PUBLISHED ON : டிச 07, 2014

இருபத்தைந்து ஆண்டுகளைத் தாண்டி நடந்து வரும் வாரமலர் வாசகர்களுக்கான குற்றால டூரில், 2004-ம் ஆண்டு மட்டும் கொஞ்சம் விசேஷமானது என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.
அதுவரை குற்றாலம் வரை மட்டுமே சென்று வந்த வாசகர்கள், அந்த வருடம் குற்றாலத்தைத் தாண்டி கேரளாவில் உள்ள தென்மலை சுற்றுலா தலத்திற்கும் சென்று வந்தனர். 35 கி.மீ., தூரம்தானே போய் உடனே திரும்பி விடலாம் என்று நினைத்து போனால், அது, ஒரு நாள் பயணமாக அமைந்துவிட்டது. இதனால், முக்கியமான அருவி குளியலை இழக்க வேண்டியதாகிவிட்டது. இது போன்ற காரணங்களால் தென்மலை பயணம் என்பது, அதுவே முதலும், கடைசியுமாக அமைந்துவிட்டது.
குற்றால டூர் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாகவும் இருந்து வருகிறது. அந்த வருடம் பாரதி என்பவரின் மேஜிக் ஷோ நடைபெற்றது. இவர் மதுரையில் பிரபல புகைப்படக்கலைஞர். இவரது, இனனொரு முகம்தான், மாயாஜால கலைஞர். அந்த கலைஞருக்கு ஒரு மேடை தேவைப்பட்டது; அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் அந்துமணி.
டூருக்கு வந்திருந்த பெண் வாசகர்களும், குழந்தைகளும் பெரிதும் ரசிக்கும்படி இவர் பலவித மாயாஜால காட்சிகளை நடத்தினார். காற்றில் இருந்து சாக்லெட் வரவழைத்து குழந்தைகளுக்கு கொடுத்தார்; குடையில் இருந்து பூக்களை வரவழைத்து, பெண்கள் மீது மழை போல பொழியச் செய்தார்; வெறும் குடத்தில் இருந்து, அவ்வப்போது தண்ணீர் வரவழைத்து காட்டினார்.
இதை, முன்வரிசையில் அமர்ந்து கைதட்டி, ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த புவனேசுவரியை பார்த்து, 'நன்றி' என்று சொல்லிவிட்டு, பேசாது இருந்திருக்கலாம்... 'உங்களுக்கு ஏதாவது வேணுமா?' என்று கேட்டது தான் தப்பாக போய்விட்டது.
'எங்க சென்னையில கடும் தண்ணீர் பஞ்சம்; அதனால நீங்க வச்சுருக்கிற அந்த குடம்தான் வேண்டும்...' என்று வேடிக்கையாக கேட்டு அடம் பிடித்தார். 'இதை வச்சுதாம்மா நான் பிழைப்பையே ஓட்டிக்கிட்டு இருக்கேன்; நீங்க அதற்கு வேட்டு வச்சுருவீங்க போலிருக்கே...' என்று சொல்லி, தன் மேஜிக் ஷோ கடையை கட்டினார். மறக்காமல் குடத்தை எடுத்து தனியாக பத்திரப்படுத்திக் கொண்டார்.
அந்த வருடம் டூருக்கு செல்வி புவனேசுவரியாக வந்தவர், வெள்ளி விழா நினைவாக பழைய வாசகர்களுக்காக நடைபெற்ற டூரில், திருமதி புவனேசுவரியாக கலந்து கொண்டார். இடைப்பட்ட, 10 ஆண்டுகளில், அவரிடம் இமாலய வளர்ச்சி. திருமணம் முடிந்து ஜப்பான் சென்றவர், இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். பரதநாட்டியமாடுவதில் வல்லவரான இவர், ஜப்பானில் நாட்டியப்பள்ளி துவங்கி, பரதத்தை பரப்பி வருகிறார். தற்போது, சிங்கப்பூரிலும் இந்த சேவையை தொடர்கிறார்.
