
பி.மாலதி, சென்னை: அரசு பணியிலுள்ள வரனை எதிர்பார்த்து, கிடைக்காமல், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவரை திருமணம் செய்து கொண்டேன். எதிர்பார்த்தது கிடைக்காமல் போய் விட்டது. மனதை திருப்திப்படுத்திக் கொள்வது எப்படி?
மனித ஆசைகளுக்கு அளவேது? அரசு பணியிலுள்ள மாப்பிள்ளையே கிடைத்திருந்தால் கூட, 'அவர் ஆபீசராக, செக் ஷன் ஹெட்டாக, தாசில்தாராக இல்லயே...' என நினைப்பீர்கள். நடந்ததை மறந்து விடுங்கள். நிகழ்காலம் தான் வாழ்க்கை! அதை மகிழ்ச்சியாக்கிக் கொள்ள முயலுங்கள்!
எஸ்.தாமரைச்செல்வி, கூடலூர்: என்ன தான் அடங்கிப் போனாலும், என் கணவர், என்னை அடித்து துன்புறுத்துகிறார். என்ன செய்வது?
சம்பாதிக்கிறோம் என்ற திமிர், பெண்களை விட தமக்கு உடல் வலிமை உள்ளது என்ற ஆணவம் தானே பெரும்பாலான ஆடவரின் இச்செயலுக்கு காரணமாகிறது. சொந்தத் காலில் நிற்க, தேவையான வருமானம் ஈட்ட தொழில் கற்று, சம்பாதிக்க ஆரம்பியுங்கள். அதன்பின், உங்கள் கணவரின் செயலில் முற்றிலும் வித்தியாசத்தைக் காண முடியும்!
பி.நிஷார் பாட்ஷா, புதுச்சேரி: இந்தியாவில் பொருளாதாரம் பரவலாக்கப்பட, எல்லாருக்கும் எல்லாம் மூன்று ஆண்டுகளில் கிடைத்திட, மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான திட்டம் என்ன?
'பொருளாதாரம் பரவலாக்கப்படும்; எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்...' எனக்கூறி, 80 ஆண்டுகளுக்கு பின், சில நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள கதியை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டுவதை படிக்கவில்லையா, பார்க்கவில்லையா? 'பொருளாதார பரவலாக்கல் - எல்லாருக்கும் எல்லாம்' திட்டங்கள் ஏட்டளவில் படிக்கவும், கேட்கவும் தான் இன்பமாக இருக்கும்; நடைமுறையில் செயல்படுத்துவது ரொம்பவும் சிரமம்!
பொ.சங்கர், காஞ்சிபுரம்: கணவனானவன், தன் ஆயுள் வரை நிச்சயம் தன் மனைவியை காப்பாற்றியே தீருவான். ஆனால், அவன் ஆயுளுக்குப் பின், அவள் வாழ பணமின்றி முடியாது. எனவே, மனைவி யாரை முதன்மையாக நேசிப்பது? சடுதியில் தோன்றி மறையும் கணவனையா அல்லது ஆயுள் வரை காப்பாற்றப் போகும் பணத்தையா?
கணவனுக்குப் பின் காப்பாற்ற போவதாக நம்பும் பணத்தையும், கணவன் தானே சம்பாதித்து சேர்த்து வைக்கிறான்... எனவே, சந்தேகமில்லாமல் யாரை நேசிக்க வேண்டும் என்பது தெரிகிறதல்லவா!
பி.கே.ரமேஷ், சென்னை: எனக்கு மனைவியாகப் போகிறவள் திருமணத்திற்கு பின்பும் படிக்கப் போவதாகவும், படிப்பு முடியும் வரை குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் கண்டிஷன் போடுகிறாள். என்ன செய்யலாம்?
உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள். கல்யாணத்துக்கு முன்பே தன் விருப்பங்களை, தேவைகளை ஓபனாக சொல்லும் பெண், எதையும் மறைக்க விரும்பாத பெண்ணாக இருப்பாள். பொறுப்பும் அதிகமாக இருக்கும்; தைரியமாக, 'எஸ்' சொல்லுங்கள்!
ஆர்.மதனா, கம்பம்: இக்காலப் பெண்களிடம் தங்களுக்கு பிடித்த, பிடிக்காத குணம் எது?
சமூகத்தில் தமக்கு சரி சமமான இடம் வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும், அந்த சரிசமமான அந்தஸ்து தரவல்லது கல்வி என்பதை உணர்ந்து, ஆண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறுவது, அவர்களை விட அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெறுவது! பிடிக்காத அம்சம்: வாய்கிழிய எவ்வளவு தான் வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து பேசினாலும், தமக்கு என்று வரும்போது, வரதட்சணை தர, வாய்ப்பொத்தி சம்மதம் தெரிவிப்பது!

