தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக ... (பகுதி-5) தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன்

உயிரே உனக்காக ... (பகுதி-5) தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன்

உயிரே உனக்காக ... (பகுதி-5) தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன்


PUBLISHED ON : ஜன 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை:

அலுவலகம் செல்வதாக சென்ற நரேன், அங்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்ததால், மன சஞ்சலத்துக்கு ஆளானாள் மதுரிமா. நடு இரவில் திரும்பி வந்த நரேனிடம், எதுவும் கேட்கவில்லை. மதுரிமாவின் அம்மா, சாண்டியாகோ நகரில் நடத்தி வரும் நடனப் பள்ளியில், நரேனுக்கும் - மதுரிமாவுக்கும் வரவேற்பு அளிக்க இருந்ததால், அங்கு புறப்பட்டுச் சென்றனர். சாண்டியாகோ விமான நிலையத்தில், விமான பணிப் பெண் கவிதாவை சந்தித்த மதுரிமாவுக்கு, மனதிற்குள் லேசான நெருடல் ஏற்பட்டது —

வசந்தகாலம், இதமான சூழ்நிலை, மதுரிமாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. இடையே சின்ன நெருடல், கவிதா ரூபத்தில் முகிழ்த்தாலும், அதைப் பெரிதாக பொருட்படுத்துவதை தவிர்த்தாள்.

'அப்பாடா... இனிமே சின்ன சின்ன சந்தேகம் கூட இவள் மனதில் தோன்றக் கூடாது. மாசு மருவற்ற இவள் முகத்தில் கவலையின் சாயல் கூட படக் கூடாது' என, சங்கல்பம் செய்து கொண்டான் நரேன்.

அவளிடம் கேட்டான்... ''இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?''

''நோ மோர் டிராவலிங். கிட்டதட்ட வந்து விட்டோம்.''

பிரமாண்டமான கட்டடம் முன்பு கார் நின்றது —

அவர்கள் இருவரும் காரை விட்டு இறங்கினர். பூங்கொத்து தந்து வரவேற்க, பெண்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

எல்லார் முகத்திலும் புன்னகை. அது செயற்கையாக இல்லாமல், இயற்கையாக இருந்தது. மதுரிமாவின் குணத்திற்குக் கிடைத்த பரிசாக இருக்கலாம் என மகிழ்ந்தான் நரேன்.

எல்லாம் இன்பமயம் என்று அகமகிழ்ந்து, கண்ணுக்கினியவளுடன் அந்த கெஸ்ட் ஹவுசில் கால் எடுத்து வைத்த போது, அவன் மொபைல்போன் சிணுங்கியது. அந்த எண் அவனை இம்சைக்குள்ளாக்கியது; தவிர்க்க நினைத்தான்.

''ஏதாவது அவசர விஷயமாக இருக்கப் போகிறது; பேசுங்கள்,'' என்றாள் மதுரிமா.

அடுத்த முனையில் இருந்த வைத்தீஸ்வரன், ''கேன் ஐ சீ யூ நவ்,'' என்றார்.

''சார்... நான் இப்போ சாண்டியாகோவில் இருக்கேன்.''

''தெரியும்... நானும் இங்கே, 'ஹாலிடே இன்' ஓட்டலில் தான் தங்கி இருக்கேன்.''

''எனிதிங் அர்ஜன்ட் சார்?''

''எஸ்... சம்திங் இன்ட்ரஸ்ட்டிங்... நேரில் சொல்கிறேன்,'' என்றார்.

வைத்தீஸ்வரன் பற்றிய நினைவலைகள் அவன் மனதில் விரிந்தன.

இந்த சி.இ.ஓ., எப்பவும் இப்படித்தான். எதையுமே வெளிப்படையாகப் போட்டு உடைக்கும் பழக்கம் இல்லாதவர். அரைகுறையாகக் சொல்லிவிட்டு, கேட்பவர்களைக் கற்பனை பண்ண வைப்பதில் மகா கெட்டிக்காரர். அவர் வகிக்கிற சி.இ.ஓ., பதவியோ அல்லது நிறுவனத்தின் வியாபாரத் தந்திரமோ காரணமாக இருக்கலாம்.

ஆனால், அவனைப் பொறுத்தவரை ரொம்பவும் நல்லவர். நரேன் மீது அன்பும், அவனது தொழில் திறமையின் மீது மரியாதையும் வைத்திருப்பவர். நரேன், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான, 'சிஸ்கோ இன்டர்நேஷனல்' நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்ப்பவன்.

