தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மறக்கத் தெரிந்த மனமே!

மறக்கத் தெரிந்த மனமே!

மறக்கத் தெரிந்த மனமே!


PUBLISHED ON : ஆக 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மேற்கு மாம்பலம் வெறிச்சோடி கிடந்தது. மக்கள் அனைவரும் அவரவர் வீட்டு தொலைக்காட்சியின் முன் குழுமியிருந்தனர். கையிலிருந்த ரிமோட்டால் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த மரகதமணி, அரசு அலுவலகம் ஒன்றில் கண்காணிப்பாளராக பணி புரிகிறார். அப்பாவின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்க முயற்சித்தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மகன் நிகிலேஷ்.

முரண்டினார் மரகதமணி.

''ஏன்ப்பா... இந்த அழிசாட்டியம் செய்றீங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல சோனி சிக்ஸ்ல, பிரேசில்ல நடக்கிற, 'வேர்ல்டு கப் புட்-பால் ஹைலைட்ஸ்' போடுவான்... அந்த சேனலையாவது போடுங்க; நேத்து ராத்திரி லைவ்வா பாக்க வேண்டிய இரண்டு மேட்ச்களோட, 'ஹைலைட்'சையாவது பாப்போம்.''

அரைகுறை மனதுடன் சோனி சிக்ஸ் சானலுக்கு தாவினார் மரகதமணி. சமையற்கட்டிலிருந்த மரகதமணியின் மனைவி அல்லிக்கொடி, தேநீர் கோப்பைகளை இருவரிடமும் நீட்டி, ''டீ குடிச்சிக்கிட்டே ரிமோட் போர் நடத்துங்க,'' என்றாள்.

கால்பந்தாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த இருவரையும், வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கலைத்தது.

''டேய் நிகி... போயி கதவைத் திற...''

''நீங்க தானே இந்த குடும்பத்து தலைவர்... நீங்க போய் கதவைத் திறங்க,'' என்றான் நிகிலேஷ்.

அதற்குள் சத்தம் கேட்டு வந்த அல்லிக்கொடி, இருவரையும் முணுமுணுப்பாய் திட்டியபடி கதவைத் திறந்தாள்; அங்கே, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றிருந்தார். நடிகர் கவுண்டமணியின் அண்ணனைப் போல் இருந்த அவர் வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார்; எண்ணெய் பூசப்பட்ட வழுக்கைத் தலை, மாலை வெளிச்சத்தில் பளபளத்தது.

''யார் நீங்க... உங்களுக்கு என்ன வேணும்?''

''நானா... நான் யாருங்கறதை தான் தேடிட்டு இருக்கேன்; இத்தன வயசாகியும் எனக்கு யாரும் பேர் வைக்கல. உன் கணவர கூப்பிடு; அவரத்தான் பாக்க வந்திருக்கேன்,''என்றார்.

முகம் வெளிறிய அல்லிக்கொடி, ''ஏங்க... இங்க வந்து பாருங்க... யாரோ ஒருத்தர் வந்து முன்னுக்கு பின் முரணா பேசிக்கிட்டு இருக்காரு,'' என்றாள்.

ரிமோட்டை மகனிடம் தந்து, வெளியே வந்தார் மரகதமணி. வாசலில் நின்றிருந்தவரை காலிலிருந்து தலை வரை ஆராய்ந்தவர், ''என்ன விஷயமா என்னை பாக்கணும்?'' என்று கேட்டார்.

''மோடி தான் அனுப்பிச்சார்; பணவீக்கத்தையும், விலைவாசி ஏற்றத்தையும் குறைக்க உங்ககிட்ட யோசனை கேட்டுட்டு வரச் சொன்னார்,'' என்றார்.

மரகதமணி சிரித்தவாறே, ''என்ன பெரியவரே... விளையாடுறீங்களா... உண்மையில நீங்க யாரு?''

''புலிகள் வாழுற காட்ட, கொஞ்சம் கொஞ்சமா கபளீகரம் செய்திட்டே வறோம்; அதனால தான் அதுங்க அடிக்கடி மக்கள் வாழற இடத்துக்குள்ள புகுந்திருதுங்க...''

''நான் என்ன கேக்கறேன்... நீங்க என்ன பதில் சொல்லிட்டு இருக்கீங்க?'' என்றார் எரிச்சலுடன் மரகதமணி.

''நான் தான் கடவுள்ன்னா நம்பிடவா போறீங்க?''

