PUBLISHED ON : ஆக 17, 2014

பசுமை நினைவுகளின் பயணம், 2002ல் இருந்து திடீரென்று, 2014க்கு தாவி விட்டதே காரணம் என்ன என்று யோசிக்கும் வாசகர்களே... அந்த பயணத்தில் எவ்வித மாற்றமுமில்லை; அது தென்றலாய் வீசியபடி, வற்றாத அருவியாய் கொட்டிக் கொண்டிருக்கும்.
இது ஒரு இடைச்செருகல்தான்; இந்த விஷயங்களை இப்போது சொன்னால் நன்றாக இருக்குமே என்று எண்ணியதன் காரணமாகவே, 2014ல் நடந்த குற்றால டூர் விஷயங்களை சில வாரங்கள் சொல்லி, பின் பழைய கதையை ஆரம்பிக்கிறேன்.
இந்தாண்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, வாசகி லதாவை தேடிப்போன போது ஏற்பட்ட அனுபவத்தை, கடந்த வாரம் சொல்லியிருந்தேன்; இவர் தன் மகள் ஷில்பாவுடன் டூரில் கலந்து கொண்டார்.
ஷில்பா வித்தியாசமான பொருள் ஒன்றை வாங்கினார் என்று சொல்லியிருந்தேன்... அது ஒரு அரிவாள். 'இளநீர் சீவ அரிவாள் கிடைத்தால் வாங்கிவரச் சொன்னார் அப்பா; அதான் வாங்குறேன்...' என்றார்.
ஷில்பாவை பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் அவர் ஒரு உற்சாக மங்கை! தானும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துபவர்.
பாட்டு, பேச்சு, ஆட்டம், விளையாட்டு என்று எதுவானாலும் முதலில் வருவதுடன், மற்றவர்களையும் பங்கேற்க வைத்தார்.
மதுரையைவிட்டு பஸ் கிளம்பியதுமே, 'எங்கே மைக்...' என்று கேட்டு, அம்மா லதா பாட, அதற்கேற்ப மகள் ஷில்பா ஆட, இதைப் பார்த்த மற்றவர்களும் ஆடவும், பாடவும் ஆரம்பிக்கவே, டூர் முழுவதுமே ஆட்டம், பாட்டம் எனத் தொடர்ந்தது.
அதிலும் ஷில்பாவிற்கு நடனம் என்றால் உயிர்; டூரின் இரண்டாவது நாள் நிகழ்வின் போது, 'பேசினது போதும்; குத்து பாட்டு போடுங்க நான் ஆடப் போறேன்...' என்று களத்தில் இறங்கி விட்டார்.
ஆனால், மைக் செட்டோடு வந்திருந்த கணேஷ், 1960ல் மைக் செட் வாங்கிய போது பதிவு செய்திருந்த பாடல்களை தான் எப்போதும் ஒலிபரப்புவார்.
'அண்ணே...புதுசா ஏதாவது போடுங்க...' என்றால், பெட்டியில் ரொம்ப நேரம் தேடி எடுத்து, 'சார் இந்த புது பாட்டு எப்படி இருக்குன்னு கேளுங்க...'என்று, 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே...' என்பது மாதிரியான பாடல்களை போடுவார்.
அப்படிப்பட்டவரிடம், ஷில்பாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக, 'குத்துப்பாட்டு போடுங்க...' என்று ஆளாளுக்கு சொல்ல, அவருக்கு எதுவும் புரியவில்லை. மிரண்டு போய், 'குத்துப்பாட்டுன்னா என்ன?' என்று கேட்டார். ஆனால், ஷில்பாவோ, 'கரிகாலன் உறையைவிட்டு வாளை எடுக்க மாட்டான்; அப்படி எடுத்துவிட்டால் ரத்தம் காட்டாமல் திரும்ப உறையில் போட மாட்டான்...' என்று எம்.ஜி.ஆர்., பட வசனத்தைப் போல், களத்தில் இறங்கிய பின், ஆடாமல் போவதாவது என்பது போல் அசையாமல் நின்றிருந்தார்.
'உங்ககிட்ட இருக்கிற ஏதாவது ஒரு பாட்டை போடுங்க கணேசா...' என்றதும், ஊர்ல இருக்கிற சாமியெல்லாம் கும்பிட்டுவிட்டு, ஒரு பாட்டு போட்டார். அது, 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா... எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா...' என்ற பாட்டை போட, அதற்கும் அசராத ஷில்பா, அவரைவிட உயரமான கூந்தலை அவிழ்த்து போட்டு, அந்த பாட்டிற்கேற்ப ஆட, இதர வாசகிகள் சுற்றி நின்று குலவை ஒலி கிளப்ப, அந்த இடமே அதகளப்பட்டது.
