/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (2)
/
சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (2)
PUBLISHED ON : மே 17, 2020

செங்கல்பட்டில் வசித்தபோது, பால்ய நண்பரும், பள்ளி தோழருமான ஸ்ரீதரும், நானும், படிப்பதை விட, நாடகம், விகடம் போன்றவற்றில் நாட்டம் உள்ளவர்களாக இருந்தோம். 'இப்படியே விட்டால், உருப்பட மாட்டான்...' என்று எண்ணிய பெற்றோர், என்னை, 'இன்டர்மீடியட்' படிக்க, காரைக்குடி அனுப்பினர்.
அங்கே போய் படித்து முடித்து, வேலை தேடும் படலம் ஆரம்பமானது. இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அந்த கம்பெனியின், 'ஆயுள்' குறைவாகி போனதால், வேலை போனது.
இன்னொரு கம்பெனியில், 'குடுமி வைத்து வா, வேலை தருகிறேன்...' என்றனர்.
'என் கிராப் தலைக்கு ஏற்ற வேலை இல்லையா...' என்றேன்.
'வெளியே போ...' என்று, துரத்தினர்.
செங்கல்பட்டில், சினிமா தியேட்டர் வைத்திருந்த நண்பனுக்கு உதவ சென்றேன். உண்மையில் உதவி செய்கிறேன் என்ற பெயரில், நிறைய சினிமா பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
பலமுறை, பராசக்தி படத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும், சிவாஜியின் நடிப்பும், வசனமும் எனக்குள் சந்தோஷத்தை தரும். சிவாஜியின் நடிப்பையும், வசனத்தையும் கேட்டு, ரசிகர்கள் சிலாகித்ததை பார்த்து பரவசமடைந்து, சினிமாவுக்கு இருந்த கவர்ச்சியை உணர்ந்தேன்.
சிவாஜிக்கு, நான் நெருங்கிய நண்பனாக மாறுவேன்; அவருக்காக, கதை, வசனம் எழுதுவேன்; அவருடன் பல ஊர்களுக்கும் பயணம் செய்வேன்; அவரே, என்னை பாராட்டி, விருந்து கொடுப்பார் என, கனவிலும் நினைத்து பார்த்தது கிடையாது.
எல்லாம் நல்லபடியாக நடந்தது. அதற்கான முதல் படியாக, பரிசாக அமைந்தது தான், கல்யாண பரிசு படம்.
வேலை தேடும் படலத்தில், கடைசியாக, சென்னையில் உள்ள, ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் ஒன்றில், மேனேஜர் வேலை கிடைத்தது. மாத சம்பளம், 200 ரூபாய்.
ஒழுங்கா பொறுப்பா வேலைக்கு போய், வந்து கொண்டிருந்தேன். திடீரென ஒருநாள், என்னை தேடி வந்தார், ஸ்ரீதர். என்னை கையை பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக, காரில் அழைத்துச் சென்றார்.
அப்போது, இரண்டொரு படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருந்தார், ஸ்ரீதர். முதல் முறையாக, கதை, வசனம் எழுதி, ஒரு படத்தை இயக்கவும் செய்தார். அந்தப் படம் தான், கல்யாண பரிசு. அதற்கு நான் தான் நகைச்சுவை வசனம் எழுத வேண்டும்.
அதனால், 'பார்த்துக் கிட்டிருக்கிற வேலையை விட்டுடு... நான், 400 ரூபாய் சம்பளம் தருகிறேன்...' என்று சொல்லி, காரில் வைத்தே, ராஜினாமா கடிதம் எழுத வைத்து விட்டார்.
இதெல்லாம், என் மனைவி கமலாவிற்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்ற பயம். ஆகவே, அவளிடம் சொல்லவில்லை. ஆபீசுக்கு போவது போல தயாராகி, சினிமா கம்பெனிக்கு போய் வருவேன்; ஏதாவது குழப்பம் நடந்தால், அதற்கேற்ப, 'டூப்' விட்டு சமாளித்து விடுவேன்.
