PUBLISHED ON : ஆக 17, 2014

சென்னை திரை அரங்கம் ஒன்றிற்கு படம் பார்க்க என்னை அழைத்துச் சென்றிருந்தார் லென்ஸ் மாமா. மிக நீண்ட ஆண்டுகளுக்கு பின், படம் பார்க்க திரையரங்குக்கு சென்றேன். அது மதிய காட்சி; விடுமுறை தினம் கூட அல்ல. ஆனால், எக்கச்சக்கமான கல்லூரி காளையர், கன்னியர்!
படத்தின் பிரமாண்டத்தில் நான் பிரமித்து இருக்க, ஏதோ ஒரு பாடல் காட்சி திரையில் ஓட ஆரம்பித்த உடனே, முன் வரிசைகளில் அமர்ந்திருந்த கல்லூரி இளசுகள் எழுந்து ஆட ஆரம்பித்ததோடு நில்லாமல், நடைபாதைகளிலும், திரை அருகிலும் சென்று ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு சிலர், கல்லூரி மாணவியர் அமர்ந்திருந்த இருக்கைகளின் அருகே சென்று ஆட ஆரம்பித்தனர்.
விபரீதம் ஏதும் நடந்து விடாமல் இருக்க வேண்டுமே என, மனம் அடித்துக் கொண்டது.
இதனிடையே என் காதைக் கடித்த லென்ஸ் மாமா, 'எம் பக்கத்துலே உட்காந்திருக்கு பாரு... அந்தப் பொண்ணு கொஞ்சம் வேகமாத்தான் இருக்கு... லவ்வரோட கையை எடுத்து மடியிலே வைக்குது... அவன், 'வெடுக்'குன்னு இழுத்துக்கறான். திரும்பவும் இந்த பொண்ணு அவன் கையை எடுத்து வைக்கறதும், அவன் விலக்கிக்கிறதும் ஒரே கூத்துப்பா...' என்றார்.
'மாமா... படம் பார்க்க வந்தீங்களா, ஜோடிங்கள, 'வாட்ச்' பண்ண வந்தீங்களா... ஒழுங்கா படத்தைப் பாருங்க...' எனக் கூறி, படத்தில் கவனத்தை செலுத்தினேன்.
இடைவேளை!
'வா... பாப்கார்ன் சாப்பிடலாம்!' என்று கூறி, என்னை வெளியே அழைத்துச் சென்றார்.
கலர் கலராக உடை அணிந்த இளம் பெண்கள், 'ஸ்நாக்ஸ்' வாங்கிக் கொண்டிருப்பதையும், அவற்றை ருசித்துக் கொண்டிருப்பதையும் நோட்டம் விட்டபடி, பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டிருந்தார் மாமா.
அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் —
இரண்டு இளம் பெண்கள், 'ஸ்நாக்'சை ஏந்தியபடி அரங்கினுள் நுழையவும், ஒரு விடலை, அரங்கிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. கண நேரத்தில் அந்த பொறுக்கி, அவ்விரு பெண்களில் ஒருவருக்கு, 'அப்பர் பிஞ்ச்' கொடுத்து விட்டான்.
அப்பெண் பயத்தில் அலற, பாய்ந்து சென்று, அவன் சட்டையை கொத்தாகப் பிடித்து, விட்டேன் ஒரு அறை.
இக்காட்சியைக் கண்ட மாமா, ஜாக்கிசான் வேகத்தில் பாய்ந்து வந்து, அவனை கோழிக் குஞ்சைப் போல அமுக்கிப் பிடித்து, நாலு சாத்து சாத்தும் போதே, 'ஆ'வென கத்தினார்; அந்தப் பொறுக்கி, தன் கையில் இருந்த அரை பிளேடால், மாமா கையை ஒரு கிழி கிழித்து விட்டான்; பிடி தளர்ந்ததும், அரங்கை விட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.
- என்ன கொடுமை இது! ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியே வந்தால், என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இவர்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? இவர்கள் வீட்டுப் பெண்களையும், இவனைப் போன்ற இன்னொருவன் இதே போல செய்வானே என்று நினைக்கத் தோன்றாதா?
இவர்களைப் போன்றோர் திருந்துவது எப்போது?
அலுவலகத்திற்குள் நுழையும் போதே வழி மறித்தார் அந்த பெண் உதவி ஆசிரியர்... 'ஏம்ப்பா மணி... பா.கே.ப., பற்றி, ஒரு பெண்மணி போனிலேயே பெரிய புகார் பட்டியல வாசித்துட்டாருப்பா... வாரம் தவறாம, லென்ஸ் மாமா உ.பா., சாப்பிடுறத பத்தியும் 'அந்த' மாதிரி சர்வே பத்தியும் தான் விடாம எழுதுறியாம்... அவங்க வீட்டில வயசுப் பையன்களும், பொண்ணுங்களும் இருக்காங்களாம்; அவங்களும், ஒரு வரி விடாம இந்த பகுதிய படிச்சுத் தொலைக்றாங்களாம்... அதனால, இனிமே இது போல எழுதக் கூடாதுன்னு உத்தரவு போட்டாங்கப்பா...' என்று, படபடவென சொல்லி ஓய்ந்தார்.