இதே போல அருவிக்கு குளிக்க போன இடத்திலும் குஷிதான்; கூடவந்து சரியாக குளிக்காமல் இருக்கும் வாசகிகளை வலிய அழைத்துச்சென்று குளிக்க வைத்தார்.
'ஏசி பஸ்... கொஞ்சம் தலையையாவது துவட்டிக்கடி...' என்று அவர் அம்மா சொன்னதை கொஞ்சமும் சட்டை செய்யாமல், அரட்டை அடிக்க கிளம்பி விடுவார். இதன் காரணமாக, இரண்டு மூன்று முறை தலைவலி வந்தபோது, 'தலைவலி மாத்திரை கொடுங்க...' என்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு, அந்த மாத்திரைக்குண்டான பத்து நிமிட ஓய்வுக்கு கூட மரியாதை கொடுக்காமல், பஸ்சின் நடு இருக்கைக்கு வந்து, 'அக்கா அக்கா... அந்த, கும்கி பாட்டு பாடுங்கக்கா...' என்று, யாரையாவது உசுப்பேத்தியபடி இருந்தார்.
இவரைப் போன்றவர்கள் இரண்டு பேர்... வேண்டாம் ஒருவர் இருந்தால் போதும்; அகில இந்திய டூர் போனாலும் போரடிக்காது.
எளிமையும், இனிமையும் கொண்ட ஷில்பா தற்போது, சென்னையில் வேலை பார்த்து வருகிறார், விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த அறிவிப்பையும் இவரே செய்து, 'என் திருமணம் நம்ம அந்துமணி தலைமையில், உங்க முன்னிலையில்தான் நடைபெறும்; எல்லாருக்கும் அழைப்பிதழ் அனுப்புறேன்; அவசியம் வந்துருங்க. ஏன்னா நீங்கள்லாம் இப்ப இருந்து எனக்கு நெருங்கிய சொந்தம்...' என்றார் ஆத்மார்த்தமான பாசத்துடன்.
அவர் எல்லா வளமும் பெற்று, நலமுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.
இந்த டூரில் வந்த இன்னொரு சுவாரசியமானவர் கோவை சுபாஷினி; இதுவரை டூரில் வந்தவர்கள் யாரும் பார்க்காத பணி செய்து வருகிறார். அது என்ன பணி என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்.
குற்றாலமும், முன்னோர்களும்...
'அருவியில் ஜட்டி மட்டும் அணிந்து குளிக்காதீர்; குடித்துவிட்டு அருவியில் குளிப்பது ஆபத்து. குளிக்கும் போது கூச்சல் போடாதீர்...' என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகளுடன், தற்போது கூடுதலாக, 'அருவியில் ஷாம்பூ, சோப்பு போட்டோ... எண்ணெய் தேய்த்தோ குளிக்காதீர்...' என்று காவலரால் அறிவுறுத்தப்படுகிறது.
குற்றாலத்தின் பழமையையும், பெருமையையும், அதன் புனிதத்தையும் உணர்ந்திருந்தால், இந்த அறிவிப்புகளே நமக்கு தேவைப்படாது.
இந்த பழைய படத்தைப் பாருங்கள்...
யாத்திரைக்கு வருவது போல குற்றாலம் வந்து, அருவியை கடவுளாக வணங்கி, ஆனந்தமாக குளித்து, பய பக்தியுடன் உட்கார்ந்து போட்டோ எடுத்துள்ளனர். அதன் பின்னே, மெயினருவி பாறையில் நூற்றுக்கணக் கான சிவலிங்கங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளதையும் பாருங்கள். நம் முன்னோர், தண்ணீரை கடவுளாக பாவித்து, அதை அசுத்தம் செய்வதை பாவமாக கருதியதால் தான், இன்றும் குற்றால அருவி தன் ஜீவனை இழக்காமல் இருக்கிறது.
அவர்கள் காட்டிய வழியில், நாமும் அருவியை மதித்து, போற்றி பாதுகாத்து ஆனந்தமாக குளிப்போம்; அடுத்து வரும் தலைமுறைக்கும் வழிகாட்டுவோம்.
எல்.முருகராஜ்
