
உயிர்த்தெழுவேன்!
எனக்கும் அவைகளுக்குமான
உறவைச் சொல்லி
எங்கிருந்தெல்லாம் வந்தன
என் மரத்து கனியைக் கொய்ய!
உண்டன, உறங்கின
கூடின கும்மாளமிட்டன
ஆட்டம் பாட்டம்
ஆர்ப்பரித்தன!
நானும் சந்தோஷித்து
அத்தனை கிளைகளாலும்
அரவணைத்துக் கொண்டேன்!
உறவுகளின் உற்சாகம்
எனக்குள் தொற்றிக் கொள்ள
ஆனந்த மயக்கத்தில்
என் இலைகளும் பால் சொரிந்தன!
விதி சிரித்தது...
இடியொன்று
என் மேனியை சிதைக்க
சிறகு முளைத்தவை மட்டுமல்ல
ஊர்ந்து செல்பவை கூட
என்னை விட்டு
ஓடி விட்டன!
தனிமையும், விரக்தியும்
என் விழுதுகளை
மட்டுமல்ல
என் வேர்களையும்
மடியச் செய்தன!
என்னை கடந்து செல்லும்
பறவைகளின் சிறகுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
ஒரு துளி நீர் போதும்
என் வேர்களை குளிர்வித்து
ஜீவனை உயிர்பிக்க!
பட்ட மரம் இது
பயன்படாது என
பாராமுகம் காட்டி
விலகிச் செல்கின்றன!
என்றாவது ஒருநாள்
நானும் உயிர்த்தெழுவேன்
எனக்காக அல்ல
பசும் மரம் தேடி
பறந்து செல்லும் பறவைகள் போன்ற
உறவுகளுக்காக!
— ப.லட்சுமி, கோட்டூர்.

