தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிறுமை கண்டு பொங்குவாய்!

சிறுமை கண்டு பொங்குவாய்!

சிறுமை கண்டு பொங்குவாய்!


PUBLISHED ON : செப் 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''வேலைக்கு போயிட்டு வர்றேன்,'' என்று சொல்லி, தன் ஹைதர் கால சைக்கிளில் ஏறி, 'கிரீச்... கிரீச்' ஓசையுடன் புறப்பட்டுச் செல்லும் வினாயகத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள், மனைவி ஜோதி.

அவன் அணிந்திருந்த சட்டையின் கிழிசல் வழியாக அவன் கருத்த மேனி தெரிந்தது. முதுகுப் பகுதியின் கிழிசல்கள், அவன் அணிந்திருந்த அழுக்கு பனியனை அறிவித்தன.

'பாவம்... இந்த மனுஷன்... ஒவ்வொரு மாசமும், ஒரு புதுச்சட்டை வாங்கணும்ன்னு தான் நினைக்கிறாரு... ஆனா, ஏதாவதொரு செலவு வந்து வாங்க முடியாம போயிருது. ஹூம்... எப்பத்தான் இந்தக் கிழிஞ்ச சட்டைய மாத்துறதுக்கு நேரம் வரப் போகுதோ தெரியல...' என்று நினைத்தவளுக்கு, தான் பத்துப் பாத்திரங்கள் தேய்க்கச் செல்லும் வீட்டிலுள்ள ஆண்கள் உடுத்தும் உடையை எண்ணிப் பார்த்தாள். அவள் மனம் அவளையுமறியாமல் கணவனுக்காய் பரிதாபப்பட்டது. அப்போது, 'பளிச்' சென்று அவள் மனதில் ஒரு யோசனை வந்தது. 'பேசாமல் ஏதாவதொரு வீட்டில, என் புருஷனுக்கு போட்டுக்கிறதுக்கு ஒரு பழைய சட்டை தாங்கன்னு கேட்டுப் பாப்போமா...' என நினைத்தாள்.

அதே நேரம், இன்னொரு எண்ணமும் தோன்றியது... சில வீடுகளில், தாங்கள் உபயோகித்த பழைய துணிகளை கார் துடைக்க, தரை துடைக்க என்று உபயோகப்படுத்துவார்களே தவிர, அதை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். அதற்கு காரணம், அவர்களுடைய அதிர்ஷ்டம் அந்தத் துணிகள் வழியே, மற்றவர்களுக்கு போய் விடுமாம். இது நினைவுக்கு வந்ததும், 'இப்படியொரு அதிசயமான நம்பிக்கை, உலவிக் கொண்டிருக்கும் போது யார் எனக்கு பழைய சட்டய தூக்கிக் குடுப்பாங்க...' என்று விரக்தியாக நினைத்தாள்.

காலை, 11:00 மணி; டாக்டர் கோகிலா வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் ஜோதி. 'கைராசியான டாக்டரம்மா...' என்ற பெயர் பெற்றிருந்த டாக்டர் கோகிலாவிற்கு, அந்த ஏரியாவில் ஒரு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. அவள் கணவரும் டாக்டர். இருவருமே மக்களிடம் அன்பாய் பேசி பாசத்தோடும், பரிவோடும், பழகுபவர்கள் என்பதால், அவர்களது கிளீனிக்கில் கூட்டத்திற்குக் குறைவேயில்லை.

வாயைத் திறந்து பேசினாலே,'கன்சல்டிங்' பீஸ், இந்த டெஸ்ட், அந்த டெஸ்ட் என, காசை பிடுங்கும் இக்காலத்தில், வெறும் இருபது ரூபாய் பீஸ் வாங்கி, வைத்தியம் பார்க்கும் அவர்களை, அப்பகுதி ஏழை மக்கள், டாக்டர்களாக பார்ப்பதில்லை; கடவுளாகவே பூஜிக்கின்றனர்.

''என்ன ஜோதி... முகம் டல்லாயிருக்கு... உடம்பு முடியலயா?'' மென்மையாக விசாரித்தார் டாக்டர் கோகிலா.

''அது வந்து... ஒண்ணுமில்லைங்கம்மா,'' சமாளித்தாள் ஜோதி.

