PUBLISHED ON : நவ 12, 2023

நல்ல நாள் பார்த்து மண்டபத்துக்கு சொல்லியாயிற்று. சமையல், மைக்செட், பாத்திர பண்டம், 'டெக்கரேஷன்' என, எல்லா பொறுப்பையும், மண்டபக்காரர்களே எடுத்துக் கொள்வதாக சொல்லி விட்டனர். எல்லாவற்றுக்கும், முன்பணம் கொடுத்து, ரசீதும் வாங்கி விட்டார், விநாயகம்.
''ஆர்கெஸ்ட்ராவுக்கு மட்டும் வெளியே சொல்லிக்கோங்க...'' என சொல்லி, இரண்டு விசிட்டிங் கார்டு கொடுத்தார், மண்டப மேனேஜர்.
அதில், மேஸ்ட்ரோ இசைக்குழுவை, 'புக்' செய்தார், விநாயகம்.
விநாயகம் செய்யும் ஏற்பாடுகளை பார்த்துவிட்டு, ''என்னங்க நீங்க, இதெல்லாம் தேவையா... ஊர் கேலி பண்ணப் போகுது,'' என்றாள், மனைவி அமுதா.
வீட்டில், 20 ஆண்டுகளாக வேலை பார்க்கும் உரிமையில், ''ஐயா, எதை செய்தாலும் சரியா இருக்கும். நீங்க சும்மா இருங்கம்மா,'' என்றாள், பணிப்பெண் தாயம்மாள்.
''மதியம் சாப்பிட்டதும், எல்லாரும், ரம்யாவோட பங்ஷனுக்கு, புடவை எடுக்க போறோம் தயாராகுங்க,'' என்றார், விநாயகம்.
''இந்தப் புடவை, உனக்கு நல்லா இருக்கும் ரம்யா. எடுத்துக்கோ,'' அமுதா எடுத்து தந்ததை நிராகரித்தாள், ரம்யா.
''இதெல்லாம் புது டிசைன். மாடர்ன் பெண்களுக்கு பொருத்தமாகவும், 'ரிச்'சாகவும் இருக்கும்; விலையும் குறைவு,'' கடைக்காரர் சொன்னதை காதில் வாங்கவில்லை, ரம்யா.
''அதை எடுத்து காட்டுங்க,'' என, மூன்றாவது அடுக்கில், நான்காவதாக இருந்த சேலையை கை காட்டினாள்.
இது, இரண்டாவது துணிக்கடை. மூன்று மணி நேரமாக அலசுகின்றனர். இன்னும் எத்தனை கடை ஏறி, இறங்க வேண்டுமோ என்ற அலுப்பு இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, விநாயகம்.
'இப்படி, ஒரு புடவைக்கு மெனக்கெடும் இவர்கள், ஏன் வாழ்க்கையில் கோட்டை விடுகின்றனர்...' என, சிந்தித்தார்.
''ஏதாவது ஒரு புடவையை சீக்கிரமா எடு, ரம்யா. நேரம் ஓடிக்கிட்டே இருக்கு,'' பொறுமையிழந்து சொன்னாள், அமுதா.
''உனக்குன்னா, ஒரு மணி நேரம் தேடுவ. எனக்குன்னா அரை மணி நேரம் காத்திருக்க முடியாதா?'' கோபப்பட்டாள், ரம்யா.
''கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இந்த நிதானத்தையும், தேர்ந்தெடுப்பதையும், ஓடி போனப்ப காட்டியிருக்கலாம்.''
மனசுக்குள் இருந்தது, வாய் வழியே வெளிப்பட்டு விட்டது.
எதிர்பார்க்கவில்லை, அடிபட்டு போனாள், ரம்யா. அம்மாவை திரும்பி பார்த்தாள்.
வாய் தவறி வந்து விட்டது என்பதை உணர்ந்த அமுதா, தலையை தொங்கப் போட்டிருந்தாள்.
பொலபொலவென்று கண்ணீர் சிந்த, ''என்னை குத்திக்காட்டி பேசறியாம்மா?'' என்றாள்.
''சாரிடி... ஐ யம் வெரி சாரிடி...'' என்றாள், அமுதா.
