sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 17, 2020

Google News

PUBLISHED ON : மே 17, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே



மதுரையிலிருந்து, கடந்த, 7ம் தேதி, நண்பர் ஒருவர் போன் செய்தார். 7ம் தேதி தான் என்ன விசேஷம் என்று, உங்களுக்கு தெரியுமே!

அவர் கூறிய விஷயம்:

அங்கே, 'டாஸ்மாக்' கடைகளுக்கு சமூக இடைவெளி விட்டு, வட்டம் போட்டு வரிசைகள் அமைத்திருந்தனராம். அத்துடன், மூன்று பேர் நின்றிருக்க, நான்காவது நபருக்கு நாற்காலியும் போட்டிருந்தனராம்.

இதைக் கண்ட அதிகாரி ஒருவர், 'கொரோனா' பாதிக்கப்பட்டவன், அந்த நாற்காலியில் அமர்ந்தால், அடுத்து அமருபவனுக்கும் தொற்றிக் கொள்ளுமே என நினைத்து, நாற்காலியை அகற்ற சொன்னாராம்.

அடுத்து என்ன செய்தார் தெரியுமா?

சரக்கு வாங்க வருபவர்கள் அனைவரும், குடை ஒன்றை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும்; வரிசையில் நிற்கும்போது, குடையை விரித்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாராம்.

புத்திசாலி அதிகாரி தான்!

சென்னை, கோயம்பேடு சந்தையிலும் இதுபோல் செய்திருந்தால், இங்கு, இவ்வளவு பரவல் இருந்திருக்காதே என, நினைத்துக் கொண்டேன்!

எல்லா அதிகாரிகளும், புத்திசாலித்தனமாக சிந்திக்க கற்றுக்கொண்டால் என்ன?

ஒரு தாய், தன் மகனுக்கும், மருமகளுக்கும் கொடுத்த, கொடுக்க இருக்கிற தண்டனை பற்றி கேள்விப்பட்டேன்.

இதோ அது:

மகன், பெரிய மிருதங்க வித்வான். அமெரிக்காவில் நடக்கும் கர்நாடக கச்சேரிகளில், பெரும்பாலானவற்றில் இவர் இடம் பிடிப்பார்.

சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த கச்சேரியில், மிருதங்கம் வாசிக்க சென்று இருந்தவர், சென்னை திரும்பினார்.

'கொரோனா' அறிகுறி ஏதும் இல்லை என்று அறிந்த பின்னரே, வீடு திரும்பினார். ஆனாலும், அவரது தாய், தன் மகனை, அவரது படுக்கையறையில் வைத்து பூட்டி விட்டார்.

'கொரோனா' தடுப்புக்கு எத்தனை நாள் தனிமைப்படுத்த வேண்டும்? இரண்டு வாரம் - அதாவது, 14 நாட்கள்; தாயாரோ, மூன்று வாரம், 21 நாட்கள் தனிமைப்படுத்தி விட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில், அவரது அறை கதவு தட்டப்படும். அறை வாசலில் உணவு இருக்கும். உணவு உண்ட பின், அவரே பாத்திரங்களை சுத்தப்படுத்தி, அறை வெளியே வைக்க வேண்டும்.

நல்லவேளை, அவரது அறையிலேயே கழிப்பறை இருந்ததால், ஓரளவு தப்பித்தார்.

அவர் கழுவி வைத்த பாத்திரங்கள், இரண்டாவது முறையாக வீட்டினுள் சுத்தம் செய்யப்படுமாம்!

இதை விட கொடுமையைக் கேளுங்கள்:

இவர், ஒரு மாதம் அமெரிக்கா சென்று விட்டதால், அவரது மனைவி, தன், 10 மாத பெண் குழந்தையுடன், திருவனந்தபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்; அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

கணவர், 'ஜெயிலில்' இருப்பதை அறிந்து, சென்னை வர துடித்துள்ளார்.

அதற்கு, அரசு மூலம் ஏக கட்டுப்பாடு; அந்த பெண்ணின் தந்தையால் அவற்றை சரி செய்யத் தெரியவில்லை.

சென்னையில் இருக்கும் மாமியாரோ, 'நீ எப்படியாவது இங்கு வந்தாலும், 14 நாட்கள், அதாவது, இரண்டு வாரம் தனிமையிலே இருக்க வேண்டும்...' என, கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம்.

இரண்டு பேருக்குமே, எந்த அறிகுறியும் இல்லை... ஆனால், இருவரையும் இத்தனை நாள் பிரித்து வைப்பது நியாயமா?

இவர், நல்ல மாமியாரா, கொடுமைக்கார மாமியாரா?

எழுதுவீர்களா வாசகர்களே!

தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றி தெரியும் தானே. 'இன்று ஒரு தகவல்' என்ற தலைப்பில், முன்பெல்லாம் வானொலியில், தினமும் காலையில் பேசுவார். அதை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

அதில், ஒரு கட்டுரை:காலை நேரம் -

சீடர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவங்க முன் பேசுறதுக்காக, வருகிறார், புத்தர்.

