PUBLISHED ON : ஆக 17, 2014

ஜி.சாந்தமூர்த்தி, கூசாலிபட்டி: படித்த இளைஞர் ஒருவர், கட்டட வேலைக்கு செல்கிறாரே...
கெட்டிக்காரர்; பிழைக்கத் தெரிந்தவர். கவர்னர் வேலை கிடைக்கும் என காத்திருந்து, தண்டச் சோறு சாப்பிடாமல், தினமும், 500 ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கிறாரே... பாராட்டத் தான் வேண்டும்!
பி.ரகு, பெண்ணாடம்: சமீபத்தில் படித்த விரசமில்லாத, 'ஏ' ஜோக் ஒன்று சொல்லுங்களேன்...
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அதிகாரி கேட்டார்... 'உங்கள் கணவர் இறந்து நான்கு வருடங்கள் ஆகி விட்டது என்கிறீர்களே... ஆனால், உங்கள் கையில் இரு சிறு குழந்தைகள் உள்ளனவே...' பொறுமையாக பதில் சொன்னார் அந்த பெண்... 'நான் இன்னும் சாகலியே...'
- எப்படி இருக்கு!
மா.கோமளம், ஒத்தக்கடை: விதண்டாவாதம் பேசுவோரை திருத்துவது எப்படி?
நேரத்தையும், சக்தியையும் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள்? இப்படிப்பட்ட ஆசாமிகளை திருத்தவே முடியாது; இவர்களைப் பார்த்தாலே, 'அம்பேல்' ஆகிவிடுங்கள்!
பா.சதாசிவன், திருக்கோவிலூர்: பெண்களின் அழகு ஆண்களை சலனப்படுத்துவது போல், ஆண்களின் கவர்ச்சியான தோற்றம் பெண்களை சலனப்படுத்துமா?
இந்த பதிலை எழுதும் போது, என்னை பார்க்க வாசகி ஒருவர் வந்தார்; அவரிடம் உங்கள் கேள்வி அடங்கிய கார்டைக் கொடுத்து, பதில் கேட்ட போது கிடைத்த பதில், 'ஆமாம்!'
த.மீனாட்சிசுந்தரம், திருச்சிற்றம்பலம்: ஒரு குடும்பத்தை வழி நடத்திச் செல்ல, கணவன் - மனைவி இருவரில் யார் கல்வி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்?
கண்டிப்பாக மனைவி தான்; பெண் கற்கும் கல்வி, ஒரு குடும்பமே கல்வியறிவு பெற்றதற்கு சமம். ஆண் கற்ற கல்வி, அவன் சம்பாதிக்க மட்டுமே பயன்படுமே அன்றி, அவன் குடும்பத்துக்கு அதனால் பயனில்லை.
ஆ:இந்திரஜித், பரங்கிப்பேட்டை: விவாகரத்து கோரும் தம்பதிகள் அதிகரித்து வருவதாக தெரிகிறதே...
உண்மைதான்! பத்து ஆண்டுகளுக்கு முன், விவாகரத்து கேட்டு மும்பையில் வழக்கு தொடர்ந்த தம்பதிகளின் எண்ணிக்கை, 2,055தான்; இன்றோ, அந்த எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளதாக கூறுகின்றனர்.
கு.ஆதிகேசவன், சிங்கப்பெருமாள்கோவில்: நிரந்தர கொள்கை உடையோரை இன்று அரசியலில் காண முடியலையே...
ஏன் இல்லாமல்... எந்த கட்சி ஆட்சி அமைப்பது போல் இருக்கிறதோ, அதில் தம்மை இணைத்துக் கொள்பவர்கள் இருக்கின்றனரே... அவர்களது கொள்கை நிரந்தரமானது தானே!
