
'கணையாழி' இதழுக்காக, கி.கஸ்தூரி ரங்கன் எம்.ஜி.ஆரை சந்தித்து, எழுதியது: வாகினி ஸ்டுடியோவின் ஏர் கண்டிஷன் அறை; சலூனில் இருப்பது போல சுழல் நாற்காலி. எம்.ஜி.ஆருக்கு, 'மேக் - அப்' நடந்தது. உள்ளே நுழைவோரை ஓரக்கண்ணால் பார்த்தார், எம்.ஜி.ஆர்.,
'வந்துட்டீங்களா... ஒரு நிமிஷம் அப்படியே உக்காருங்க...'
'மேக் - அப்' மேன் சிரத்தையுடன், கவனமாக எம்.ஜி.ஆர்., முகத்தில், ஏதேதோ பூசினார். தலையில் கீரிடமும், காதில் குண்டலம், ஜோரான அரும்பு மீசை மற்றும் ஜிகினா வேலைப்பாடுகள் நிறைந்த ராஜகுமாரன் உடை!
கனவுலகில், 'டூயட்' பாடும் காட்சி அன்று படமாக்கப்படவிருந்தது. ராஜகுமாரனாக எம்.ஜி.ஆரும், ராஜகுமாரியாக லதா. படம், உரிமைக்குரல்; இயக்குனர், ஸ்ரீதர்.
எம்.ஜி.ஆர்., நாற்காலியில் இருந்து இறங்கினார். கண்ணாடியில் அழகு பார்த்தவாறே, 'சொல்லுங்க...' என்றார்.
யாரை என்ன சொல்ல சொல்கிறார் என்று ஒரு கணம் திகைத்தோம். என் பக்கம் திரும்பி, புன்னகை செய்தபடியே, 'பேட்டியை ஆரம்பிக்கலாமா?' என்பது மாதிரி பார்த்தார்.
* உங்களுக்கு மட்டும் இத்தனை பாப்புலாரிடி ஏன்?
நான், வாழ்க்கை வேறு, நடிப்பு வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதேபோல் படத்தில் நடிக்கிறேன். நல்ல மனிதனாக வாழ வேண்டும்; உழைத்து சாப்பிட வேண்டும்; நல்ல கொள்கைகளுக்காக போராட வேண்டும்; நல்ல கருத்துகளை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும். இதையெல்லாம் வெளியிடக்கூடிய, வாய்ப்புள்ள கதையையே தேர்ந்தெடுக்கிறேன்.
* மற்ற நடிகர்கள் யாரும் இதை செய்வதில்லையா?
செய்கின்றனர்... ஆனால், என்னைப் போல மக்களுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும், என்னை ஒரு அங்கத்தினராகவே ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன். அதனால், என்னால், தங்கள் வாழ்க்கையில் ஏதோ நல்ல மாற்றம் வரும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். நான் மது அருந்துவதில்லை; புகைப்பதில்லை; காபி, டீ கூட குடிப்பதில்லை. அதனால், என்னுடைய, 'இமேஜ்' மக்களிடையே ஓங்கி இருக்கிறது.
* அரசியல் ரீதியில் கொள்கை வழிப்படி எத்தனை பேர் உங்களை வழிபடுகின்றனர்? உங்களுக்கு இருப்பதெல்லாம் சினிமா கவர்ச்சியால் ஏற்பட்டுள்ள செல்வாக்கு தான் என்று கூறுகின்றனரே...
அப்படியானால், மற்ற நடிகர்களும் கட்சிகள் ஆரம்பித்து விடலாமே! அப்படி அவர்கள் ஆரம்பித்தால், என்னளவு செல்வாக்கு பெற முடியுமா?
* உங்கள் கட்சிக்கு ஆதரவு மங்கி வருவதாக...
அதெல்லாம் வீண் பிரசாரம்; கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் கூட ஆகவில்லை. இன்று, என் கட்சியில், 17 லட்சம் தொண்டர்கள் இருக்கின்றனர். 20 ஆண்டுக்கு முன், அண்ணாதுரை தி.மு.க.,வை ஆரம்பித்த போது கூட, இந்த அளவுக்கு, வேகமான வளர்ச்சியை பெறவில்லை.
* நீங்கள் தி.மு.க.,வை விட்டு வெளியே வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் போனதால், அக்கட்சிக்கு எவ்வளவு தூரம் செல்வாக்கு குறைந்து விட்டது?
நான் இருப்பதும், இல்லாததும் முக்கியமில்லை. அவர்களே தங்கள் கட்சிக்கு குழி பறித்து கொண்டனர். எல்லாம் கலகலத்துப் போன நிலையில் தேர்தல் நடந்தால், தோல்வி நிச்சயம் என்ற கவலையில், கட்சித்தலைமை இருக்கிறது. இதற்காக, என் செல்வாக்கை உடைக்க வேண்டும் என்று ஏதேதோ செய்தனர். அது, பலிக்காமல் போனதால், என்னுடன் சமரசம் செய்து கொள்ள, தூதுவர்களை அனுப்பினார், கருணாநிதி; நான் இணங்கவில்லை.
* இன்னும் பெருமளவு எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதியின் பக்கம் தானே இருக்கின்றனர்?
பதவியில் இருப்பதால், எல்லாரையும் மிரட்டி உருட்டி, தம் பக்கம் வைத்துள்ளார், கருணாநிதி. ஆனால், தி.மு.க.,வில் உள்ள பல எம்.எல்.ஏ.,க்கள், என் நண்பர்கள். தக்க சமயத்தில், என் பக்கமே வந்து விடுவர்.
நடுத்தெரு நாராயணன்