வரும்போது, கையிலே ஒரு துணியுடன் வந்து மேடையிலே உட்கார்ந்தார். எதுவும் பேசாமல், அந்த துணியிலே முடிச்சுகள் போட ஆரம்பிச்சார், புத்தர்.

சீடர்களுக்கு எதுவும் புரியலே...

'என்ன இது, வழக்கமா பேசுவார். இப்போ அதுக்கு நேர்மாறா, வேறே எதுவோ பண்ணிக்கிட்டிருக்காரே'ன்னு பார்த்தாங்க.

தலை நிமிரலே... அவர் பாட்டுக்கு முடிச்சு போட்டுக்கிட்டே உட்கார்ந்திருக்கார், புத்தர்.

ஐந்து முடிச்சுகள் போட்டதுக்கப்புறம், தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தார்...

'சீடர்களே... இப்ப, நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன்; இதை அவிழ்க்க போறேன். அவிழ்க்கறதுக்கு முன்னாடி, உங்ககிட்டே ரெண்டு கேள்வி கேக்கப் போறேன்.

'முதல் கேள்வி என்னன்னா, முன்னாடி நான் வச்சிருந்த துணியும், முடிச்சு விழுந்த இந்த துணியும், ஒன்று தானா?' என்று கேட்டார்.

உடனே ஒரு சீடன் எழுந்து, 'பெருமானே... ஒரு வகையிலே எல்லாம் ஒண்ணு தான். முடிச்சுகள் மட்டும் தான் அதுலே வித்தியாசம்...

'முன்னாடி இருந்த துணி, சுதந்திரமுடையது. முதல் முடிச்சு விழுந்ததும், அதன் சுதந்திரம் போயிட்டுது; இப்போ இந்த துணி, அடிமைப்பட்டுக் கிடக்குது...' என்றான்.

'ஆமாம், நீ சொல்றது சரி தான்... ஒரு வகையில் ஒரே துணி தான். இன்னொரு வகையில் வேறுபட்டிருக்கு. எல்லாருமே இயல்பிலேயே கடவுளர் தான்; ஆனா, முடிச்சுப் போட்டுக்கிட்டு, சிக்கலில் மாட்டிக்கிட்டு, அடிமைப்பட்டுப் போயிடுறாங்க.

'நாம எல்லாருமே, அடிப்படையிலே, புத்தர்கள் தான்... ஆனா, தனிமைப்பட்டு போய், தனித்தனியே உலகங்களை சிருஷ்டித்துக்கிட்டு, அதுலே சிக்கி, தனிமைப்பட்டு போயிடுறாங்க. இதைத்தான், நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்பினேன்.

'சரி, இந்த முடிச்சுகளை அவிழ்க்கணும்ன்னா, என்ன செய்யணும்?' என்றார்.

இன்னொரு சீடன் எழுந்து, 'குருவே, அதை அவிழ்க்கணும்ன்னா, நான் அருகில் வர அனுமதிக்கணும். முடிச்சுகள் எப்படி போடப்பட்டிருக்குன்னு தெரியாத வரையில், அதை அவிழ்க்க வழியில்லே... முடிச்சு போட்ட முறை தெரிஞ்சா, அதை அவிழ்க்கிறது சுலபம். சில சமயம், அவிழ்க்கவே முடியாமல் கூட போயிடலாம்...' என்றான்.

நிமிர்ந்து பார்த்தார், புத்தர்.

'நீ சொன்னது சரி தான். அது தான் வாழ்க்கை. அது தான் வாழ்க்கையின் சிக்கல்... நம்முடைய சிக்கல்களுக்கு, நாம தான் காரணம். நம்மை அறியாமல், விழிப்புணர்ச்சி இல்லாம, நாம போட்டுக்கற முடிச்சுகள்லே சிக்கி, சிக்கலை அவிழ்க்க முடியாம திணறிக்கிட்டு இருக்கிறோம் நாம்...' என்று முடித்தார், புத்தர்.

'எதிர்த்த வூட்டுக்காரன் இருக்கானே, அவனாலே எனக்கு எப்பவும் சிக்கல் தான் சார்...' என்றான், நம் ஆள் ஒருத்தன்.

'ஏன் அப்படி சொல்றே?'ன்னு கேட்டேன்.

'எப்பப் பார்த்தாலும், '100 ரூபா கொடு, 100 ரூபா கொடு'ன்னு என்னை நச்சரிக்கிறான் சார்...' என்றான்.

'நீ, இல்லேன்னு சொல்ல வேண்டியது தானே...' என்றேன்.

'அது எப்படி... வாங்கிய கடனை இல்லேன்னு சொல்ல முடியும்...' என்றான், அவன்.

- இப்படி பல சுவையான தகவல்கள்

அப்புத்தகத்தில் உள்ளது; நேரம் கிடைக்கும் போது மற்றவற்றைத் தருகிறேன்!






      Dinamalar
      Follow us