PUBLISHED ON : மார் 13, 2016

மாற்றத்திற்கு உட்பட வேண்டியவன் மனிதன். சில மாற்றங்கள் நம்மை ஆரோக்கியமாக்கும்; சில அர்த்தமுள்ளதாக்கும்; சில, நம்மை அழிக்கவும் கூடும். மூன்றாவது வகையான மாற்றங்களால் தான், இன்றைய சமுதாயம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை, நம் பழக்க வழக்கங்கள் நவீனமாகி போனதால், உடல் உழைப்பு குறைந்து, இயல்பாக கிடைக்கும் நல்ல விஷயங்களையும், நாகரிகத்தின் பெயரில் இழந்து வருகிறோம். அதற்கு மிக பெரிய உதாரணம், வெஸ்டர்ன் டாய்லட் எனப்படும், மேற்கத்திய முறை கழிப்பறைகள்!
இதைக் கேட்டு பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறையை பயன்படுத்துவதில் ஒரு மனிதனின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது என்பது தான் உண்மை.
ஆதிகாலத்தில், மனிதன் தன் உடல் கழிவுகளை வெளியேற்ற பயன்படுத்தியது தான், குத்த வைக்கும் முறை! காலைக் கடன் கழிக்கும் இந்த ஆசனத்திற்கு, 'மலாசனம்' எனப் பெயர்.
இந்த ஆசனத்தால் குண்டலினி சக்தி மேல் எழும்பி, மலச்சிக்கல் பிரச்னைகள் தீருவதுடன், கால் மற்றும் முதுகு உறுதியடைகிறது.
கடந்த 19ம் நூற்றாண்டில், நாற்காலியில் உட்காரும் அமைப்பை கொண்ட கழிப்பறைகள், மேற்கத்திய நாடுகளில் பரவின. ஆரம்பத்தில், உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்காக, இத்தகைய கழிப்பறை உருவாக்கப்பட்டது. பின், சவுகரியம் கருதி, அனைவரும் பயன்படுத்த துவங்கினர்.
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன், மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த வசதி, தற்போது, சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் விதமாக அனைத்து இல்லங்களிலும், குடியேறி விட்டது.
இந்திய முறை கழிப்பறையில், குத்த வைத்து அமரும் முறையில், இயற்கையான அழுத்தத்தால் கழிவுகள் எளிதாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், வெஸ்டர்ன் டாய்லெட்டில் இயற்கை அழுத்தம் ஏற்படாததால், கழிவுகளும் முழுமையாக வெளியேறுவதில்லை.
வெளியேறாத கழிவுகள், மலக்குடலில் தேங்கி, நோய் தொற்றை ஏற்படுத்துவதுடன், இந்த கிருமிகள், அதை சுற்றியிருக்கும் திசுக்களிலும் பரவுவதால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். டாக்டர் புக்ரிட் மற்றும் டாக்டர் ஹென்றி போன்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் முடிவில், 'இந்திய கழிப்பறையே சிறந்தது...' என்று கூறியுள்ளனர்.
மேலும், கருவுற்ற பெண்கள், இந்திய கழிப்பறையை பயன்படுத்தினால், கருப்பையின் அழுத்தம் குறைந்து, சுகப்பிரசவமாகும் என, ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரோக்கிய வாழ்க்கை முறையை உலகிற்கு பயிற்றுவித்த இந்தியர்கள், இன்று மேற்கத்திய நாகரிகத்துக்கு அடிமையாகி விட்டனர்.
ஒரு காலத்தில், நம் நாட்டில் கரி மற்றும் உப்பில் பல் துலக்கியவர்களை பார்த்து, அநாகரிகம் என்றவர்கள், 'இன்று உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா, கரி இருக்கிறதா...' என்கின்றனர். நாம் கடவுள் முன் போட்ட தோப்புக்கரணம் தான், இன்று மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும், 'சூப்பர் பிரைன்' யோகாசனம்!
பெரும்பாலான நேரத்தை நாற்காலியில் செலவிடும் நாம், இயற்கையாக கிடைக்கும் உடற்பயிற்சிகளை, இழந்து விட கூடாது. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும், ஆரோக்கியத் தத்துவத்தையும், உடற் பயிற்சிகளையும் கற்றுக் கொடுப்பது தான் நம் பாரம்பரியம்.
மனிதனுக்கு மனச்சிக்கலும், மலச்சிக்கலும் இருக்கவே கூடாது; இருந்தால், அவன் வாழ்வே போராட்டம் தான்.
யோசிப்போம்!
ஷோபனா திருநாவுக்கரசு