''ஜோதி... என்னை உடம்புக்கு மட்டும் வைத்தியம் பாக்குறவன்னு நினைச்சியா... மனசுக்கும் சேர்த்து வைத்தியம் பார்க்கிறவ. அதனால, என்கிட்ட மறைக்க வேணாம்; உன்ன கஷ்டப்படுத்துற விஷயம் என்னன்னு சொல்லு,'' டாக்டர் கோகிலாவின் பேச்சில் வெளிப்பட்ட அன்னியோன்யம், ஜோதியை நெகிழச் செய்தது.

'டாக்டரம்மா கிட்ட நேரடியாகவே கேட்டு பாத்துட்டா என்ன...' என்று நினைத்தவள், ''அம்மா...'' என்றழைத்து தயங்கினாள்.

டாக்டர் கோகிலா புன்னகையுடன் அவளைப் பார்க்க, தன் கணவனுடைய கிழிந்த சட்டையைப் பற்றியும், ஒரு புதுச்சட்டை எடுக்க, அவன் போராடும் நிலையைப் பற்றி சொன்னவள், ''அம்மா... நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான், உங்க கிட்ட ஒண்ணு கேட்கலாமா?'' தயக்கத்துடன் கேட்டாள்.

''தாராளமாகக் கேளு.''

''வந்து... நம்ம அய்யாவோட பழைய சட்டை ஒண்ணு குடுத்திங்கன்னா... அதை என் புருஷனுக்கு...'' தயங்கித் தயங்கி வார்த்தைகளை வெளியிட்டாள் ஜோதி.

அப்போதும் புன்னகை மாறாத டாக்டரம்மா, மெல்ல எழுந்து, அறைக்குள் சென்றவள் ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தாள். கையில், அவளது கணவன், ஓரிரு முறையே போட்ட சட்டை இருந்தது

''இந்தா ஜோதி இதக் கொண்டு போய் உன் வீட்டுக்காரருக்குக் குடு,'' என்றாள்.

கண்களில் நீர் பனித்தது ஜோதிக்கு.

''அம்மா... பொதுவா யாரும், இப்படி தங்களோட பழைய துணிகள குடுக்க மாட்டாங்க,'' தழுதழுத்தாள் ஜோதி.

''தெரியும்; கொடுத்தா அவங்களோட அதிர்ஷ்டம், அந்த சட்டை வழியாக அதை போடுறவங்களுக்குப் போயிடும்ன்னு சொல்வாங்க. அதெல்லாம் வெத்து வேட்டு ஆளுங்களோட வெட்டிப்பேச்சு. அப்படி எங்க அதிர்ஷ்டம், உங்க வீட்டுக்காரருக்கு ஒட்டிக்கிச்சுன்னா எங்களுக்கு சந்தோஷமே,'' என்று பெருந்தன்மையாய் சொன்னாள் கோகிலா.

நெகிழ்ந்து போன ஜோதி, கோகிலாவைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

வேலை முடிந்து வெளியே வந்தவள், அருகிலிருந்த பொது தொலைபேசியிலிருந்து, தன் கணவன் வினாயகம் வேலை செய்யும் அரிசி மண்டிக்குப் போன் செய்து விஷயத்தை சொன்னாள்.

அவன்,'அப்படியா...' என்று மகிழவும்,''மச்சான்... வேலை முடிஞ்சதும் கார்ப்பரேஷன் பள்ளிக் கூடத்து வழியாத் தானே வருவே...சாயந்திரம் நான் பள்ளிக் கூடத்து வாசல்ல நிக்கறேன்; என்னை கூப்பிட்டு போ...' என்றாள்.

அவன், 'சரி' என்றதும் தொலைபேசி இணைப்பை துண்டித்தாள் ஜோதி.

வேறொரு வீட்டிற்கு பத்துப் பாத்திரம் தேய்க்கப் போன ஜோதிக்கு, மனசு முழுவதும் அந்தச் சட்டையின் மீதே இருந்தது. அதைக் கொடுக்கும் போது, தன் கணவனின் முகம் சந்தோஷத்தில் மகிழப் போவதை எண்ணி கனவு காணத் துவங்கினாள்.

மாலை, 6:00 மணி; கார்ப்பரேஷன் பள்ளிக்கு அருகில் காத்திருந்தாள் ஜோதி. பின்னால், 'க்ரீச்... க்ரீச்...' என்ற ஓசை கேட்க, திரும்பிப் பார்த்தாள்.

