முதியவர்கள் அல்ல முக்கியஸ்தர்கள்!
சமீபத்தில், என் தோழனின் ஊருக்கு சென்றிருந்தேன். அங்கு, நியாய சபை என்ற அமைப்பு உள்ளது. இது, அரசியல் சார்ந்த அமைப்பு அல்ல. இச்சபையில், 40க்கும் மேற்பட்ட முதியோர்களே உறுப்பினர்களாக உள்ளனர். எட்டு பேர் வீதம், ஐந்து குழுக்களாக உள்ளனர்.
இக்குழுவில் சிலர், காலி மனைகளை வைத்துள்ளனர். அவ்விடத்தில், முருங்கை, கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை, மிளகாய், பாகற்காய், தென்னை போன்ற காய் வகைகளையும்; சப்போட்டா, மா, வாழை, மாதுளம், கொய்யா, சீதா போன்ற பழ வகை மரங்களையும்; புளிச்ச கீரை, தண்டு கீரை, பொன்னாங்கண்ணி போன்ற கீரை வகைகளுடன் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும், ஒரு குழு, பணிகளை சுழற்சி முறையில் செய்கிறது. மேலும், தங்கள் ஊரில் கிடைக்கும் காய்கறி கழிவுகளை மண்புழு சேர்த்து மக்கச் செய்து, உரம் தயாரித்து, தோட்டத்திற்கு இடுகின்றனர். இதனால், விளைச்சல் அமோகமாக உள்ளது. கிடைக்கும் லாபத்தை, தங்களுக்குள் சமமாக பங்கிட்டு கொள்கின்றனர்.
இதுதவிர, இச்சபை உறுப்பினர்கள் வீட்டில், ஏதேனும் சுப நிகழ்ச்சி என்றால், நியாய சபை கூடும். உறுப்பினர்கள் அனைவரும், தங்களால் இயன்ற பணத்தை வழங்குவர். இதன் மூலம் கணிசமாக ஒரு தொகை சேரும். இதற்கு எந்த வட்டியும் கிடையாது. பணம் பெறும் உறுப்பினர், ஒரு குறிப்பிட்ட கால கெடுவிற்குள், சிறு சிறு தவணையாக பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.
'வயது முதிர்ந்த காலத்தில் எப்படி வேலை செய்ய முடிகிறது...' என, அவர்களிடம் வினவினால், 'நாங்கள் எங்கே வேலை செய்கிறோம், எங்கள் உடல் நலத்திற்காக உடற்பயிற்சி தானே செய்கிறோம். மேலும், ஒன்று கூடி செய்வதால், வேலை பளு தெரியவில்லை; தனிமையும் தெரியவில்லை...' என்கின்றனர்.
நாட்டின் நலத்திற்கும், வீட்டின் நலத்திற்கும் பெரும் துணையாக உள்ள முதியோரை வணங்கி, பாராட்டி வந்தேன்.
- கே. குமார், கடலுார்.
மூலிகை தோட்டம் அமைக்கலாமே!
வயதான பெண்மணி ஒருவர், பக்கத்து கிராமத்திலிருந்து வந்து, எங்கள் வீட்டில் பணி செய்து வருகிறார். அவர் வரும்போதெல்லாம், எங்கிருந்தாவது துளசி, கற்பூரவள்ளி செடி மற்றும் வெற்றிலை கொடி வகைகளை எடுத்து வருவார். அவற்றை, எங்கள் வீட்டின் வேலி ஓரத்தில், 6க்கு 6 அடி அளவுள்ள இடத்தில், நட்டு வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றுவார்.
கை கழுவும் தண்ணீரை கூட வீணாக்காமல், நட்டு வைத்துள்ள செடிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்.
நாளடைவில், இந்த மினி தோட்டத்தில், வெற்றிலை, கற்பூரவள்ளி, துளசி, கருந்துளசி, நித்ய கல்யாணி, வல்லாரை, துாதுவளை, பசலை கீரை, சித்தரத்தை, திருநீர்பத்திரி, ஆடாதொடை, மனத்தக்காளி போன்ற செடிகள் வளர்ந்துள்ளன. கொடி வகைகள், வேலியில் படருகின்றன.
ஊரடங்கு காலத்தில், அவர் வராததால், நான் தான் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவேன். இவைகளின் வளர்ச்சியை பார்த்து பிரமித்தேன். இப்போது, எங்கள் வீட்டில், இவை இல்லாத சமையலே இல்லை. தினமும் நாலு இலையை பறித்து போட்டு மருத்துவ சமையல் தான். இப்போது, வேப்பம் பூ பூத்திருப்பதால், அதையும் சிறிது சேர்த்துக் கொள்கிறோம்.
அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் சளி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக, இங்கு வந்து மருத்துவ இலைகளை பறித்துச் செல்கின்றனர். முக்கியமான இக்காலகட்டத்தில், அதிக செலவில்லாமல், இதுபோன்ற மருத்துவ செடிகளின் பயன்பாட்டை நினைத்து, அப்பணிப் பெண்ணுக்கு, மானசீகமாக நன்றி சொல்லி வருகிறேன்.
உங்கள் வீட்டிலும், இதுபோல சிறியதாக இடம் இருந்தால், செடி, கொடிகளை நட்டு வைத்து, தேவையான காலத்தில் அனைவரும் பயன்பெறலாம்.
- கி. ரவிக்குமார், நெய்வேலி.
சபாஷ் ஐடியா!
ஒருநாள், தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். வீடு கட்டி, பல ஆண்டுகள் ஆகியும், பளீச்சென்று புதிது போல் இருந்தது.
'பெயின்டிங், சுண்ணாம்பு என, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகியது...' என்றாள்.
அவள் கணவர், சாதாரண வேலை தான் பார்க்கிறார்.
'ஒரு லட்சம் வரை செலவு செய்ய, எப்படி சமாளித்தாய்...' என்றேன்.
'இது, எங்க சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக எண்ணி, மாதம், 2,000 ரூபாய் வீதம் ஆர்.டி.,யில் போட்டு விடுவோம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, வீட்டு பராமரிப்பு வேலைகளுக்கு எடுத்து, செலவு செய்து கொள்வோம்...' என்றாள்.
தோழியின் யோசனை, மிக நல்ல யோசனை தான் என்று மனதுக்கு பட, நானும், அவள் வழியை பின்பற்ற முடிவு செய்தேன்.
என்ன... நீங்களும் தானே?
—என். குர்ஷித், நெல்லை.