சொன்னவர் ஒரு இடத்தில் நில்லாது, அங்கும் இங்கும் நகர்ந்து படபடத்தார். கை, கால் விரல்கள் நடுங்கின; உதடுகள் துடித்தன; ரோமக்கால்கள் சிலிர்த்தன. இரு நெற்றிப்பொட்டிலும் இரு கட்டை விரல்களை பதித்து, தலையை நசுக்கிக் கொண்டார்.

''யார் அனுபுச்சு நான் உங்கிட்டே வந்தேன்... ஈராக் பயங்கரவாதிக என்னை அனுப்ச்சிருப்பாங்களோ... ஐயோ... யோசிக்க யோசிக்க, என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே... நான் யார்; எதற்கு உங்க வீட்டுக்கு வந்தேன்? நீங்க யாரு? நீங்க எப்படி இந்த வீட்ல இருக்கீங்க? இப்ப ராத்திரியா, பகலா?'' என்று அடுக்கடுக்களாய் கேள்விகளை கேட்டார்.

''ஏன் கேக்கறீங்க?''

''ராத்திரின்னா பேய் நடமாட்டம் இருக்கும்; நீங்க ஆவியா இருக்க கூட வாய்ப்பிருக்கிறது...''என்று சம்பந்த சம்பந்தமில்லாமல் பேசினார்.

அல்லிக்கொடி கணவனை சுரண்டி. ''ஏங்க... இந்த பெரியவரு பைத்தியம் போலிருக்கு,'' என்றாள்.

மனதுக்குள் கிளர்ந்த கோபத்தை அடக்கி, சாந்த முகம் காட்டிய மரகதமணி, பெரியவரை கைத்தாங்கலாய் கூட்டிப்போய், ஒரு சேரில் அமர வைத்தார். ''பெரியவறே... சூடா ஒரு கப் டீ குடிக்கிறீங்களா?'' என்று கேட்டார்.

வந்தவர் தலையாட்டினார்; மரகதமணி மனைவிக்கு சமிக்ஞை செய்தார். அல்லிக்கொடி, முகவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு போனாலும், சிறிது நேரத்தில் தேநீர் வந்தது. வந்தவர் தேநீரை உறிஞ்சிக் குடிக்கத் தெரியாமல் திணறினார். ஊதி ஊதி குடிப்பது போல செய்து காட்டினார் மரகதமணி. தட்டுத் தடுமாறி தேநீரை உறிஞ்சியவர், அழ ஆரம்பித்தார்... ''நான் யாருன்னு எனக்குத் தெரியும்; ஆனா, சொல்ல முயற்சிக்கறப்ப வார்த்தைக தொண்டை வரை வந்து, காணாம போயிருது. யோசிக்க யோசிக்க, மூளை கொதிநிலைக்கு போய்டுது; நாக்கு, கீழ் அண்ணத்துடன் ஒட்டிக்கிறது,'' என்றார்.

'இந்த பெரியவருக்கு தலையில, கிலையில அடிபட்டு அம்னீஷியா வந்திருக்குமோ! மனதளர்ச்சியினால் பைத்தியம் ஆகியிருப்பாரோ? அல்ஜைமர் எனும் மறதி நோயோ...' என, பலவாறாக நினைத்து, வந்தவரின் சட்டையை கழற்றச் சொல்லி, மார்பில் பச்சை குத்தியிருக்கிறாரா என, ஆராய்ந்தார் மரகதமணி. பின்னந்தலை கேசத்திற்குள் கைவிட்டு ஏதாவது காயம், இருக்கிறதா என, துழாவினார்.

மனைவி வந்து காதில் கிசுகிசுத்தாள்... ''வந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா தெரியுறாரு; வீட்டை விட்டு வெளியே துரத்தாம, உள்ள உட்கார வச்சு, தடவிப்பிடி வைத்தியம் செய்திட்டிருக்கீங்க...'' என்றாள் எரிச்சலுடன்.

''சும்மா இரு... எல்லாம் எனக்குத் தெரியும்,'' என்றவர், ''பெரியவரே... பொங்கல் சாப்பிடுறீங்களா?'' என்று கேட்டார்.

மையமாக தலையாட்டினார் பெரியவர். ஒரு தட்டில் வெண் பொங்கலும், சாம்பாரும் வந்தது; சாப்பிடத் தெரியாமல் திணறினார். பொங்கலை சாம்பாருடன் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக்கி ஊட்டி விட ஆரம்பித்தார் மரகதமணி. சாப்பிட்டவரின் வாயைத் துடைத்து, தண்ணீர் புகட்டினார்.