வினாயகம் தான் வந்து கொண்டிருந்தான், அதே கந்தல் சட்டையுடன். காலையில் வெறும் கிழிசலுடன் இருந்த சட்டை, இப்போது வியர்வையில் நனைந்திருந்தது. அதைப் பார்த்ததுமே ஜோதியின் முகம் வாடிப்போனது. 'வீட்டுக்கு போனதும், முதல் வேலையா இந்த கிழிஞ்ச சட்டையக் கழற்றி, தீயை வெச்சுக் கொளுத்தணும்...' என்று நினைத்தாள்.

''மச்சான்... இது உனக்கு பத்துமான்னு பாரு,'' ஆசையுடன் நீட்டிய ஜோதியின் விழிகளில் ஆவல்.

அவள் கொடுத்ததை, சந்தோஷத்துடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தான் வினாயகம். அவன் எதிர்பார்த்ததை விட, அந்தச் சட்டை அழகாயிருந்தது. மெரூன் கலரில், புது மெருகு குறையாமல், 'பளீ'ரென்றிருந்தது.

''புதுசட்டயாட்டமே இருக்குடி,'' என்றான் வாயெல்லாம் பல்லாக.

''ஆமாம் மச்சான்... எனக்கும் அப்படித்தான் தோணுது; ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ போட்ட சட்டையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்,''என்றாள் மகிழ்ச்சியுடன்.

அவளிடமிருந்து சட்டையை வாங்கி மடித்து, கூடையில் வைத்தவள், சைக்கிளின் பின்புறத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். பூரிப்புடன் பெடலை மிதித்தான் வினாயகம்.

போகும் வழியில் டீக்கடையைப் பார்த்த ஜோதி, ''மச்சான்... ஆளுக்கொரு டீ குடிச்சிட்டுப் போகலாமா? '' என்று கேட்டாள். சரி என்றவன், சைக்கிளை நிறுத்தி, டீயும், சமோசாவும் ஆர்டர் செய்துவிட்டு, டீக்கடை பெஞ்சில் அமர்ந்தனர்.

அப்போது, எதிர் பெஞ்சில் அமர்ந்திருந்த இளைஞனை ஏதேச்சையாகப் பார்த்த ஜோதி முகம் சுளித்தாள். பரட்டைத் தலையுடன், முழு போதையில் அமர்ந்திருந்த அவன் பார்வை எதன் மீதோ நிலைக்குத்தியிருந்தது.

'இவன், எதை அப்படி வெறிச்சுப் பாத்துக்கிட்டிருக்கிறான்...' என்கிற யோசனையோடு, திரும்பிப் பார்த்தாள்.

அங்கே, பனிரெண்டு வயது மதிக்கக் கூடிய சிறுமி ஒருத்தி, நடைபாதையில் போவோர் வருவோரிடம், பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். உடன், அவள் தம்பி போன்றிருந்த சிறுவன், மேல் சட்டையில்லாமல் நெஞ்செலும்பு தெரிய நின்றிருந்தான்.

ஜோதி திரும்பி, அந்த இளைஞனைப் பார்த்தாள். அவன் பார்வை இன்னமும், அதே இடத்தில் நிலைக்குத்தி நிற்க, அப்போதுதான் அவளுக்கு புரிந்தது, அவன், அச்சிறுமியின் நெஞ்சுப் பகுதியை பார்த்துக் கொண்டிருப்பது. 'அடக் கர்மம் பிடிச்சவனே...' என்று மனதிற்குள் திட்டியவாறே திரும்பி, அச்சிறுமியை மறுபடியும் பார்த்தாள்.

வறுமையின் காரணமாக, தனக்குச் சற்றும் பொருந்தாத, சிறிய மேல் சட்டையை அணிந்திருந்த அச்சிறுமி, தன்னையறியமால், ஒரு கவர்ச்சி பொருளாய் காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.

ஜோதியின் மனதில், அச்சிறுமியின் மேல் பரிதாபமும், அந்த இளைஞன் மீது, கோபமும் வந்தது. 'பாவி... உன் மக மாதிரி இருக்கும் பச்ச மண்ண இப்படி பாக்கறியே... நீயெல்லாம் மனுஷந்தானா...' என்று, மனதிற்குள் திட்டியவள், தன் கணவனின் காதருகே மெதுவாக விஷயத்தைச் சொன்னாள்.