''எனக்கு, புடவை எதுவும் வேண்டாம். வாங்க போகலாம்,'' என கோபமும், அழுகையுமாய் வெளியேறினாள், ரம்யா.
''ரம்யா... அம்மா பேசினதை மனசுல வச்சுக்காத. அவ, எப்பவும் இப்படித்தான். இது புதுசு இல்லை. உனக்கு பிடித்ததை வாங்கு,'' சமாதானம் செய்தார், அப்பா.
கண்ணீரை துடைத்தபடி, ''எனக்கு, எதுவும் வாங்க வேண்டாம். வாங்க போகலாம்,'' 'லிப்ட்'டை தவிர்த்து, 'கிடுகிடு'வென இறங்கினாள்.
''எவ்வளவு பிடிவாதம் பாருங்க. நான் என்ன சொல்லிட்டேன்னு இவ இப்படி கோவிச்சுக்கறா?''
''எதுவும் பேசாத. எல்லாம் உன்னால தான்,'' மகளின் பின்னாலயே, விநாயகமும் கீழே இறங்கினார். சற்றுநேரம் அமைதி காத்து, மூச்சிரைக்க போனாள், அமுதா.
அன்று புடவை, எதுவும் எடுக்கவில்லை.
ஆறேழு ஆண்டுகளுக்கு முன், பொங்கல் சமயம், துணி எடுக்க போனபோதும், இதே பிரச்னை தான்.
'நான், என்ன சொல்லிட்டேன்னு இவ இப்படி கோவிச்சுக்கறா?' அமுதா கேட்க, 'நீ, கொஞ்ச நேரம் சும்மா இரு...' மனைவியை அதட்டினார், விநாயகம்.
'அம்மாவும் வேண்டாம். நானும் வேண்டாம். நீ மட்டும் போய், உனக்கு பிடிச்ச டிரெஸ்சை எடுத்துக்கோ...' என்றார், விநாயகம்.
அன்று, ரம்யா சின்ன பெண். சமாதானம் செய்வதற்காக, விநாயகம் அந்த வார்த்தை சொன்னார். ஆனால், அது கூட ரம்யாவுக்கு பிடிக்கவில்லை.
'பொம்பள பிள்ளைக்கு இப்படியெல்லாம் செல்லம் கொடுக்காதீங்க. கண்டிச்சு வளருங்க. அவ போக்குக்கு போகாதீங்க...' என்றாள், அமுதா.
'நல்லதோ, கெட்டதோ, கட்டிக்கப் போறது அவதானே... அவ இஷ்டப்படி விடறதுல என்ன தப்பு?' என்று கேட்டார், விநாயகம்.
'தப்பு தான். இப்பவே இப்படி தன்னிச்சையா செயல்படறது, தப்பு தான். பின்னால இதுதான் பெரிசா வந்து நிற்கும். நாளைக்கே, 'பிடிச்ச பையனை தான் கட்டுவேன்'னு ஒத்தக்கால்ல நிற்கலாம். அப்போ, 'உன் இஷ்டப்படி இரும்மா'ன்னு விடுவீங்களா?'
'விட்டா என்ன தப்பு?' விநாயகம் கேட்க, அமுதாவின் முகம் சுருங்கியது.
வீட்டினுள் விநாயகம் நுழைந்தபோது, அறையில், கட்டிலில் குப்புற படுத்திருந்தாள், ரம்யா.
லேசான விசும்பல் சத்தம் கேட்டதும், ''ரம்யா, ஏன் சின்ன பிள்ளையாட்டம் நடந்துக்கற. எழுந்திரு. நீ அழறது சுத்தமா எனக்கு பிடிக்கலை. படிச்ச பொண்ணு நீ. நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் வேணும் உனக்கு. சாமானியர்களை போல வீழ்ந்து விட நினைக்கிறாயா?'' என்றார், விநாயகம்.
மெல்ல திரும்பி எழுந்து உட்கார்ந்தாள், ரம்யா.
கண்ணீரை துடைத்தபடி, ''அம்மாவே என்னை புரிஞ்சுக்கலயேப்பா...'' என்றாள்.
