sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தனி ஒருவன்!

/

தனி ஒருவன்!

தனி ஒருவன்!

தனி ஒருவன்!


PUBLISHED ON : ஜூன் 19, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறு, குளம், ஏரிகளில் ஆக்கிரமித்து வரும் நீர்வாழ் தாவரம், ஆகாயத்தாமரை. இத்தாவரத்தின் வளர்ச்சியை கட்டுப் படுத்தவோ, அவ்வளவு சீக்கிரம் அழிக்கவோ முடியாது. தன் தடிமனான இலைகளால் தண்ணீரை அதிகம் உறிஞ்சி, வெகு சீக்கிரம், நீர் நிலைகளில் வறட்சியை ஏற்படுத்தி விடும்.

மேலும், கோடை காலங்களில் ஏரி மற்றும் குளங்களின் நீர், வெகு சீக்கிரம் வெப்பமடைந்து, ஆவியாக மாறி வீணாவதற்கு, ஆகாயத்தாமரையே காரணம்.

மழைக்காலங்களில், வெள்ளப் பெருக்கின் போது, ஆற்றுப்போக்கினை தடுத்து, நீரினை ஊருக்குள் திருப்பி, பெரும் ஊறு விளைவித்து நாசம் செய்யக் கூடியது இந்த தாவரம். யானைக்கால் போன்ற கொடிய நோயை பரப்பும் கொசுக்களுக்கு அடைக்கலம் தந்து, மீன்கள் மற்றும் கால்நடைகளுக்கு எமனாகவும் விளங்குகிறது.

விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும், இயற்கை சுற்றுச்சூழலுக்கும் நாசம் ஏற்படுத்தும் இத்தாவரம், 30 ஆண்டுகளுக்கு வாழும் தன்மை கொண்டது. அதன்பின், மக்கி விஷமாகி, தான் இருக்கும் இடத்தை, பாழ்படுத்தும் தன்மை கொண்டது.

இருக்கும் நீர் ஆதாரத்தை எல்லாம் சொட்டு நீர் கூடவிடாமல் குடித்து, எங்கும் பச்சை பசலென காட்சி தரும் இந்த பச்சை அரக்கனுக்கு, வெங்காயத்தாமரை என்றும் ஒரு பெயர் உண்டு.

'நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமே ஆகாயத்தாமரையில் அழிந்து போய்விடக்கூடாது...' என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் களமிறங்கி உழைப்பவர்கள் ஒரு சிலரே!

அந்த ஒரு சிலரில், தனி ஒருவனாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக, ஆகாயத்தாமரை செடியை, வேருடன் பிடுங்கி அழித்து வருகிறார், கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பொன்னுசாமி!

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்கு மேல் படிக்காமல், கிடைத்த வேலைகளை பார்த்து வருகிறார். அத்துடன், சின்ன சின்னதாய் சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

கோவை, குறிச்சி குளக்கரையில் உள்ள பொங்காளியம்மன் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம், குளக்கரையில் குப்பையாக சேர்ந்துள்ள ஆகாயத் தாமரையை பார்த்து மனம் வருந்திய பொன்னுசாமி, 'நம்மால் முடிந்த அளவு ஆகாயத்தாமரையை அழிப்போம்...' என்று நினைத்து, அதற்கான வேலையில் இறங்கி விட்டார். 330 ஏக்கர் பரப்பளவில், 6 கி.மீ., சுற்றளவில் விரிந்து, பரந்து கிடக்கும் குளத்தை, தன்னால் மட்டுமே எப்படி சுத்தம் செய்து முடிப்பது என்பது பற்றி எல்லாம் யோசிக்காமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் குளத்தில் இறங்கி ஆகாயத்தாமரையை வேரோடு பிடுங்கி, சுத்தம் செய்து வருகிறார்.

சினிமா ஷூட்டிங்குகளுக்கு வெளியூர் சென்று விட்டால் மட்டுமே இவரை இங்கு காண முடியாது. மற்றபடி இவருக்கு புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எல்லாம் இந்த குளத்தில் தான். நேரம் காலம் பாராமல், தனி ஒருவனாக இவர் குளத்தை சுத்தம் செய்வதை, அந்த வழியாக போகும் போது பார்க்கலாம்.

விபத்தில் சிக்கி, கை எலும்பு உடைந்திருந்த நிலையில் கூட கட்டு போட்டபடி, ஆகாயத்தாமரையை அழித்துள்ளார். காரணம் கேட்ட போது, 'நான், இவ்வளவு தீவிரமாக இயங்கினாலும், என்னைவிட தீவிரமா இது வளருது. நான் ஒரு பக்கம் எடுத்து முடிக்கும்முன், இன்னொரு பக்கம் வளர்ந்துருது... இதுல நான் அழிஞ்சாலும் பராவாயில்ல; இதுகளை இந்த குளத்தவிட்டு அழிக்காம விடப் போறதில்ல...' என்கிறார் உறுதியுடன்!

கொளுத்தும் வெயிலில், வியர்வை ஊற்றெடுக்க இவர் இப்படி வேலை செய்வதை பார்த்து, ஒரு சிலர், 'உங்களுக்கு ஏதாவது பண உதவி தேவையா?' என்று கேட்பர்.

'வேண்டாம்; உங்கள் ஊர் நீர் நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரையை சுத்தம் செய்யுங்கள்; மற்றவர்களையும் சுத்தம் செய்ய உற்சாகப்படுத்துங்கள் அது போதும்...' என்கிறார்.

'இனி, நம்மால் ஒரு ஏரி, குளத்தை உருவாக்க முடியாது. இருக்கும் நீர் நிலைகளை காப்பாற்றினாலே போதும். அதற்காகத் தான் இந்த ஆகாயத்தாமரையை அழிக்கிறேன். நாம் பயன்படுத்தும் நீர் நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லாருக்கும் வந்து, அது இயக்கமா மாறி, மக்களே இந்த ஆகாயத்தாமரையை அழிக்கிற நாள் வரும். அதுவரை, நான் இந்த குளத்துல தான் இருப்பேன்...' என்று சொல்லும் இவருடன் பேசுவதற்கான மொபைல் எண்: 94437 20563.

எம். ஆர். ஜே.,






      Dinamalar
      Follow us