குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்
குவா குவாவில் துவங்கிய காதல், திருமணத்தில் முடிந்த ஆச்சரியம்
PUBLISHED ON : மார் 18, 2012

முதல் பார்வையிலேயே காதல் என்பது, அரிதாக நடக்கும் விஷயம். அப்படியே, முதல் பார்வையிலேயே காதல் வந்தாலும், அது திருமணத்தில் முடிவது மிகவும் அரிது. முதல் பார்வை காதல் என்பது, எந்த சூழலில், எப்படி ஏற்படும்? பார்ட்டி, பீச், திருமணம், சினிமா என, ஏதாவது ஒரு பொது இடத்தில், டீன் ஏஜ் பருவம் கொண்ட, இருவர் சந்திக்கும் போது, முதல் பார்வையிலேயே காதல் வயப்படலாம்.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடிக்கு, முதல் காதல் பார்வை எங்கு ஏற்பட்டது தெரியுமா? சரியாக, 22 ஆண்டுகளுக்கு முன், வெஸ்ட் மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பிரசவ மருத்துவமனையில்...
இந்த இருவரும், பிரசவ மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்கச் சென்றபோது, காதல் வயப்பட்டனரோ என நினைத்து விடாதீர்கள்... இருவரும் பிறந்ததே அப்பொழுது தான். ரிச்சர்ட், கயலேக் புருக்ஷ் என்பது, அந்த காதல் ஜோடியின் பெயர்.
இருவரது அம்மாக்களும், 1989ல், பிரசவத்துக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ரிச்சர்ட், ஏப்., 22ல் பிறந்தார். ரிச்சர்ட்டின் தாயாரை, கூடுதலாக சில நாட்கள் தங்கியிருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அப்போது தான், மூன்று நாட்கள் கழித்து, அதாவது, ஏப்., 25ம் தேதி, ரிச்சர்ட்டின் தாயாருக்கு அருகில் <உள்ள படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் தான், கயலேக். பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, கயலேக்கின் பார்வை, அருகில் <உள்ள தொட்டிலில் படுத்திருந்த ரிச்சர்ட் மீது பதிந்து விட்டது போலு<ம்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, இருவரும் பிரிந்து சென்று விட்டாலும், ஒரே ஊரில் தான், இருவரது குடும்பத்தினரும் வசித்தனர். இதனால், குழந்தை பருவத்தில், அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் படித்ததும், ஒரே பள்ளியில் தான்.
நல்ல அறிமுகம் இருந்தாலும், இருவருக்கும் இடையே, பெரிய அளவிலான ஈர்ப்பு எதுவும் இல்லை. பள்ளியில் ஒரு நாள், தவறு செய்ததற்காக கயலேக்கை, ஆசிரியர் அடித்து விட்டார். பள்ளியில் இருந்து வெளியில் வந்த கயலேக், தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க, அங்கு வந்த ரிச்சர்ட், அவரது கண்ணீரை துடைத்து, 'கவலைப்படாதே...' என, அன்புடன் ஆறுதல் கூறினார்.
இதன்பின்னரே, இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. ஒருவரை விட்டு, ஒருவர் இனி பிரிந்திருக்க முடியாது என்ற அளவுக்கு, இருவரும் காதல் வாயப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கயலேக்கின் பிறந்த தின விழாவின்போது, அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து, தன் காதலை தெரிவித்தார், ரிச்சர்ட். இருவரது குடும்பத்தினருமே, இந்த காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொட்டிலில் துவங்கிய இவர்களது காதல் பந்தம், திருமணம் வரை தொடர்வதை பார்த்து, பலருக்கும் ஆச்சரியம். கயலேக் கூறுகையில், 'ரிச்சர்டுக்கு என்னைவிட பொருத்தமான மனைவி, இந்த உலகில் வேறு யாரும் இல்லை. அதே போல், எனக்கு பொருத்தமான கணவர், ரிச்சர்டை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. பிறப்பிலேயே காதல் வயப்பட்டு விட்ட எங்களுக்கு, கெமிஸ்ட்ரி ஒத்துப் போவது பெரிய விஷயமில்லை. ஆனாலும், கருவறையில் துவங்கிய எங்கள் காதல், கல்லறை வரை நீடிக்க வேண்டும் என்பது தான், எங்களின் ஆசை...' என்கிறார், கயலேக். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் காதலின் ஆழம் தெரிகிறது.
***
எஸ். ரேவதி
