PUBLISHED ON : செப் 28, 2014

காந்தியைக் காணவில்லை!
* மனம் பதைத்தது
உடல் நடுங்கியது
உண்மையிடம்
ஓடினேன் - அது
உருக்குலைந்துக்
கிடந்தது!
* நேர்மையை நாடினேன்
அதுவோ...
நீலிக்கண்ணீர்
வடித்தது!
* எளிமையை
எங்கு தேடியும்
கிடைத்தபாடில்லை!
* தூய்மையை
யாரோ
துரத்திக் துரத்தி
அடித்திருக்கின்றனர்
பாவம்
பேச்சுமில்ல
மூச்சுமில்ல!
* சத்தியமோ...
செத்த பிணமாய்
சகதியில்!
* அகிம்சையிடமிருந்தாவது
ஆதரவான
பதில் வராதா...
எதிர்பார்த்து
ஏமாந்து போனேன் - அது
வள்ளலார் விரித்த கடையில்
வாய்மூடிக் கிடந்தது!
* இவர்களைப் பிரிந்து
அவர் இருக்க மாட்டாரே...
கல்விக்கூடங்கள்
கவின் நீதிமன்றங்கள்
சட்டசபை
பாராளுமன்றம்
ஏன்
மனிதநேய அமைப்புகளில் கூட
மகாத்மாவைக் காணவில்லை!
* மெல்ல எழுந்தேன்
எதிரில் ஒரு டாஸ்மாக்
எட்டிப் பார்த்தேன்...
சிவப்பு நோட்டில்
தேச பிதா
சிரித்துக் கொண்டிருந்தார்!
* கண்ணுற்ற நானோ
மூர்ச்சையாகி
முச்சந்தியில்
விழுந்தேன்!
— தேன் தமிழன், நெய்வேலி நகர்.