வைத்தீஸ்வரனும் அவனைப் போலவே, தமிழ் மண்ணுக்குச் சொந்தக்காரர்; கும்பகோணத்தைச் சேர்ந்தவர். காவிரித் தண்ணீர் குடித்து வளர்ந்து, பின் கல்லூரிப் படிப்பிற்காகக் சென்னை வந்து, கார்ப்பரேஷன் தண்ணீர் குடிக்கப் பழகிக் கொண்டவர். அண்ணா பல்கலைக் கழகத்தில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில், முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றதன் காரணமாக, அமெரிக்க கம்ப்யூட்டர் நிறுவனமான சிஸ்கோ இன்டர்நேஷனல் நிறுவனத்தால் வரித்துக் கொள்ளப் பெற்றவர்.

கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் மிகவும் திறமைசாலியான வைத்தீஸ்வரன், படிப்படியாக உயர்ந்து, விரைவிலேயே இந்த உயர் பதவியில் அமர்ந்திருப்பவர். ஆள் பார்ப்பதற்கு மிடுக்காவும், அழகாகவும் இருந்தும், ஐம்பது வயதாகியும், இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர். நரேன் வேலையில் சேர்ந்து, அவனுக்கும், அவருக்குமான நட்பு வளர்ந்து, ஒரு சூழ்நிலையில், 'வைத்தீஸ்வரன் ஏன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்...' என்ற கேள்வி, நரேனுக்குள் அடிக்கடி எழுந்து, அவனை இம்சைப்படுத்திக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதில், அவரைக் காட்டிலும் தான் அதிகம் கவலைப்படுவதாகக் கூட யோசித்த நரேன், அதற்காக அவனுக்குத் தெரிந்த ஒரு காரணத்தை நினைத்துப் பார்த்தான்.

'திருமணம் ஆனவர்களைக் காட்டிலும், திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பிரம்மச் சாரிகளுக்குப் பெண்களைப் பற்றி அதிகமாகத் தெரியும். அதனால்தான், அவர்கள் இன்னமும் பிரம்மச்சாரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!'

— இப்படி ஒரு வாசகத்தை நரேன் எப்போதோ, எங்கேயோ படித்திருந்தான். இதைப் படித்த போது, இதை எழுதியவன் திருமணம் ஆனவனா, பிரம்மச்சாரியா என்ற எண்ணம் கூட அவனுள் தோன்றியது. எது எப்படியோ... இந்தக் கூற்று, அமெரிக்க கலாச்சாரத்திற்கும், அந்த இளைஞர்களின் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், இது, கும்பகோணத்தில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த வைத்தீஸ்வரனுக்கு எப்படிப் பொருந்தும் என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

தன் சந்தேகத்திற்கு எப்படி விடை கண்டுபிடிப்பது என யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நரேனும், வைத்தீஸ்வரனும், கம்பெனி விஷயமாக நியூயார்க் செல்ல வேண்டிய ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது. நியூயார்க்கில் ஒரு ஓட்டலில், அவனும், வைத்தீஸ்வரனும் தங்க நேர்ந்தது. வேலை முடித்து அறைக்குத் திரும்பி, குளிருக்கு இதமாக, வெந்நீரில் குளித்து முடித்து, இருவரும், ஹாலில் போடப்பட்டிருந்த சொகுசு சோபாவில் வந்து அமர்ந்தனர்.

'நரேன்... என்ன சாப்பிடுற?'

'காபி ஆர் டீ?'

'எனிதிங் சார்...'

நரேனைப் பார்த்து புன்னகைத்தபடி, 'இப்ப நான் உன்னோட சி.இ.ஓ., இல்ல... ஐ ஆம் யுவர் பிரண்டு...' எனச் சொன்னார் வைத்தீஸ்வரன்.

அவர் சொல்வது புரியாமல், அவரை ஏறிட்டுப் பார்த்தான் நரேன்.

'புரியலையா நரேன்.... டோன்ட் லைக் ஹிப்போகிரசி. எப்பவுமே நாம நாமா இருக்கணும். யாருக்காவும், எதுக்காவும், நாம விரும்பறதையோ, நாம பழகிக் கொண்டதையோ மாத்திக்கக் கூடாது!'