இவ்வளவு நடந்தாலும், ஆன்-லைனில் வாரமலர் இதழை தொடர்ந்து படித்து விடுவார். இந்த சூழ்நிலையில்தான் வெள்ளி விழா டூரில் வாய்ப்பு கிடைத்ததும், இதற்காகவே, ஜப்பானில் இருந்து சென்னை வந்திருந்தார்.
முன்பைவிட அவரிடம் கலகலப்பு கூடியிருந்தது. ஜப்பானில் பரதநாட்டிய பள்ளி நடத்துகிறார் என்று சொன்னதும், 'எங்கே ஆடிக்காட்டுங்க...' என்று வாசகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 'அதற்கான உடை மற்றும் இசை போன்ற எந்த தயாரிப்போடும் நான் வரவில்லை; ஆனாலும், வாசகர்கள் விரும்பும் போது ஆடாவிட்டால் எப்படி...' என்று சொல்லி, அருமையாக நடனமாடி மகிழ்வித்தார்.
கடந்த, 2004-ல் வரும் போது அவரது தந்தை தாமோதரனுடன் வந்திருந்தார். அவர், 'ஜகதலப்பிரதாபன் படத்தில் வரும், 34 பாடல்களும் எனக்கு மனப்பாடம்; எப்போது பாடிக்காட்டட்டும்...' என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அவருக்கு அந்த வருடம் அதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போனது. 10 ஆண்டுகள் கழித்து, திரும்ப சந்தித்த போது, 'சார் இன்னும் அந்த பாட்டெல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது; இந்த முறை எப்படியும் டூரில் பாடிருவேன்...' என்றார். இதன் காரணமாகவோ என்னவோ, புவனேசுவரி இரண்டாவது முறை வரும்போது அவரது தாயாருடன் வந்திருந்தார்.
இப்படி பழைய பாடல்கள் புகழ் தாமோதரன் வராத குறையை, அவர் பாடாத குறையை, ஐந்தருவியில் குளிக்கும் போது, சிவகாசியைச் சேர்ந்த வாசகி ஒருவர் தீர்த்து வைத்தார். அவர் யார் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
- அருவி கொட்டும்.
குற்றாலமும், தென்மலையும்...
குற்றாலத்திலிருந்து, 35கி.மீ., தொலைவில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது தென்மலை. இந்தியாவின் முதன்முதலாக உருவாக்கப்பட்ட 'எக்கோ ரூரிசம்' இது தான். மலைப்பகுதியான இங்கு, தேன் மிகுதியாக கிடைப்பதால், தேன்மலை என்று வழங்கப்பட்டு பின், மருவி தென்மலையானதாக தெரிவிக்கின்றனர்.
காட்டுப் பகுதியில், இயற்கை பாதிக்காத வகையில் தொங்கு நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. மான்கள் மறுவாழ்வு மையம், சூழ்நிலை கல்வி மையம், பொழுதுபோக்கு படகு குழாம் உள்ளது.
மேலும், கல்லடை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு நடைபாலத்தில் நடப்பதும், ஆற்றில் படகு சவாரி போவதும் சுகமான அனுபவம். லெஷர் ஜோன் என்ற பகுதியில் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் ஏராளமாக உள்ளதால், இங்கு குழந்தைகள் விளையாடி மகிழலாம்.
மரங்களை இணைத்தபடி, மரப்பலகையால், 117 படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இந்த படிகளில் ஏறி மரத்தின் உச்சிக்கு சென்று இறங்கி வரலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கல்லடை ஆற்றில் படகு சவாரியின் போது, செந்தூரணி சரணாலய விலங்குகளை படகிலிருந்தபடியே ரசிக்கலாம்.
ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி ஒரு புறமிருந்து இன்னொரு புறம் செல்வதும், சைக்கிள் சவாரியும், மலையேறுவதும், டிரெக்கிங்கும் சாகச விரும்பிகளுக்கு தீனிபோடும். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரவு, 7:00 மணியிலிருந்து, 7:30 மணி வரை நடக்கும், இசைக்கேற்ப நடனமாடும் நீருற்று தான் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. 'வந்தே மாதரம்...' என்ற பாடலுடன் தொடங்கும் நீருற்று நடனம், பல்வேறு மொழிப் பாடல்களால் பார்வையாளர்களை கட்டி போடுகிறது.
எல். முருகராஜ்

