
டிசம்பர் மாதம், சென்னையில் சங்கீத சீசன் களை கட்டிவிடும். அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய, 'நகைத்தல் நல்லது' நூலில், 'பாட்டுக் கச்சேரி' என்ற தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை கண்ணில் பட்டது. பொதுவாக, இவரை, சீரியஸ் எழுத்தாளர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நகைச்சுவையாக எழுதுவதில், கல்கி மற்றும் எஸ்.வி.வி.,க்கு சளைத்தவர் அல்ல என்று தோன்றியது.
சர்மா எழுதுகிறார்:
அன்று ஞாயிற்றுக்கிழமை; சரியாக, 3:00 மணிக்கு காபி சாப்பிட வந்துவிட்டான், என் நண்பன் பூவராகம். ஞாயிற்றுக்கிழமையென்றால், என் வீட்டில்தான் காபி குத்தகை அவனுக்கு. அன்று மட்டும், அவன் வீட்டில் போடுகிற காபி நன்றாயிருப்பதில்லையாம்.
வழக்கம் போல் வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுவிட்டு, 'சோழவந்தான் குடி சோமேச பாகவதருடைய கச்சேரியாமே... போகலாமா?' என்றான். என்னையறியாமல் தலையசைத்து விட்டேன்; பிடித்தது சனியன் என்னை. டிக்கெட் எட்டணா! எனக்கு மட்டும்தான் எட்டணா அழுதேன் என்கிறீர்களா... பூவராகவனுக்கும் சேர்த்துதான்.
பெயர்தான் சோமேச பாகவதர்... ஆனால், நல்ல கறுப்பு; மயிர் நிறைந்த முகத்தின் நடுவில், கோவைப்பழம் போன்ற இரண்டு கண்கள். அந்தக் கண்களைப் பார்த்தாலே, சங்கீத தேவதை அவரிடத்தில் எவ்வளவு பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பது நன்கு தெரியும். அதனால்தான், ஆரம்பத்தில் ஹம்சத்வனி ராகத்தில், 'வாதாபி கணபதீம்' என்ற கீர்த்தனையை ஆரம்பிக்கிற போதே, என் தேகத்தில் வியர்த்துக்கொட்ட ஆரம்பித்துவிட்டது.
என் நண்பன் பூவராகமோ எனக்கு மேல் சங்கீதஞானம் கொண்டவன். பாகவதர், பல்லவியை முடித்து, சரணத்தை எட்டிப்பிடிக்க ஆரம்பித்தாரோ இல்லையோ, அவன் குறட்டை விட ஆரம்பித்தான். என் தோளின் மீது தலையை மொட்டு மொட்டென்று இடிக்கத் துவங்கிவிட்டான். பாகவதருடைய அபார சங்கீதத்தை சகித்துக் கொண்டிருப்பதா அல்லது இவனுடைய தலையிடியை சகித்துக் கொண்டிருப்பதா என்று எனக்குத் தெரியவில்லை.
பாகவதருடைய சங்கீதம் ஒருபுறம் இருக்கட்டும்; அவருடைய அங்க சேஷ்டைகள் இருக்கின்றனவே... அடேயப்பா! இவற்றை அவர் எங்கிருந்துதான் கற்றாரோ தெரியவில்லை. ஆரோகணத்தில் அவர் தம் முகத்தை படுத்துகிற பாட்டை, அவரைப் படைத்த அந்த பிரம்மதேவன் ஒருமுறை பார்ப்பானாகில், 'இவரை ஏன் படைத்தோம்...' என்று தன்னையே நொந்து கொண்டிருப்பான். இந்த ஆரோகண காலங்களில், அவருடைய இரண்டு கண்களும் நெற்றியிலே ஏறி, ஏன் இந்த இடத்திற்கு வந்தோம் என்று தெரியாமல், மிரள மிரள விழிக்கின்றன. அவருடைய மூக்கிலுள்ள இரண்டு துவாரங்களும், தாராளமாக ஒரு கயிற்றை உள்ளே நுழைத்து, இரண்டு காதுகளின் வழியாக இழுத்து வந்து, இவர் தலையசைக்கிற போது, இழுத்துப் பிடித்துக் கொள்வதற்கு வாட்டமாய் விரிந்து கொடுக்கிறது. அவருடைய இரண்டு கைகளும், நீண்டு நீண்டு மடங்குவதும், 'யார் உங்களை இந்தக் கச்சேரிக்கு வரச் சொன்னது...' என்று நம்மைப் பார்த்து கேட்பதுபோல் கைகளைக் குத்திக் குத்திக் காட்டுவதும், இவையனைத்தையும் ஒரே சமயத்தில், நாம் பார்ப்போமானால், நாம் கச்சேரிக்கு வந்திருக்கிறோமா அல்லது மிருகக்காட்சி சாலைக்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் யாருக்குமே உண்டாகும்.
சர் தாமஸ் மன்றோ, 1813ல் இங்கிலாந்து பார்லிமென்டில் பேசியது:
'இந்தியாவுக்கும், பிரிட்டனுக் கும் இடையே நாகரிகம் என்பது ஒரு வியாபாரப் பொருளாக ஆகுமேயானால், இறக்குமதியால் பிரிட்டன் லாபமடையும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்...'
— இந்த மன்றோ சிலை சென்னை பாரிமுனையில் உள்ளது.
நடுத்தெரு நாராயணன்