நரேனுக்கு மேலும் குழப்பமாக இருந்தது. புதிர் போடுவதைப் போல அவர் பேசினார். நரேன், எதுவும் சொல்லாமல் மவுனமாக அமர்ந்திருக்க, வைத்தீஸ்வரனே தொடர்ந்தார்.

'லுக் நரேன்... என்ன அருமையான கிளைமேட்... கம்பெனி செலவுல, நீயும், நானும் இப்ப நியூயார்க்ல, அருமையான ஒரு ஓட்டல்ல தங்கி இருக்கோம்... நமக்கான செலவை, நம்மோட நிர்வாகம் அனுமதிக்குது. நாம நிர்வாகத்தை ஏமாத்தல. என்ன சொல்றேன்னு புரியுதா? இது காபியோ, டீயோ குடிக்கிற நேரமில்ல. இப்ப சொல்லு... உன்னோட சாய்ஸ் எது? பிராந்தியா, விஸ்கியா?'

வைத்தீஸ்வரனின் நேரிடையான கேள்வியால், சில விநாடிகளுக்கு ஆடிப் போனான் நரேன். 'இந்த ஆள், கும்பகோண அக்ரஹாரத்தின் சாதாரண ஐதீக ஆசாமி அல்ல... சட்டைப் பையில் கிரீன் கார்டு வைத்திருக்கும், அமெரிக்கா நாகரிகத்திற்குப் பழகிப் போன அமெரிக்க குடிமகன். எவ்வித பேதமுமின்றி, இந்த நேரத்தை சந்தோஷமாக மாற்றிக் கொள்ள, தன்னோடு சேர்ந்து குடிப்பதற்கு என்னையும் அழைக்கிறார். இவர் வாயைக் கிளறி, அவரைப் பற்றிய விஷயங்களை, குறிப்பாக, இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதன் காரணத்தை அறிந்து கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பம்' ஒரு சில விநாடிகளில், நரேன் முடிவுக்கு வந்து விட்டான்.

'ஒ.கே., சார்... நீங்க எதுவேணா சாப்பிடுங்க. எனக்கு தேநீர் மட்டுமே!'

'தட் இஸ் பேட்...' அவனை விநோதமாகப் பார்த்த வைத்தீஸ்வரன், ரூம் சர்வீசுக்குப் போன் செய்தார்.

ரிசீவரை கையால் மூடியபடி நரேனிடம் கேட்டார் வைத்தீஸ்வரன்...

'சைட் டிஷ் என்ன சொல்லலாம் நரேன்?'

'எனிதிங் சார்...'

'எனிதிங்... தட் ஈஸ் நாட் த ஆன்சர். டெல் சம்திங்...'

வைத்தீஸ்வரன் தொலைபேசியில் ஆர்டர் செய்துவிட்டு, நரேனிடம் சொன்னார்...

'நரேன்... 'என்ன தேவைங்கற?' கேள்விக்கு, 'எது வேணாலும்...' என்பது பதில் இல்ல. நமக்கு என்ன தேவையோ அத கேக்கணும்... வாழ்க்கையின் சுவையான மற்றும் சந்தோஷமான விஷயங்கள், நாம கேக்கற, 'எது வேணாலும்'கறதுல நிச்சயம் இருக்காது. நமக்கு எது வேணுமோ, எது பிடிக்குமோ அதுல தானிருக்கும்!'

அவர் சொல்வதில் இருக்கும் உண்மை நரேனுக்குப் புரிந்தது. ரூம் சர்வீஸ் பெண், 'மே ஐ கம் இன் சார்?' என்ற இனிமையான குரலோடு, அவளது கேள்விக்கான பதிலுக்குக் காத்திராமல், சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு சிறிய மேசையைத் தள்ளிக் கொண்டு உள்ளே பிரவேசித்தாள். பார்க்க அழகாய் தெரிந்தாள். வைத்தீஸ்வரன் ஆர்டர் செய்திருந்த அத்தனையும், சோபாவின் எதிரில் இருந்த டீப்பாயிற்கு மாறியது.

'ஹேவ் எ நைஸ் டைம்!'

வைத்தீஸ்வரன் கொடுத்த டிப்சை வாங்கிக் கொண்ட பணிப்பெண், வெளியேறினாள்.

அரைமணி நேரம் ஓடி மறைந்த பின்...