என் அனுபவத்தையே, படத்தில் நகைச்சுவை ஆக்கினேன். தங்கவேலு, 'டூப்' மாஸ்டர். எம்.சரோஜா, அவரது மனைவி மாலினி. படம் வளர வளர, 'டூப்' மாஸ்டர் கேரக்டரும் வலுவாகிக் கொண்டே வந்தது.
கதையில், 'டூப்' மாஸ்டர் தங்கவேல், 'மன்னார் அண்ட் கம்பெனி' வேலையை விட்டு, எழுத்தாளர் பைரவனாக, அடுத்த அவதாரம் எடுத்திருந்தார்.
'எழுத்தாளர் பைரவன நேரில் பார்த்து இருக்கீயா... இப்ப பார், இங்கே பார், இப்படி பார்... சாட்சாத், அந்த பைரவன் நான் தான். உன், ஹஸ்பென்ட்...' என்று, 'சீன்' போட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், நிஜ எழுத்தாளரான நான், என் மனைவியிடம் அதைச் சொல்லலாமா வேண்டாமா... மேனேஜர் பெண்டாட்டி என்று சொல்வதை விட்டு, எழுத்தாளர் பெண்டாட்டி என்று சொல்ல விரும்புவாளா என்றெல்லாம், என் மனதிற்குள் ஒரே குழப்பம்.
வீட்டிலும் சந்தேகம் வலுத்தது.
'என்னது, உங்கள கூப்பிட காலைல, 7:00 மணிக்கெல்லாம் கம்பெனி கார் வருது... உங்க கம்பெனியில், அப்படி என்ன வியாபாரம் நடக்குது...' என்று, குடைந்து கொண்டே இருந்தவர்; ஒருநாள், நேரில் வருவதாகவும் பயமுறுத்தினார்.
ஒருநாள், வசமா மாட்டிக் கொண்டேன். தங்கவேலு பாணியில், 'உள்ளதைச் சொல்லிடறேன்... நான் வேலையில் இல்லை...' என்றேன்.
கூடவே, நடந்ததை, நடந்து கொண்டு இருப்பதையும் சொன்னேன்.
அடுத்து, எரிமலை வெடிக்கப் போகிறது என்று பார்த்தால், 'நல்ல விஷயம் தானே... இதை ஏன் எங்கிட்ட மறைச்சீங்க...' என்று, பொய் கோபம் கொண்டவர், 'நீங்களும், என்னை மன்னிச்சுருங்க... நானும், உங்ககிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன்...' என்றார்.
ஐந்தாவதும் கமலா!
கோபுவை பெற்ற தாய், ஒருவர் என்றாலும், வளர்ப்பு தாய் இன்னொருவர். கோபுவிற்கு திருமணம் என்ற பேச்சு வந்தவுடன், இரண்டு தாய்களுக்கும் இடையே கருத்து மோதல்.
'சுக்கும், மிளகும் தின்னு, முக்கி முனகி, பெத்தவ நான். எனக்கு
தெரியாதா, என் பையனுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும்...' என்று, இவரும், 'பொத்தி பொத்தி வளர்த்தவ நான். எனக்கு தான் தெரியும், என் பிள்ளைக்கு எப்புடி பொண்ணு வேண்டும்...' என்று, அவரும் மோதிக் கொண்டனர்.
இந்த கருத்து மோதலை மையாக வைத்து, எழுதி, இயக்கிய படம் தான், அத்தையா மாமியா.
கோபுவை பொறுத்தவரை, 'பெண்ணின் பெயர், கமலா என்று இருக்கக் கூடாது...' என, ஒரு நிபந்தனை இருந்தது.
காரணம், ஏற்கனவே வீட்டில், கமலா என்ற பெயரில் நான்கு பேர் வலம் வந்து கொண்டிருந்தனர். வருபவர் பெயரும், கமலா என்று இருந்து விட்டால், இன்னும் குழப்பம் வருமே என்று தான், அப்படி சொன்னார்.
ஆனால், கடைசியில் அவரை கை பிடித்தவர் பெயரும், கமலா தான்.
— தொடரும்
- எல். முருகராஜ்

