தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கடவுளுக்கு ஒரு கண்ணாடி!

கடவுளுக்கு ஒரு கண்ணாடி!

கடவுளுக்கு ஒரு கண்ணாடி!


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தட்டொளி' எனும் கண்ணாடியில் முகம் பார்த்து, தன்னை அலங்கரித்துக் கொள்வாள் ஆண்டாள் என்கிறது, திருப்பாவை. பித்தளையால் ஆனது, இக்கண்ணாடி. ஆனால், திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளத்தில், தங்கக் கண்ணாடி அணிந்து காட்சி தருகிறார், அய்யா வைகுண்ட சுவாமி.

கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் வசித்த, பொன்னு நாடார் - வெயிலாள் தம்பதிக்கு, 1809ல் மகனாகப் பிறந்தார், அய்யா வைகுண்டர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர், முத்துக்குட்டி. பெருமாள் மீது அதீத பக்தி கொண்ட இவருக்கு, 22 வயதில், இனம் புரியாத நோய் ஏற்பட்டது; 24 வயதாகியும் அது தீரவில்லை.

ஒருநாள், முத்துக்குட்டியின் தாய் வெயிலாளின் கனவில் தோன்றிய பெருமாள்,'நீ, உன் மகனுடன் திருச்செந்துார் முருகன் கோவிலில் நடக்கும் மாசி திருவிழாவுக்கு செல்; யாருக்குமே கிடைக்காத பாக்கியம் உனக்கு கிடைக்கும்...' என்றார்.

முத்துக்குட்டியின் உடல்நிலையோ பயணம் செய்யும் நிலையில் இல்லை; அக்காலத்தில், போக்குவரத்து வசதியும் கிடையாது. இருந்தாலும், பெருமாளின் கட்டளையை நிறைவேற்றத் துடித்த வெயிலாள், தன் உறவினர்களின் துணையுடன், ஒரு தொட்டிலில் முத்துக்குட்டியை அமர வைத்து, துாக்கிச் சென்றார்.

திருச்செந்துாரை அவர்கள் அடைந்ததும், அதுவரை நடக்கக்கூட இயலாத நிலையில் இருந்த முத்துக்குட்டி, தொட்டிலில் இருந்து இறங்கி, கடலை நோக்கி சென்றவர், கடலுக்குள் இறங்கி, மறைந்து விட்டார். ஒருநாள் முழுக்க தேடிக் களைத்தனர், வெயிலாளும், உறவினர்களும்; முத்துக்குட்டி, வரவில்லை. கடலில் மூழ்கி இறந்திருப்பார் என கருதி, ஊர் திரும்பினர், உறவினர். ஆனால், வெயிலாள் மட்டும் அழுதபடியே கடற்கரையில் அமர்ந்திருந்தார்.

மூன்று நாள் கழித்து, கடலில் இருந்து வெளிப்பட்டார், முத்துக்குட்டி. மகிழ்ச்சியுடன் மகன் அருகே ஓடிச்சென்று அணைக்க முயன்றார், வெயிலாள். ஆனால், தன் தாயைத் தடுத்து, 'அம்மா... நான், உன் மகன் இல்லை; கலியுகத்தில் நடக்கும் அநியாயத்தைத் தடுக்க, வைகுண்டராக அவதரித்துள்ளேன். நீ வீட்டுக்குச் செல்...' என்றார். எப்படியோ மகன் உயிர் வாழ்ந்தால் போதும் என்று எண்ணி, வீட்டுக்குச் சென்றார், வெயிலாள். இதன்பின் முத்துக்குட்டியை, 'அய்யா வைகுண்டர்' என, அழைக்க ஆரம்பித்தனர், மக்கள். அவர், கன்னியாகுமரி அருகிலுள்ள சுவாமிதோப்பு என்ற ஊருக்கு வந்து தவம் செய்தார்; அவரைத் தரிசிக்க வந்தவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்ததுடன், பல அற்புதங்களையும் நிகழ்த்தினார்.

இதன்பின், அய்யாவுக்கு பல இடங்களில், கோவில்கள் எழுந்தன. அவற்றில் ஒன்று தான் வாகைக்குளம் அய்யா கோவில்!

இவ்வூரில், ஆதிநாராயணப் பெருமாள் கோவில் இருந்தது. அங்கே, அய்யா வழிபாட்டை துவக்கி, அவரின் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர், பக்தர்கள். கருவறையில், அய்யாவுடன், ஆதிநாராயணப் பெருமாள், சிவன், சக்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

'சிவ சிவ... ஹர ஹர...' என்ற மகா மந்திரமே, அய்யா பக்தர்களின் உயிர்மூச்சு; இதை, 'உகப்பாட்டு' என்பர். 'யுகம்' என்பதே உகமாகத் திரிந்தது. இந்த மந்திரம், எந்த யுகத்துக்கும் ஏற்றது என்பதால், இவ்வாறு பெயர் வைத்தனர்.

வாகைக்குளத்தில் வசித்த ஒரு பெண்ணுக்கு, பார்வை சரியில்லாமல் போனது; வைத்தியம் செய்தும் பலனில்லை. அவர், அய்யாவை வணங்கி, தன் பிரச்னை தீர வேண்டினார். பார்வை திரும்பக் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில், அய்யாவுக்கு தங்கக் கண்ணாடி ஒன்றை காணிக்கையாக அளித்தார். அதை, இன்றும் அய்யாவுக்கு அணிவிக்கின்றனர்.

இந்தக் கோவிலில், கும்பகோணம் மகாமக குளம் போன்ற அமைப்பில், பெரிய குளம் ஒன்று உள்ளது. இக்குளக் கரையில், பெருமாளின் தசாவதார சன்னிதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 11வது அவதாரமாக அய்யாவைக் கருதுவதால், அவருக்கும் சன்னிதி அமைக்கப்பட உள்ளது.

மதுரையில் இருந்து, 155 கி.மீ., துாரத்தில் உள்ளது, தென்காசி; அங்கிருந்து, அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில், 33 கி.மீ., சென்றால், வாகைக்குளம் விலக்கு வரும். இங்கிருந்து பிரியும் சாலையில், 4 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, கோவில். திருநெல்வேலி வழியாக வந்தால், அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் சென்று, வாகைக்குளத்தை அடையலாம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us