''அவ உன்னை புரிஞ்சுக்காட்டி என்ன? அம்மாவை நீ புரிஞ்சுக்க. அவ பழைய சம்பிரதாயங்களில் ஊறிப் போன மனுஷி. அவளுக்கு, பாரதியும் தெரியாது; புதுமையும் புரியாது.
''அவளுக்கு கற்பிக்கப்பட்டதெல்லாம் அடிமைத்தனம். மெல்ல தான் மாற்ற முடியும். நீதான் அவளுக்கு சொல்லித் தரணும். சொல்லடிக்கு பயந்தா, நீ முன்னேறவே முடியாது. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ என்று நினைத்து பயந்தால், அங்கே உன் சுயம் அடிபடும்.
''உன் வாழ்க்கையை, நீ வாழவே முடியாது; யாருக்காகவோ தான் வாழ வேண்டியிருக்கும். உளியில் அடிபடாமல் பாறைகள் சிலையாவதில்லை. புரிஞ்சுக்கோ,'' என்றார்.
''ப்ரூப் பார்த்து, பத்திரிகையை பிரின்டிங்குக்கு கொடுத்தாச்சாப்பா?'' கேட்டாள், ரம்யா.
''ம்... நாளைக்கு நல்ல நாள் தான், பத்திரிகை கைக்கு வந்துடும். உன் நண்பர்களுக்கெல்லாம் நீயே கொடுத்துடு. துணைக்கு நானும் வரணுமா?'' என்றார், விநாயகம்.
''வேண்டாம்,'' என்றாள்.
''அங்கே, அவங்க அதைச் சொன்னாங்க. இவங்க இதைச் சொன்னாங்கன்னு எதையும் மனசுல ஏத்திக்காத. எல்லாத்தையும் குப்பையில போடு. எல்லாரையும் அழைப்போம். வர்றவங்க வரட்டும், வராதவங்களை விட்டுடுவோம். அவங்களுக்காக வருத்தப்படவும் வேண்டாம்,'' என்றார்.
''சரிப்பா.''
''தைரியமா இரு. புதுசா உடுத்திக்கோ. 'ப்ரஷ்ஷா பீல்' பண்ணு. உனக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சுருக்கு. அதைக் கொண்டாடு. வாழ்க்கையை ஒவ்வொரு நிமிஷமும் வாழப் பழகு,'' என்றார்.
''இப்போ தெளிவா இருக்கேன்பா,'' என்றாள்.
''குட்!'' என, முதுகில் தட்டிக் கொடுத்தார், விநாயகம்.
மனசுக்குள் ஒரு புது தெம்பு வந்திருப்பதை உணர்ந்தாள், ரம்யா.
அச்சடித்த பத்திரிகைகள் வீட்டுக்கு வந்து விட்டது. எல்லாருக்கும் கொடுப்பதா அல்லது முக்கியமானவர்களுக்கு மட்டும் கொடுப்பதா என, முடிவுக்கு வர முடியாமல் குழம்பினர்.
''நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கம் யாரையும் விட வேண்டாம். எல்லாருக்குமே பத்திரிகை கொடுத்து விடலாம்,'' என்றார், விநாயகம்.
புது வீடு பால் காய்ச்சியபோது, நிறைய பேருக்கு சொல்லாமல் விட்டுப் போனதை ஞாபகம் வைத்து, ''யாரும் விட்டுப்போகாமல், எல்லாருக்கும் கொடுக்கணும்,'' என்றாள், தாயம்மா.
''கிராண்டா செய்யணுமா; நிறைய செலவாகுமேப்பா,'' என்றாள், ரம்யா.
''ஆகட்டுமே. பணம் பற்றி உனக்கென்ன கவலை. நான் நிறைய சம்பாதிக்கிறேன். ஒரே வாரிசு நீ. எல்லாம் உனக்கு தான்,'' என்றார், விநாயகம்.
எல்லா பத்திரிகைகளிலும், மஞ்சள் தடவியிருந்தாள், அம்மா. பார்த்ததும், ரம்யாவுக்கு சிரிப்பு வந்தது.
மறுநாள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி போனாள். எதிரே வந்த பால்காரர் வணக்கம் சொன்னதை ஏற்று, பதில் வணக்கம் சொன்னாள்.
