தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை - நடுத்தெரு நாராயணன்

திண்ணை - நடுத்தெரு நாராயணன்

திண்ணை - நடுத்தெரு நாராயணன்


PUBLISHED ON : ஜன 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீதிக் கட்சி தோன்றுவதற்கு முன்பே, பிராமணரல்லாதார் அமைப்பு ஒன்று, 1909ல், சென்னை நகரில் தோன்றி யுள்ளது. இந்த அமைப்பின் பெயர், 'தி மெட்ராஸ் நான்-பிராமின் அசோசியேஷன்!' - அதாவது, 'சென்னை பார்ப்பனரல்லா தார் சங்கம்!' என்பதாகும். பண்டிதர் அயோத்திதாஸ். (இவர் தாழ்த்தப்பட்டவர். 'ஒரு பைசா தமிழன்!' என்ற அந்நாளைய பிரபல வார இதழை நடத்தியவர்) இந்த சங்கத்தின் பெயரில் உள்ள, 'நான்-பிராமின்' எனும் கருத்து பற்றி, அவர் செய்துள்ள விமர்சனம் குறிப்பிடத்தக்கது. 'நான்- பிராமின் கூட்டத்தார் என்றால் யாவர்?' எனும் அடிப்படைக் கேள்வியை, தம் விமர்சனத்தில் எழுதியுள்ளார். அவருடைய விமர்சனம்: சைவம், வைணவம், வேதாந்தம் எனும் சமயங்களையும், அந்த பிராமணர்கள் என்போர்களே ஏற் படுத்தி, அச்சமயத்தை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ, அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே யாவர். அத்தகைய செயலுள், ஜாதி ஆச்சாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் தழுவிக் கொண்டே, 'நான்-பிராமின்ஸ்' என்று சங்கம் கூடியிருக்கின்றனரா, அன்றேல், ஜாதி ஆச்சாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் ஒழித்து, 'நான்-பிராமின்ஸ்' என்று சங்கம் கூடியிருக்கின்றனரா என விளக்கவில்லை. அங்ஙனம் ஒழித்துள்ள கூட்டமாயிருப்பின், அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பேர் காத்திருக்கின்றனர். பிராமணர் என்போரால் வகுத்துள்ள ஜாதி ஆச்சாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் வைத்துக் கொண்டே, 'நான்-பிராமின்ஸ்' எனக் கூறுவது வீண். காரணம், ஜாதியாசாரக் கிரியைகளிலும், பிராமணர்கள் என்போர் வர வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆதலின், இவ்விரண்டிற்கும் சம்பந்தப்பட்டவர்கள் யாவரும், 'நான்-பிராமின்' ஆக மாட்டார்கள். மேற்கூறிய விமர்சனம் 1909ல் எழுதப்பட்டது. அதன்பின், 1917ல் தோன்றிய, 'நான்-பிராமின்ஸ்' இயக்கமான நீதிக் கட்சிக்கும் பொருந்தியதாகும். — 'பெ.சு.மணி கட்டுரைகள்' பூங்கொடி பதிப்பகம்.

காவடியைப் பார்க்காத தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்துக்களில் எல்லா வகுப் பினருமே, முருகன் கோவிலுக்குக் காவடி எடுப்பது உண்டு. முருகனுக்கு நேர்ந்து கொண்டவன், குறிப்பிட்ட ஒரு முருகன் கோவிலுக்குக் காவடி எடுத்துச் செல்வான். அவன் காவடியைத் தோளில் தூக்கி வைத்து, சாமியாடிக் கொண்டே, பல வீடுகளுக்கும், பல ஊர்களுக்கும் போய், வீட்டுக்கு அரை ரூபாய், ஒரு ரூபாய் என்று பண வசூல் செய்து, அந்தப் பணத்தையே செலவுக்கு வைத்துக் கொண்டு, சுற்றத்தார் புடைசூழக் கோவிலுக்குப் போவான். காவடி எடுப்பவனுக்குத் துணையாக, இடும்பன்சாமி என்று ஒருவன், ஆடிக்கொண்டே செல்வான். கோவிலுக்குப் போய், உரிய சம்பிரதாயப் படி காவடியை இறக்கி, சுவாமிக்குச் செய்ய வேண்டிய பூஜை முதலியவற்றை செய்து விட்டு ஊர் திரும்புவர். சாதாரணமாக, மயிலிறகு களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளும், அக்னிக் காவடி களும், பாம்புக் காவடிகளும், செம்பு நிறையப் பால் நிரப்பித் தொங்க விடப்பட்ட பால் காவடிகளும், சந்தனம் கட்டித் தொங்கவிடப்பட்ட சந்தனக் காவடிகளும், ஜரிகைத் தாளால் அலங்கரிக்கப்பட்ட வர்ணக் காவடிகளுமாக, காவடிகளில் பலவகை உண்டு. சத்திரத்திலோ, மடத்திலோ உள்ள சில பண்டாரங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட பண்டாரம், மணியோசை எழுப்பிக் கொண்டே வந்து, 'அன்னக் காவடி, தர்மம் தாயே!' என்று, சோறு கேட்டு வாங்கிச் செல்வது உண்டு. இந்த காவடியைத்தான் பாரதியார், 'எண்ணும் முன்னே அன்னக் காவடி பிச்சை என்றேகிடுவான் குரலும்...' என்று தம் கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். யாதொரு, 'ஐவேஜியும்' இல்லாதவனை, 'வெறும் காவடி' என்றும், 'அன்னக் காவடி' என்றும் இழித்துக் கூறுவார். இழித்துக் கூறும் இந்தச் சொற்கள், காவடி எடுப்பதையொட்டி எழுந்தவையே. காவடி எடுத்து வருகிறவர் களுக்கு, அயலூர்களிலுள்ள முன்பின் தெரியாத வர்கள் கூடப் பணம் கொடுப்பது உண்டு. ஆனால், நாளடைவில் பலர் ஜீவனோபாயத்தை மட்டும் உத்தேசித்து, நினைத்த போதெல்லாம் காவடி தூக்குவது என்று ஆரம்பித்து விடவே, இப்போது உண்மைக் காவடிகளுக்குக் கூட பணம் வசூலாவது அரிதிலும் அரிதாகி விட்டது. — கு.அழகிரிசாமி ஒரு கட்டுரையில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us