
அவர், ஓய்வு பெற்ற ஏ.எஸ்.பி., காவல் துறையில், 35 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் ஓய்வு பெற்றே பல ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தம் பணி காலத்தில், மிகச் சிறப்பாக பணியாற்றியவர் என, பிறர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.
சமீபத்தில், பொது இடம் ஒன்றில், அவரை சந்தித்த போது, காவல் துறையின் மதிப்பு படுபாதாளத்துக்கு போய் விட்டது பற்றி, வருத்தப்பட்டு பேசினார்...
'ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் புகழப் பட்ட தமிழ்நாடு காவல் துறையின் செல்வாக்கு சரிந்து போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து, நீங்கள் எழுதியதை ஒருமுறை படித்தேன். அதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்...
'ராஜாஜி, முதல்வராக இருந்த போது, சட்டமன்ற விவாதத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, செய்தித்தாளில் படித்ததைச் சொல்கிறேன் கேளுங்கள்...
'சட்டமன்ற உறுப்பினர் கோசல்ராம், முதல்வரிடம் ஒரு புகார் சொன்னாராம், அதாவது, அவர் ஒரு காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அந்த நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அவரை தகுந்த மரியாதை கொடுத்து வரவேற்கவில்லை என்பதும் புகார். அதற்கு, 'நீங்கள் ஏன் காவல் நிலையம் செல்ல வேண்டும்? உங்கள் பிரச்னையை என்னிடம் சொன்னால், நியாயமாக இருப்பின், காவல் துறை தலைவரிடம் சொல்லி நிவர்த்தி செய்வேனே...' என்றாராம் ராஜாஜி. அது, பொற்காலம். இப்போது நடப்பது என்ன என்பது ஊர் அறியும்; நான் விளக்கத் தேவையில்லை.
'மற்றுமொரு நிகழ்ச்சி... 1960ல், நான் பரமக்குடி சப் - இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்த சில நாட்களில் அங்கு தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன் போன்றோர் கலந்து கொண்டனர். இரவு, 10:00 மணி ஆனதும், ஒலி பெருக்கியை அணைக்கச் சொன்னேன். இளைஞர்கள், கூச்சல் போட்டு ஆரவாரம் செய்தனர். 'ஆளும் கட்சிய (காங்கிரஸ்) தடுக்க மாட்டீங்க; எங்களை மட்டும் விரட்டுறீர்களே...' என்றனர்.
'அதற்கு, 'நான் கண்டிப்பாக கட்சிப் பாகுபாடு பார்க்க மாட்டேன்...' என்று சொல்லி, ஒலி பெருக்கியை அணைக்க வற்புறுத்தவும், தலைவர்கள் தலையிட்டு, 'போலீசாரோடு தகராறு வேணாம்...' என்று கூறி, பொதுக் கூட்டத்தை முடித்தனர்.
'இதற்கு சில நாட்கள் கழித்து, அதே இடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடந்தது. உள்ளூர் எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமை. அதில், அமைச்சர் கக்கன் கலந்து கொண்டார். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே, தலைவர் சீனிவாசனிடம், தி.மு.க., பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவத்தை சொல்லி, 10:00 மணிக்கு மேல் ஒலி பெருக்கியை நிறுத்தி விடக் கேட்டுக் கொண்டேன்; அவரும் ஒப்புக் கொண்டார். பல கிராம நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 9:30 மணிக்கு மேல் தான், கூட்டத்திற்கு வந்தார் அமைச்சர் கக்கன்.
'அவர் உரையாற்றும் போதே, மணி, 10:00ஐ தாண்ட, நான் மேடைக்குப் பின் நின்று, தலைவர் சீனிவாசனை தொட்டேன். அவர் திரும்பிப் பார்க்கவும், என் கை கடிகாரத்தைக் காட்டி சமிக்ஞை செய்தேன். அதே சமயம், உரையாற்றியபடி இருந்த கக்கன், தற்செயலாக திரும்பியவர், தலைவருக்கு நான் காட்டிய சமிக்ஞையைப் பார்த்து விட்டார்.
'உடனே கூட்டத்தை நோக்கி, 'பாருங்கள்... நான் போலீஸ் மந்திரி பேசுறேன்; தலைவரிடம் கடிகாரத்தைக் காட்டி, 10:00 மணி ஆகிவிட்டது; மைக்கை நிறுத்துங்கள்...' என்கிறார் உள்ளூர் சப்-இன்ஸ்பெக்டர். இந்த மைக் உத்தரவு போட்டது நான் தான்; நான் போட்ட உத்தரவை நானே மீறக் கூடாது இல்லையா... அதனால், மைக்கை நிறுத்தி விட்டுப் பேசுகிறேன்...' என்றார், கக்கன்.
'இதில் வேடிக்கை என்னவென்றால், சிறிது தொலைவில் நின்றிருந்த, என் மேலதிகாரியான இன்ஸ்பெக்டர், அமைச்சர் என்னைப் பற்றி சொன்னவுடன், மிகவும் ஆக்ரோஷத்துடன் என்னை நோக்கி பாய்ந்து வந்தார். ஆனால், அடுத்த சில வினாடிகளில், அவர், என்னை பாராட்டும் விதத்தில் பேசவும், அப்படியே நின்று விட்டார்.
'இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்தாவது பார்க்க முடியுமா... நீங்களே நான் சொல்றதை, நம்ப மறுப்பீங்க...
'நான் சப்- - இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அந்த காலத்தில், பொதுவாக சட்டத்தை மதித்து, மரியாதை செய்தனர் மக்கள். சட்டத்தை மீறுபவர்கள் மீது, தயவு தாட்சண்யம் இல்லாமல், கண்டிப்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பர் என்ற அச்சம், மக்கள் மனதில் இருந்தது.
'ஒரு சப் - இன்ஸ்பெக்டரின் திறனை, அவர் நிலைய எல்லையில் நடக்கும் நிகழ்ச்சியை வைத்தே பெரும்பாலும் மதிப்பீடு செய்வர். நெடுஞ்சாலையில் தானியங்களை காய வைத்தும், சூடடிப்பதையும் பார்த்த மேலதிகாரி, அந்த சரக சப் - இன்ஸ்பெக்டருக்கு தண்டனை வழங்கினார். காவல் நிலையம் இருந்த தெருவில், சிறிது தொலைவில், ஒரு கொலை நடந்துவிட, பதவி நீக்கம் செய்யப்பட்டார் அந்த ஏரியா சப் - இன்ஸ்பெக்டர். காரணம், காவல் நிலையம் உள்ளதே என்ற பய உணர்வு ஏற்படும் வகையில், அவர் செயலாற்றவில்லை என்பது தான்!
'சைக்கிளில், 'டபுள்ஸ்' செல்பவர்கள், தூரத்தில் போலீசாரைப் பார்த்தால், இறங்கி செல்வர். லாரி கேபினில் பயணி இருந்தால், போலீசாரை தூரத்தில் பார்த்தாலே, இறக்கி விட்டு விடுவர். அனுமதிக்கப்பட்ட எண்ணிற்கு மேல், பஸ்களில் பயணிகளை ஏற்ற மாட்டார்கள். அப்படியே, தப்பித் தவறி, ஒன்றிரண்டு பயணிகளை ஏற்றினாலும், காவல் நிலையத்திற்கு தொலைவிலேயே இறக்கி விடுவர்.
'கண்டிப்புடன் காவல் துறை செயலாற்றிய முறையும், இடையில் அரசோ, வேறு சக்திகளோ புகுந்து தடைகள் செய்யாத காரணமும், இந்த மரியாதையை காவல்துறைக்கு தேடித் தந்தன. காலப் போக்கில் படிப்படியாக காவல்துறையின் பணிகளில் குறுக்கீடுகள் அதிகரிக்க, அதன் செயல்பாடும் பாதிப்படைந்து விட்டது.
'எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாக, சேவையை கடமையாக கருதி செயலாற்றிய ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் இனி வர வாய்ப்பில்லை. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சியின் எம்.எல்.ஏ., மாவட்ட, வட்ட, நகர, கிராம உறுப்பினர்கள் பயன் அடைய வழி செய்யா விட்டால், அந்த கட்சி ஆட்சியில் நீடிக்க முடியாது. ஆகவே, காவல் துறையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதற்கு அவசியம் ஏற்படுகிறது.
'போலீஸ் துறையை பொறுப்பில் வைத்துள்ள அமைச்சர், அவர் இஷ்டம் போல் துறை அதிகாரிகளை ஆட்டிப் படைக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில், 1971ல், மத்திய அரசு நியமித்த உயர்மட்ட வல்லுனர்களைக் கொண்ட, 'தேசிய போலீஸ் கமிஷன்' பரிந்துரைகள் வழங்கியது. நாடு பூராவும் வெகுவாக இந்த பரிந்துரைகள் பாராட்டப்பட்டன. ஆனால், இன்று வரை செயல்படுத்தப் படவில்லை.
'பரிந்துரைகளில் ஜீவ நாடியாக உள்ளது இது தான்: ஒவ்வொரு மாநில அரசும், ஒரு குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவிற்கு காவல் துறையை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தலைவராகவும், காவல்துறையின் தலைவர் செயலராகவும் இருப்பர். அந்த குழுவிற்கு ஆறு உறுப்பினர்கள், அவர்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஒருவர். மற்ற நான்கு பேர் ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பொது ஜன சேவையில் நாட்டம் கொண்ட நபர்கள். காவல் துறையின் நிர்வாகம், செயல்பாடுகள் எல்லாம் இந்த குழுவின் கண்காணிப்பில் வரும். அமைச்சரோ, வேறு எந்த நபரோ தன் இஷ்டப்படி காவல்துறையின் செயல்பாடுகளில் குறுக்கிட முடியாது.
'ஆனால், இந்த பரிந்துரையை, இதுவரை எந்த மாநிலமும் செயல்படுத்தவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் வரை, இதை பாராட்டி வரவேற்றுப் பேசும் அரசியல் கட்சிகள், ஆட்சியைப் பிடித்ததும், அதை மறந்து விடுகின்றன.
'இதை பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வரும் பொதுத் தேர்தலில், இந்த பரிந்துரையை செயல்படுத்த வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிக்கு ஓட்டளிக்கும்படி எழுதுங்கள்! மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்...' என்றார்.