விஸ்கியின் இரண்டு லார்ஜை முடித்துவிட்டு, சிகரெட் புகைத்தபடி வைத்தீஸ்வரன் அமர்ந்திருந்த போது, 'சார்... உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்...'

'அபிஷியல் ஆர் பர்சனல்?'

'பர்சனல்...'

சில விநாடிகள் மவுனமாக இருந்தார் வைத்தீஸ்வரன்.

'ம்... கேளு... வாட்ஸ் யுவர் டவுட்... ஐ மீன் க்வஸ்டீன்?'

'நீங்க ஏன் சார் கல்யாணம் பண்ணிக்கல?'

ஒரு வழியாக, அவன் மனதுக்குள் அரித்துக் கொண்டிருந்த அந்த சந்தேகத்தை கேட்டே விட்டான். வாய்விட்டு சத்தமாக சிரித்தார் வைத்தீஸ்வரன். பின்பு சில விநாடிகள் மவுனமாக இருந்தார்.

'இந்தக் கேள்வியை நிறைய பேர் கேட்டுட்டாங்க... இப்ப நீ கேக்கற? இந்த கேள்வி கேட்ட எல்லாரையும், நான் திருப்பி ஒரு கேள்வி கேட்டேன். எனக்குத் திருப்தியான ஒரு பதிலை யாருமே சொல்லல. அதே கேள்வியை இப்ப நான் உங்கிட்ட கேக்கலாமா?'

'கேளுங்க சார்...'

'ஒ.கே., நாம எதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்?'

'உங்க கேள்வி எனக்குப் புரியல... எல்லா தேசத்திலேயும், எல்லா சமூகத்திலேயும், ஏன்... எல்லாக் குடும்பங்களிலும் காலம் காலமா நடந்துகிட்டு இருக்கற ஒரு சம்பிரதாயம் தானே கல்யாணம்!'

'நோ... என் கேள்விக்கான பதில் இது இல்ல. சம்பிரதாயமோ, இல்ல சம்பவமோ... அது எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும். கல்யாணத்தின் பெயரால், ஒரு ஆணையும், பெண்ணையும் எதுக்காக சேர்த்து வைக்கணும்?'

'அது ஒரு சமூகத்தோட வளர்ச்சி. ஒரு கட்டுப்பாடான, ஒழுக்கமான வாழ்க்கைக்கு, ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த சமூகம் போட்டுத் தரும் ஒப்பந்தம். 'எ சோஷியல் கான்ட்ராக்ட்!' இன்னும் சொல்லப் போனால், அந்த ரெண்டு பேரும், காலம் பூரா சேர்ந்து வாழறதுக்கான ஒரு பர்சனல் பாண்டேஜ்!'

'ஒ.கே., நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா... நீ சொல்ற இந்த சோஷியல் கான்ட்ராக்ட், பர்சனல் பாண்டேஜ் எல்லாமே, வேறு எதன் மீதோ பூசப்பட்ட முலாம்கள். தனி மனித விருப்பங்களுக்கு, ஆசைகளுக்கு எதிரானக் கட்டுப்பாடுகள்; முள்வேலிகள். ஒரு விதத்துல, எந்த ஆணையும், பெண்ணையும் அடங்கிப் போகச் சொல்லும் சர்வாதிகாரம்!'

'தனி மனித விருப்பம்ன்னு நீங்க எதை சொல்றீங்க சார்?'

'புரியாத மாதிரி கேக்கற. ஆனா, உன்னோட மனசுக்கு, நான் எதைப்பத்தி சொல்றேன்னு நல்லாவே தெரியும். இருந்தாலும் சொல்றேன்... நான் சொல்ற தனி மனித விருப்பம், ஆசை தான்... யெஸ்... ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உடல் ரீதியான உறவு. அவ்ளோ தான்!'

'அப்போ, ஒரு ஆணும், பெண்ணும் கல்யாணம் பண்ணிக்காமலேயே, அவங்க விரும்பறப்போ, ஆசைப்படற போது உறவு வெச்சுக்கறது சரின்னு சொல்றீங்களா? ஆர் யூ ரெக்கமண்டிங் ப்ரீ செக்ஸ்? மனிதர்களை மறுபடியும் விலங்காக மாத்தும் முயற்சி இல்லையா அது? அப்புறம் இந்த சமுதாயமே, ஒரு ஒழுக்கமற்ற சமுதாயமா மாறிடாதா?'

