PUBLISHED ON : அக் 14, 2012

அமெரிக்காவின் மிசூரி மாகாணம், கன்சாஸ் நகரத்தில், தனியார் நிறுவனத்தின் சார்பில், மிருக காட்சி சாலை அமைக்கப் பட்டுள்ளது. இது, மற்ற மிருக காட்சி சாலைகளை விட, வித்தியாசமானது. அடர்ந்த வனப்பகுதியிலோ அல்லது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்திலோ, இல்லாமல், மிகப் பெரிய பங்களாவில், செயல்பட்டு வருகிறது.
அரிய வகை விலங்குகள் சில, இந்த பங்களாவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வளர்க்கப்படும் விலங்குகளில், ரொம்பவும் ஸ்பெஷல் எது தெரியுமா? மெதுஷா என பெயரிடப் பட்டுள்ள, பிரமாண்டமான மலைப் பாம்பு தான். இதன் நீளம், 25 அடி. எடை, 136 கிலோ. இந்த மலைப் பாம்பை தூக்குவதற்கு, குறைந்தது, 15 பேராவது வேண்டும்.
மலைப் பாம்பு என்றதும், பீதி அடைய தேவையில்லை. மான், முயல் போன்ற விலங்குகளைப் போல், மிகவும் சாதுவான குணமுடையதாக, மெதுஷா பாம்பு வளர்க்கப்பட்டுள்ளது. இதனால், இதை காண வரும் பார்வையாளர்கள், எந்தவித பயமும் இல்லாமல், அதன் அருகே அமர்ந்தும், அதை, தங்கள் மடியில் தூக்கி வைத்தும், புகைப்படத்துக்கு <உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.
முயல், மான், பன்றி போன்றவை தான், இதன் உணவு. 40 கிலோ எடையுள்ள விலங்குகளை, சர்வ சாதாரணமாக தின்று தீர்க்கிறது, இந்த சாதனைப் பாம்பு மெதுஷா. இதற்கு பயிற்சி அளித்து, பராமரித்து வரும், லாரி எல்கார் கூறுகிறார்: 'மெதுஷா, 24 அங்குல நீளமுடைய குட்டியாக இருக்கும்போது, இங்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அதற்கு, எட்டு வயதாகிறது. அதன் நீளம், 25 அடி. வயது அதிகரிக்க, அதிகரிக்க அதன் நீளமும், எடையும், மேலும் அதிகரிக்கும். பொதுவாக, மலைப் பாம்புகள், மனிதர்களையும் உண்ணும். இதனால், துவக்கத்தில், நான் கூட, மெதுஷாவுக்கு அருகில் செல்ல, பயந்தேன். தற்போது, சாதுவான ஜந்து ஆகி விட்டதால், பார்வையாளர்கள், அதை செல்லமாக கொஞ்சுகின்றனர். உலகில், சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள, உயிருள்ள மலைப் பாம்புகளில், மிக நீளமானது என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில்,மெதுஷா இடம் பெறப் போவது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...' என்கிறார்.
***
எம். கார்த்திக்