தனிமையில் அமர்ந்து, வாரா வாரம் அப்படியா எழுதுகிறோம் என சிந்தித்தேன்; கடந்த வருட பைலை புரட்டினேன். அதிக பட்சமாக, ஏகப்பட்ட வாரத்திற்கு மேல் உ.பா., பற்றி எழுதாதது தெரிந்தது.
'சரி... மறந்து விடுவோம்...' என நினைத்து, தபாலைப் பிரித்து படித்துக் கொண்டிருந்தேன்; தேனி மாவட்டத்து வாசகி ஒருவரின் கடிதம் — அதில், 'நீங்க சாப்பிட்டது, குடித்தது, கூத்தடித்தது தான் அதிகம் வருகிறது... இது, அறிவாளி அந்துமணிக்கு நல்லதாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் அதிகமாக அலட்டிக் கொள்வது போல எனக்குத் தோன்றுகிறது. சரி, விஷயத்துக்கு வருவோம்...' எனக் கூறி கடிதத்தை தொடர்ந்திருந்தார்.
கடிதத்தைப் படித்து மன சஞ்சலத்துடன் அமர்ந்திருந்த போது, தம் நாலு முழ வேஷ்டியின் ஒரு முனையை கையில் பிடித்தபடி மாடி ஏறி வந்தார் குப்பண்ணா. வந்து அமர்ந்தவரிடம், 'சைவ மேட்டர் எதுனா, எழுதறதுக்கு சொல்லுங்களேன்...' என்றேன்.
கொஞ்ச நேரம் மோட்டு வளையை பார்த்தவர், 'சரி... ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிக கூறியத சொல்கிறேன்...' என ஆரம்பித்தார்...
'ஒவ்வொரு குடும்பமும், சமைப்பதற்காக பானையில் அரிசியப் போடுற போது, ஏழைகளுக்குன்னு ஒரு பிடி அரிசியை எடுத்து, ஒரு கலயத்தில போட்டுடணும்...' என்றார் சுவாமிகள்; எதற்காக தெரியுமா?
இப்படி பல குடும்பங்க தினமும் போட்டு வைச்சுருக்கும் தானியங்கள, பேட்டைக்குப் பேட்டை சேகரிச்சு, உணவாக்கி, ஆங்காங்குள்ள ஆலயத்தில் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளிக்கவே...
அதே மாதிரி, 'ஒரு பிடி அரிசியோடு, ஒரு பைசாவும் தினந்தோறும் போட்டு வரணும்...' என்றும் கூறியிருந்தார். இது எதற்குன்னா... சேகரித்த அரிசியை சமைப்பதற்கான விறகு வாங்கவும், சாதத்தில் சேர்த்துக் கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும் வியஞ்சனமோ தயாரிக்கறதுக்கும், சமையல் பாத்திர வாடகைக்கு என, இப்படிப்பட்ட மேல் செலவுக்காகத் தான் அந்த ஒரு பைசாவ போட்டு வரச் சொன்னார்.
'இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது பெரிய பரோபகாரம்; பசித்து வந்த ஏழைகளுக்கு ஈசுவரன் கோவிலில் பிரசாதம் கிடைக்கிறதுன்னா வயிறும், மனசும் குளிரும்; இதனால், கோவிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு, பக்தியும் வளரும்...' என்றார் சுவாமிகள்.
வெறுமே, 'சாப்பாடு' என்றில்லாமல், ஈசுவரனுக்கு நிவேதனமான, 'பிரசாதமாக' இருப்பதால், அந்த அன்னம், சித்த சுத்தி அளிக்கும் என்றும் சொன்னார்.
அன்னதானம் என்கிறது பரோபகாரத்தில் ஓர் அம்சமே! இந்தக் காலத்தில சமூக சேவைன்னு ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுறதத் தான் முற்காலத்தில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே செய்து வந்தனர் மக்கள். இதற்கு, 'பூர்த்த தர்மம்' என்று பெயர்.
ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அவர்களின் ஆத்ம ஷேமத்துக்காகக் கோவில் கட்டுவது, அன்னதானம், நந்தவனம் அமைப்பது எல்லாம், 'பூர்த்த தர்மம்' தான். தாகமெடுத்த பசுக்களும், மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காக, கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் நிலத்தில் ஒரு குளம் வெட்டினால், எவ்வளவோ புண்ணியம் என்றார்.
ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும், பணக்காரர், ஏழை என்கிற வித்தியாசமின்றி ஒன்று சேர்ந்து மண் வெட்டியை கையில் எடுத்து, இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவைகளில் ஈடுபட வேண்டும்; இதனால், சமூக ஒற்றுமை அதிகமாகும்; உழைக்க உழைக்க சித்த சுத்தியும் வரும். எல்லாருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும் போது, அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும். குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட, நம் இதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம் என்கிறார் பெரியவர், எனக் கூறி முடித்தார்.
என் மீது புகார் பட்டியல் வாசித்த வாசகி அவர்களே... இப்படியே இனி எழுதட்டுமா?