'மனிதர்களை மறுபடியும் விலங்காக மாற்றும் முயற்சி... நோ... நான் அப்படி சொல்லல. இந்த, 'செக்ஸ்' என்ற ஒரு விஷயத்துல மட்டும் தான், மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்துக்கிட்டிருக்கிற மாதிரி பம்மாத்து, பாவ்லா பண்ணிக்கிட்டிருக்கோம். இது ரொம்பவும் ஓல்டு தியரி நரேன். நிறைய விஷயங்கள்ல நாம, விலங்குக்கும் கீழே போய் ரொம்ப காலமாச்சு!'

'நீங்க எதைச் சொல்றீங்க?'

'நான் சொல்றதுக்கு எத்தனையோ இருக்கு... உதாரணமாக, பயங்கரவாதத்தை எடுத்துக்குவோம். 'யுத்தம் இப்படித்தான் நடக்கணும்...'ன்னு, யுத்தத்திற்கே ஒரு தர்மத்தை எழுதி வெச்சோம். இன்னைக்கு யுத்தம் அந்த தர்மப்படியா நடத்துகிட்டிருக்கு. தினம், தினம் எத்தனை குண்டு வெடிப்புகள், எத்தனை உயிர் போயி கிட்டிருக்கு. அகிம்சையை போதிச்ச ஒரு தேசம், இன்னைக்கு அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பரிசோதிச்சுப் பார்க்கற அளவுக்கு தியரி மாறிப் போகலையா!'

பதில் சொல்ல முடியாமல் நரேன் மவுனமாக இருக்க, அவரே தொடர்ந்து பேசினார்...

'சரி... அத விடு... நம்மோட இப்போதைய டாபிக் கல்யாணம்... கல்யாணம் பண்ணிக்கிட்ட அத்தனை ஆணும், பெண்ணும், நீ சொல்ற சமுதாய ஒழுக்கத்தைத் தூக்கிப் பிடிச்சு நின்னுக்கிட்டிருக்கறதா உன்னால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

'லுக் நரேன்... நான் யார் மீது குத்தம் சொல்லல... எல்லாமே மாறக் கூடியதுங்கறதுதான், மாறாத ஒரே தியரி. இதுல பொம்பள மட்டும் மாறவேக் கூடாதுங்கறது என்ன தர்மம்? அந்தக் காலத்துலேயே, அகல்யா மாறித்தானே, அவளுக்கு சாப விமோசனம் கிடச்சிருக்கு? கடவுள் அவதாரமான ராமனுக்கே, சீதை மாறி இருப்பாளோங்கற சந்தேகம் தானே, அக்னிப் பிரவேசம்?'

அவரது கேள்விகள், நரேன் மீது நெருப்புத் துண்டுகளாய் விழுந்தன. பெண்கள் மீதான, சமூக ஒழுக்கத்தின் மீதான நரேனின் நம்பிக்கைகளுக்கு, வைத்தீஸ்வரன் அக்னிப் பிரவேசம் நடத்திக் கொண்டிருந்தார்.

மூன்றாவது ரவுண்டை குடித்துவிட்டு, நரேனை பார்த்தார் வைத்தீஸ்வரன்.

'சார்... உங்க முடிவுதான் என்ன?'

'ஆணோ, பெண்ணோ, ஒண்ணோட நிறுத்திக்கன்னு, யாரும், யார் கிட்டயும் உத்தரவு போட முடியாது. இன்னைக்கு ஒண்ணா இருக்கறது, நாளைக்கு ரெண்டாகலாம், மூணாகலாம்... இல்ல, நீ சொல்ற சமூக ஒழுக்கங்கற கட்டுப்பாட்டுக்கு பயந்து, ஒண்ணோட நிறுத்திக்கிட்டு, இந்த எண்ணிக்கையை மனசுக்குள்ளேயே கற்பனை ஊர்வலம் விட்டுக்கிட்டிருக்கலாம். அது அவுங்க வசதிகளையும், சூழ்நிலையையும் பொறுத்த விஷயம்!'

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதும், அவர் ஏன் இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதன் காரணமும் நரேனுக்குப் புரிந்து விட்டது.