டிரைவரிடம், ''இன்னைக்கு காரை நானே ஓட்டறேன். 'செல்ப் டிரைவிங்' பண்ணி ரொம்ப நாளாச்சு,'' என்றாள்.
''சரிம்மா,'' என்றார், டிரைவர்.
முதலில் தோழி பத்மபிரியா வீட்டுக்கு போனாள். இவளை கண்டதும், கட்டிப்பிடித்து உருகினாள், உயிர் தோழி.
பத்திரிகையை கொடுத்து, ''அவசியம் வரணும்டி,'' என்றாள்.
''கண்டிப்பா வரேன்டி,'' என்றாள்.
நண்பர்களிடம், விநாயகம் பத்திரிகையை நீட்டி அழைத்த இடத்தில் எல்லாம், 'இது, நம் வீட்டு பங்ஷன். நான் வராம இருப்பேனா...' என்றனர்.
'எங்க வீட்டு விசேஷத்துல, நீ முன்ன நின்னு எவ்வளவு வேலை பார்த்த... மறந்துடுவோமா, உன் வீட்டு விசேஷத்துல நாங்க கண்டிப்பா இருப்போம்...' என கூறினர், உறவினர்கள்.
ஆனாலும், 'இதெல்லாம் தேவையா?' என, கேட்டனர் சிலர்.
மாலை, 6:00 மணி.
களை கட்டியிருந்தது, மண்டபம். 'டெக்ரேஷன்' முடிந்து, உள்ளே, 'ஆர்கெஸ்ட்ரா'காரர்கள் பாடிக் கொண்டிருந்தனர். மின் விளக்குகள் சரம்சரமாய் தொங்கி வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன.
இலை போட்டால் சாப்பிட, தயாராய் இருந்தது, கூட்டம். 7:00 மணிக்கெல்லாம் மண்டபம் நிறைந்து விட்டது.
பெண்கள், பட்டுப் புடவையிலும், நகைகளிலும் தங்கள் அந்தஸ்தை காட்டினர். 8:00 மணிக்கு, 'ஆர்கெஸ்ட்ரா'வை நிறுத்தச் சொல்லி, 'மைக்'கை கையில் வாங்கினார், விநாயகம்.
''மை டியர் பிரண்ட்ஸ்...'' பேச ஆரம்பித்தார்.
கூட்டம் மொத்தமும் மேடையை நோக்கி திரும்பியது. ரம்யாவும், அமுதாவும் அருகே வந்தமர்ந்தனர்.
''எங்கள் அழைப்பை ஏற்று, இங்கே வந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா, உங்கள் எல்லாருக்கும் ஆச்சரியமளிக்கலாம். யாரும் செய்யாத புதுமை என்று நீங்கள் பாராட்டலாம் அல்லது இதெல்லாம் தேவையா என்று கேட்கலாம்.
''அப்படி சிலர், பத்திரிகை கொடுக்கும்போது கேட்டீர்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது, என் கடமை.
''பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா என்றால் எல்லாரும் சந்தோஷமாக கலந்து கொள்வோம். ஆனால், ஒரு விவாகரத்தை விழாவாக கொண்டாட இங்கே யாரும் விரும்புவதில்லை.
''அதை ஒரு இழப்பாகவும், துக்கமாகவும் தான் பார்க்கிறோம். அதன்பின் வாழ்க்கையே இல்லை என்றாகி, ஒரு மூலையில் முடங்கி விடுகிறோம். இது தேவையா என்று யோசித்ததன் விளைவு தான், இந்த விழா.
''திருமண வாழ்க்கையில் தோற்றுப் போன பலரை, நான் பார்த்திருக்கிறேன். இனி எல்லாம் முடிந்தது என்ற விரக்தியில், தற்கொலைக்கு முயன்றவர்களை கண்டு வருத்தப் பட்டிருக்கிறேன்.
''தேர்வில் தோல்வியடைந்தால் மறுபடி பரீட்சை எழுதுவது இல்லையா? அதுபோல, வாழ்க்கையில் தோல்வி அடைந்தால், ஏன் மீண்டும் நல்லதொரு வாழ்க்கைக்கு முயற்சிக்கக் கூடாது?
