PUBLISHED ON : மே 17, 2020

செலவே இல்லாமல், பிரமாண்டமான கோவிலை கட்ட முடியுமா... மனமிருந்தால் மார்க்கமுண்டு.
திருவள்ளூர் அருகிலுள்ள, திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில், இப்படித்தான் கட்டப்பட்டது. இதுபற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்வோம்.
திருநின்றவூரில் வசித்தவர், பூசலார் எனும் சிவ பக்தர். சிவனுக்கு கோவில் கட்ட வேண்டுமென்பது, இவரது ஆசை. குறைந்த வருமானம், அதற்கு இடம் கொடுக்க வில்லை.
மனதுக்குள், தன்னை ஒரு பணக்காரராக கற்பனை செய்து கொண்டார்.
கற்கள் வேண்டுமா, வண்டி வண்டியாக குவிந்தது. தலை சிறந்த சிற்பிகள் வேண்டுமா, பல இடங்களில் இருந்தும் வரவழைத்தார். மனதுக்குள்ளேயே கோடிகளை குவித்தார். இப்படி, பிரமாண்டமான கோவில் தயாரானது. கும்பாபிஷேகத்திற்கும், நாள் குறித்து விட்டது, மனம்.
இந்த சமயத்தில், காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னன் காடவர்கோன், சிவனுக்கு, கோவில் கட்டி, கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தான். அன்றிரவில், காடவர்கோன் கனவில் எழுந்தருளினார், சிவன்.
'ஏனப்பா... ஒரே நாளில், இரண்டு பேர் கும்பாபிஷேகம் நடத்தினால், நான் எங்கே போவேன்... அதிலும், திருநின்றவூரில் என் பக்தன் பூசலார், உன்னிலும் பிரமாண்டமான கோவில் கட்டி, உனக்கு முன்னதாகவே நாள் குறித்து விட்டான். நீயும் அதே நாளில் அழைத்தால் என்ன செய்வேன்...' என்று கேட்டு, மறைந்தார்.
காடவர்கோன், திடுக்கிட்டு விழித்தான். திருநின்றவூர் சென்று, பூசலாரிடம் அவர் கட்டிய கோவில் பற்றி கேட்டான்.
'மன்னா... நான் நிஜத்தில் கோவில் கட்டவில்லை. என் மனதில் கோவில் கட்டி, கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தேன். அந்த கோவிலுக்குள், சிவன் எழுந்தருளப் போகிறாரா?' என்று மெய்சிலிர்த்தார்.
பூசலாரின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில், திருநின்றவூரிலும் ஒரு கோவில் கட்டினான், மன்னன். திரு இருதயாலீஸ்வரர் என்பது, அங்குள்ள சிவனின் பெயர். கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரத்தில் அவன் கட்டிய கோவில், கைலாயத்துக்கு நிகரானது என்பதால், கைலாசநாதர் கோவில் என்று, பெயர் சூட்டினான்.
இங்குள்ள கருவறையைச் சுற்றி, சொர்க்கவாசல் எனும் பிரகாரம் உள்ளது. இந்த வாசலுக்குள் நுழையும் இடமும், வெளிவரும் இடமும், குறுகலாக இருக்கும். இதற்குள் நுழைந்து வெளியே வந்தால், மறுபிறப்பு இல்லை என்பது விசேஷ தகவல்.
'சேண்ட் ஸ்டோன்' எனப்படும், மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோவில், கலைநயம் மிக்கது என்பதால், தொல்பொருள் துறை பராமரித்து வருகிறது.
திருவள்ளூரிலிருந்து, 18 கி.மீ., துாரத்தில், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில், கைலாசநாதர் கோவிலும் உள்ளன.
தி. செல்லப்பா