''நிகிலேஷ், கெஸ்ட் ரூம்ல இருக்கிற படுக்கையை தூசி தட்டிப் போடு; தாத்தா கொஞ்சம் தூங்கி எந்திரிக்கட்டும்,'' என்றார். அவன் முணுமுணுத்தபடி போனான்.

தந்தையும், மகனும் பெரியவரை கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று படுக்க வைத்தனர்.

மறுநாள் —

''நிகிலேஷ்... பெரியவர அவங்க சொந்தகாரங்ககிட்ட சேர்க்கிற வரைக்கும், அவர் இங்க தான் இருப்பார்; நீ, அவரை சொந்த தாத்தாவை போல பாத்துக்கணும்,''என்றார்.

''வேலியில போகுற ஓணானை பிடிச்சு, மடியுல போட்டுக்கறீங்க... அப்புறம் குத்துதே, குடையுதேன்னு புரளப் போறீங்க,'' என்றாள் அல்லிக்கொடி.

பெரியவரை குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்தார் மரகதமணி.

''பெரியவருக்கு என்ன பெயர்டா வைக்கலாம்?'' என்று மகனிடம் கேட்டார்.

''பிரேசில் அணி வீரர், நெய்மர் பேர வைப்போம்ப்பா.''

பெரியவரை பார்த்து மரகதமணி, ''இன்னையிலிருந்து உங்க பெயர் நெய்மர்; சரியா?'' என்றார்; அர்த்தம் புரியாமல் சிரித்தார் நெய்மர்.

''நிகிலேஷ், பெரியவர உன் மொபைல்ல ஒரு போட்டோ எடு; டேப் வச்சு உயரம், மார்பளவு எல்லாம் குறி. உடம்புல எந்த இடத்துலயாவது மச்சமோ, காயத்தழும்புகளோ இருக்கான்னு கண்டுபிடி...'' என்றார்.

''இதெல்லாம் எதுக்குப்பா?''

''விளம்பரம் கொடுக்கத்தான்... 'கீழ்க்கண்ட புகைப்படத்தில் இருக்கும் நபர், தற்சமயம் எங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்; அவரைக் காணாமல் தவிக்கும் உறவினர்கள், உடனே தொடர்பு கொள்ளவும்...' அப்படின்னு முகவரியும், கைபேசி எண்ணும் கொடுத்து, பத்திரிகையில விளம்பரம் கொடுத்தா துள்ளிட்டு ஓடி வந்திரமாட்டாங்க!''

'இந்தக் காலத்தில இப்படி ஒரு அசடா...' என்ற அர்த்தத்தில், தந்தையை வெறித்து பார்த்தான் நிகிலேஷ்.

''போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், இவரோட புகைப்படத்த கொடுத்து, இவர் எங்க பாதுகாப்புலதான் இருக்கார்ன்னு தகவல் சொல்லுவோம்; காவல்துறை ஏற்கனவே அவரை தேடிக்கிட்டு இருந்தா நம்ம வேலை சுலபமா முடிஞ்சுடும்ல்லே!''

''போலீஸ்காரன் நம்ம மேல, 'கிட்நாப்' கேஸ் போட்டு பணம் பறிக்கப் போறான்,'' என்றான் நிகிலேஷ்.

''போலீஸ்காரங்க எல்லாருமே மோசமானவங்க இல்லடா; அவங்கள்ல சொக்கத் தங்கங்களும் இருக்றாங்க.''

''பெரியவருக்கு மட்டும் மூளை குழம்பிப் போகல; உங்களுக்கும் தான்ப்பா!''

''இன்னக்கு சாயந்திரம் நெய்மரை, நம் குடும்ப டாக்டரிடம் அழைச்சுட்டு போயி, செக்கப் செய்யணும்; ரத்தக்கொதிப்பு மற்றும் நீரழிவு நோய் இருந்தால், தேவையான மருந்துகளை வாங்கி கொடுப்போம்,'' என்றார்.

நெற்றியில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் நிகிலேஷ்.

தினமலர் பத்திரிகையில் வெளிவந்திருந்த விளம்பரத்தை கண்ணுற்றான் மாரிச்செல்வம். மனைவி, மகள்கள், இரு சகோதரன் என குடும்பத்தினரை கூவி அழைத்தான்...

