில், எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிகிறது.
— ஜோல்னா பையன்.