கல்யாணம் என்ற பேரில் ஏகபத்தினி விரதனாக வாழுற வாழ்க்கை இவருக்குப் பிடிக்கவில்லை. ஒன்றோடு நிறுத்திக் கொள்ளும், போதும் என்ற மனப்பான்மை இவருக்கில்லை. மேலும், மேலும் என, இரு கைகளாலும் தேடித் துழாவிப் பார்க்கும் ஆசை கொண்டவர் இவர். அதே நேரத்தில், கல்யாணத்தின் பெயரால், இவருக்கு மனைவியாக வந்து வாய்க்கிறவள், வேறு யாரையும் தேடிப் போய் விடுவாளோ என்ற சந்தேகமும், பயமும் இவருக்குள் நிறையவே இருக்கிறது. இந்த சந்தேகத்திற்கும், பயத்திற்கும், இவரது கவுரவமோ அல்லது உடல் ரீதியான இயலாமையோ கூட காரணமாக இருக்கலாம்.

இவரது விஷயத்தில் ரிஷிமூலம் பார்த்து தனக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை என, அத்துடன் நிறுத்திக் கொண்டான் நரேன். ஆனாலும், அவர் விளக்கம் அவனை வெகுவாக பாதிக்கவே செய்தது. இரண்டு ஆண்டுகள் விலகி இருந்தான். திடீரென்று அதே வைத்தீஸ்வரன், 'சம்திங் இன்ட்ரஸ்ட்டிங்... நேரில் வா, சொல்கிறேன்...' என அவனை அழைத்தார்.

புது மனைவியோடு சல்லாபிக்கலாம் என திட்டம் போட்டிருந்தான் நரேன். பூஜை வேளையில் கரடி போல வைத்தீஸ்வரனின் அழைப்பு அமைந்து விட்டது.

நரேன் குளித்து முடித்து, வைத்தீஸ்வரனை சந்திக்க அவசரம் அவசரமாக உடைமாற்றிக் கொண்டிருந்தான். அவனைப் போலவே, மதுரிமாவும் ஒரு குளியலைப் போட்டு, மெல்லிய பிங்க் நிற நைட்டிக்கு தன்னை மாற்றிக் கொண்டு, நரேனைத் தேடி வந்தாள். வந்ததும் வராததுமாய் அவன் வெளியில் புறப்பட்டு விட்டது, அவளுக்கு லேசான வருத்தத்தைத் கொடுத்தது. மதுரிமாவின் அழகிய முகம், லேசாக வாடியது.

''ஹலோ... எங்க இத்தனை அவசரமா கிளம்பறீங்க?''

''சாரி டியர்... சி.இ.ஓ., அவசரமா வரச் சொல்லி போன் பண்ணினார். என்னன்னு பாத்துட்டு வந்துடுறேன்.''

அவன், அவளை இறுக்கி அணைத்தபோது, அவள் உள்ளாடை எதையும் அணிந்து கொள்ளவில்லை என்பதை அவனால் உணர முடிந்தது. அந்த உணர்வில்...

''ச்சே... நீங்க ரொம்பத்தான் மோசம்... கைய எடுங்க.''

''மனசு வரல மது...''

''அதுக்காக, இப்படியா?''

''பொய் சொல்லாதே... இது...''

அவன் சொல்வதை ஒப்புக் கொண்டவளைப் போல, அவனது கையை விலக்காமலேயே அவள் கேட்டாள்...

''எப்ப வருவீங்க?''

''ஜஸ்ட் ஒன் அவர்... ஐ வில் பீ பேக்...''

''அதுவரைக்கும் நான் தனியாவா... போர் அடிக்குமே... என்ன பண்றது?''

மதுரிமாவின் குரல் மெல்ல சிணுங்கியது.

''என் பெட்டியில் புத்தகங்கள் இருக்கு... எடுத்து படி. 'டிவி' பாரு... இல்லேன்னா ரெஸ்ட் எடுத்துக்க... நிம்மதியா ஒரு தூக்கம் போடு...''

''தூக்கமா... இந்த நேரத்திலயா? நோ...''

''ஓ.கே., ஒரு மணி நேரம் தானே... வந்துடுறேன்... சீ.யூ.,''

நரேன் புறப்பட்டுப் போனான். ஹாலில் வந்து அமர்ந்தாள் மதுரிமா. நரேன் சொல்லியது நினைவுக்கு வந்தவளாய், அவனது பெட்டியைக் களைந்தபோது, புத்தம் புதிதாய் ஒரு புத்தகம் கையில் தட்டுப்பட, புத்தகத்தை உருவி வெளியே எடுத்தாள்.

மதுரிமாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

— தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us