''எல்லாரும் இங்க வந்து பாருங்க... நம்ம மறதி தாத்தாவோட போட்டோவ பத்திரிகையில போட்டிருக்காங்க; கிழடு நல்லா... ஷோக்கா நிக்குது. பதினைஞ்சு வருஷமா கிழவனோடயும், மறதி நோயோடயும் தினம் தினம் போராடி, வெறுத்துப் போயி ஒரு கட்டத்துல விஷ ஊசி போட்டு கொன்னுரலாமான்னு கூட வெறி வந்துச்சு. எல்லாரும் கூடி பேசி, ஒரு முடிவுக்கு வந்தோம். வித்தவுட் டிக்கெட்ல ரயில்ல, அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்ல ஏத்தி, சென்னைக்கு அனுப்பினோம். கிழம் இப்ப யார் கைல இருக்குன்றதை, இந்த விளம்பரத்தை பாத்து தெரிஞ்சிக் கிட்டோம்; மேற்கொண்டு என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க,'' என்று கேட்டான்.

'விளம்பரத்த கண்டும் காணாம விட்ரலாம்...' என்றனர் கோரஸாக.

''கிழடை வைத்திருக்கும் குடும்பத்தாருக்கு, ஒரு மொட்டைக் கடிதம் எழுதுவோம்,''என்றான் மாரிச்செல்வம்.

''எந்த மாதிரி?''

''மனிதாபிமானத்தை இதயத்தில், டன் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் மரகதமணிக்கு, எக்சின் வணக்கம். இந்த பொருள் படுதொல்லை என நினைத்து, வேண்டுமென்றே தொலைத்த பொருளை, மீண்டும் எங்களிடமே சேர்க்க முயற்சிப்பது சரியா?

''பெரியவருக்கு மறதி நோய் முற்றியுள்ளது; கூடுதலாக, ரத்த அழுத்தமும், சுகரும் உச்சபட்சமாக உள்ளன.

''மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து, பெரியவரை பராமரிக்க முடிந்தவரை பராமரிக்கவும் அல்லது ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடவும். இந்த ஒரு பெரியவரை பராமரிப்பது, பத்து கைக்குழந்தைகளை பராமரிப்பதற்கு சமம்.

''மனிதாபிமானம், ஒட்டு மொத்த மனித மனங்களிலிருந்து வெளியேறி, காய்ந்து வறண்டு விட்டது. அபூர்வமாய் உன்னிடம் மிஞ்சியிருக்கும் மனிதாபிமானம், எத்தனை நாளைக்கு நிலைக்கும் என, பார்ப்போம்.

''எங்களை தேட முயற்சிக்காதே; பெரியவரை எங்களிடம் சேர்ப்பித்து, எங்களை மீண்டும் நடைபிணம் ஆக்காதே... என்று ஒரு கடிதத்தை டைப் அடித்து, மதுரைக்கு போற ஆள்ட்ட குடுத்து, போஸ்ட் செய்யச் சொல்லுவோம்; எப்படி என் ஐடியா?''

'நல்ல ஐடியா; அப்படியே செய்வோம்...' என்றனர்.

தபால்காரர் கொடுத்த கடிதத்தை பிரித்து வாசித்தார் மரகதமணி. மனைவியும், மகனும் தலையை நீட்டி வாசித்தனர்.

''அடப்பாவிகளா... பெரியவர வேணும்மின்னே தொலைச்சிட்டு, இப்ப திரும்ப கொண்டு வந்து ஒப்படைச்சிடாதிங்கன்னு கெஞ்சியிருக்கீங்களேடா,'' என்ற அல்லிக்கொடி, ''பேசாம, பெரியவரை போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் ஒப்படையுங்க; சட்டப்படி, அவங்க ஏதாவது செய்யட்டும்,'' என்றாள்.

''அல்லிக்கொடி... உன்னையும், என்னையும் வளத்து ஆளாக்கின, உன்னோட அப்பாவும், என்னோட அப்பாவும் நடுத்தர வயசிலேயே அமர்நாத் யாத்திரை விபத்தில இறந்துட்டாங்க; அவங்களுக்கு செய்ய முடியாத சேவைய, நெய்மருக்கு செய்யப் போறேன். எனக்கு நீங்க ஒத்துழைக்காட்டாலும் பரவாயில்ல; தொந்தரவு கொடுக்காம இருங்க. என் கடைசி சொட்டு மனிதாபிமானம் காயுற வரை பெரியவர நானே பராமரிப்பேன்,'' என்று கூறிய மரகதமணி, உட்கார்ந்திருந்த பெரியவரை, பின்னால் இருந்து கட்டி அணைத்துக் கொண்டார்.

''என் பெயர் நெய்மர் தானேப்பா?'' என்று கேட்ட பெரியவர், ''எப்படி மறக்காம சொன்னேன் பாத்தாயா...'' என்றார் உற்சாகமாய்!

ஆர்னிகா நாசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us