
* என். சொக்கலிங்கம், விருதுநகர்: எப்போது தான், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் நிற்கும்?
ராகுல், தமிழக காங்கிரஸ் தலைவரானால், ஒருவேளை பூசல் நிற்கலாம்; ஆனால், இந்தியா முழுவதுமே இது நிகழ்கிறதே!
ஏ. கவுசியா, நெய்வேலி: செலவு போக, மீதியை சேமிப்பது சரியா? சேமிப்பு போக, மீதியை செலவு செய்வது சரியா?
சம்பளம் வாங்கியதும், ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக போட்டு விட்டு, மீதி தொகையை தாராளமாக செலவு செய்வதே சரி!
* ஜி. கண்ணாத்தாள், விருதுநகர்: ஆணுக்கு நிகராக பஸ் ஓட்டினாலும், ஆட்டோ செலுத்தினாலும், திருமண விஷயத்தில், தன்னிச்சையாக பெண்களால், முடிவு எடுக்க முடிவதில்லையே, ஏன்?
ஏன் எடுக்காமல்... நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் தவிர, மற்ற தொழில் செய்யும் பெண்களில் பலரும், தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனரே... சில பெண்கள், தாம் வளர்க்கப்பட்ட விதத்தால், இம் முடிவை எடுக்கத் தயங்குகின்றனர் என்பதே உண்மை!
என். பாலசுப்ரமணியன், கோவை: ஊரடங்கு முடிந்ததும், மக்கள் குவியும் இடங்களில், நகை அடகு கடைகள் முதலாவதாக இருக்கும் என எண்ணுகிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
உண்மை தான்! நிரந்தர வேலையில் இருப்போருக்கே, பாதி சம்பளமும், சம்பளமும் இல்லாமல் இருக்கிறதே? இதில், தினக் கூலிக்காரர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ!
அம்பை தேவா, சென்னை: இன்று, கருணாநிதி இருந்தால், தேர்தல் மூளையாளர் எனக் கருதப்படும், பிரசாந்த் கிஷோர் பற்றி என்ன நினைப்பார்?
அவரது பெயரைக் கூட கேட்க மாட்டார்; பிரசாந்த் கிஷோரைப் போல, நுாறு மடங்கு தேர்தல் அறிவுள்ளவர், கருணாநிதி. இன்று, அவர் மகன், கிஷோரை அருகிலேயே வைத்து இருப்பதைப் பார்க்கும்போது, அவரின் திறமையைத் தெரிந்து கொள்ளுங்கள்!
ஜி. குப்புசுவாமி, சென்னை: மூடப்பட்ட, 'டாஸ்மாக்' கடைகளில், பதநீர், பழச்சாறு விற்க வேண்டும் என, குமரி அனந்தன் கூறுகிறாரே...
புத்திசாலியான அரசியல்வாதி அவர் என, நினைத்திருந்தேன்... தான், வடிவேலுவுக்கு அண்ணன் என்பதை இந்த அறிக்கையின் மூலம் நிரூபித்து விட்டார்!