''நம் வீட்டு பெண்களுக்கு, ஜாதியிலும் சரி, ஜாதகத்திலும் சரி, எல்லா பொருத்தமும் பார்த்து தான் மணம் முடித்து வைக்கிறோம். ஆனால், எல்லாரது வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கிறதா?
''என் மகள் ரம்யாவின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆயிற்று. காதலித்த இருவரும், வாழ்க்கையில் சேர்ந்து பயணிக்க முடியவில்லை. பெரியவர்கள் சமாதானம் செய்தோம். சேர்த்து வைக்க முயற்சித்தோம்; முடியவில்லை.
''எங்கள் கவுரவத்திற்காக, அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என, நாங்கள் நிர்பந்திக்கவில்லை. இதோ, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, குடும்ப நல நீதிமன்றமும் விவாகரத்து கொடுத்து விட்டது.
''விபத்தில் அடிபட்டவன், உயிருக்கு போராடி மீண்டு வருவது போல் தான் இதுவும். உனக்கு நாங்கள் இருக்கிறோம். உறவுகள், நட்புகள் இருக்கிறோம் என, காட்டத்தான் இந்த விழா. இதை, என் மகளுக்காக மட்டுமே நான் நடத்தவில்லை.
''வாழ்க்கையை தரிசாக்கிக் கொண்டு, சரியாக வாழாமல் கூண்டுக் கிளியாக, குடிகார கணவர்களோடு தினம் தினம் துயரங்களையும், கொடுமைகளையும் அனுபவித்து வரும், என் மகள் போன்ற எல்லா பெண்களுக்கும் இதை புரிய வைக்கத்தான், இந்த விழா. இது, எங்கள் பணத்தையோ, திமிரையோ, செருக்கையோ காட்டுவதற்கல்ல.
''கணவன், மனைவி உறவே வேண்டாம். பிடிக்காவிட்டால் விலகி வாருங்கள் என, நான் சொல்வதை தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஊடலும், கூடலும் தான் வாழ்க்கை. அதான் அழகு என்று புரியாதவன் அல்ல, நான்.
''சேர்ந்து வாழவே முடியாத, மன அழுத்தத்தில் தினமும், இதயம் வெந்து சாகிற உறவைத்தான் கடந்து வாருங்கள் என்கிறேன். தயவுகூர்ந்து, என் ஆசையெல்லாம் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்பது தான்...'' என, கண்ணில் தளும்பிய நீரை துடைத்தபடி சொன்னார், விநாயகம்.
ரம்யாவும் கலங்கினாள். அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டாள், அமுதா.
கூட்டத்தில் யாரோ கை தட்டினர். அது மெல்ல மெல்ல அதிகரித்து, அரங்கை அதிர வைத்தது.
சலசலத்தவர்கள் எல்லாரும், விநாயகத்தின் எண்ணத்தை, துாய்மையை புரிந்து கொண்டனர்.
புரிந்தவர்கள் ஒவ்வொருவராக மேடையேறி வந்து, ரம்யாவுக்கு கை கொடுத்து, வாழ்த்து கூறினர்.
ஒரு வசந்தத்திற்கான அறிகுறி அங்கே தெரிய துவங்கியது.
பி. பாண்டியன்
வயது: 45,
படிப்பு: டி.இ.இ.இ., எம்.ஏ.,
பணி: இந்திய அஞ்சல் துறையில் தபால் உதவியாளர்.
சொந்த ஊர்: திருமயம்.
இதுவரை, இவர் எழுதிய, 550 கவிதைகள், 155 சிறுகதைகள், இரு நாவல்கள் பல்வேறு தமிழ் இதழ்களில் வெளியாகி உள்ளன. இவரது படைப்புகள், பல விருதுகளை பெற்றுள்ளன.
கதைக் கரு பிறந்த விதம்: திருமண வாழ்வில் தோல்வியுற்று, விரக்தியில் வாழ்வே முடிந்து விட்டதாக கருதும் சகோதர, சகோதரிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சிறுகதை அமைய வேண்டும் என்ற உந்துதலில் பிறந்ததே இக்கதை.