உடனே வினாயகம், அவனை கவனிக்க, அவனோ, இன்னும் காமம் வழியும் கண்களினால், அந்தச் சிறுமியை தின்று விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

''ராஸ்கல்... அந்த பிச்சக்கார சின்னப் புள்ளய எப்படிப் பாக்குறான்...இவன மாதிரி பாவி பசங்கத்தான் பள்ளிக் கூடம் போற சின்னக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காம, பாலியல் கொடுமை செஞ்சு நாசம் செய்துகிட்டுருக்கானுக...'' என்றான் ஆத்திரத்துடன்.

''பாவம் அந்தச் சிறுமி வயித்துப் பசிக்கு பிச்சை எடுத்திட்டிருக்கா, இவன் என்னடான்னா இன்னொரு பசிக்கு அவளை நோட்டம் போட்டிருக்கான். எனக்கென்னமோ அந்தச் சிறுமி போட்டிருக்கற, அந்த இறுக்கமான சின்ன சட்டை தான் அவன இப்படி பாக்க வைக்குதுன்னு தோணுது; அதனால...'' என்று இழுத்தாள் ஜோதி.

''சொல்லு புள்ளே... அதனால?''

''டாக்டரம்மா வீட்டிலிருந்து உனக்குன்னு வாங்கிட்டு வந்த அந்தச் சட்டையை, அந்தப் புள்ளக்கு போட கொடுத்துடலாம்ன்னு நெனைக்கறேன்... நீ சங்கடப்பட மாட்டியல்ல,'' என்று, தயக்கத்துடன் கேட்டாள் ஜோதி.

உடனே பளீரென்று புன்னகைத்து, ''சங்கடமா... சந்தோஷப்படுவேன் புள்ளே! இதன் மூலமா, ஒரு பாலியல் வன்கொடுமை தவிர்க்கப்படும்னா அதை விட வேறென்ன வேணும்,'' என்றான் வினாயகம்.

அடுத்த நிமிடமே, இருவரும் பிளாட்பாரத்தை நோக்கி நடந்தனர். சிறுமி அவர்களிடம் பிச்சைக்காக கைகளை நீட்டியதும், அந்தக் கைகளில் சட்டையை வைத்தாள் ஜோதி.

உடனே, அச்சிறுமி அதை விரித்துப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

''ம்... போட்டுக்க,'' என்றாள். அந்த மெரூன் நிற சட்டையில், சிறுமி பளீரென்று மிளிர்ந்தாள்.

மெல்ல தன் தலையைத் திருப்பி, டீக்கடையில் அமர்ந்திருந்தவனை பார்த்தாள் ஜோதி. அவன், அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் சென்றதும், சிறுமியின் பக்கம் திரும்பிய ஜோதி, ''த பாரும்மா... இனிமே நீ சின்னக் குழந்தையல்ல, பெரிய பொண்ணு பாத்து ஜாக்கிரதையா இருக்கணும்; உலகம் ரொம்பக்கெட்டுக் கிடக்கு,'' நாசுக்காகப் புரிய வைத்தாள்.

அச்சிறுமியோ, ''அக்கா நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுதுக்கா. வேற சட்டை இல்லாததனால் தான் என் தம்பியோட சட்டைய வாங்கி போட்டுருக்கேன். பாவம் இவன் தன்னோட சட்டய எனக்கு கொடுத்துட்டு வெறும் உடம்போட திரியறான். இனி, அவனோட சட்டய அவனுக்கே குடுத்துடுவேன்,'' என்றாள் மகிழ்ச்சியுடன்.

ஜோதியும், வினாயகமும் அவளுக்கு பலவாறு அறிவுரை கூறி, பின், புறப்பட்டு சென்றனர்.

மறுநாள் காலை, வினாயகம் அதே கிழிசல் சட்டையோடு கிளம்ப, சங்கடமாய்ப் பார்த்தாள் ஜோதி.

அவள் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட வினாயகம், ''ஏன் புள்ள சங்கடப் படுறே... நீ டாக்டரம்மா கிட்ட வாங்கிட்டு வந்த சட்டைய போட்டா நான் எத்தனை சந்தோஷப்படுவனோ அத விட பத்து மடங்கு சந்தோஷம், இப்ப என் நெஞ்சுக்குள்ளார நெறைஞ்சிருக்கு. அதனால, வருத்தப்படாதே,'' என்று கூறியவன் வேலைக்கு புறப்பட்டான்.

முகில் தினகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us