தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தனி மரம் தோப்பாகும்!

தனி மரம் தோப்பாகும்!

தனி மரம் தோப்பாகும்!


PUBLISHED ON : ஏப் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் இருக்கும் மகள் லாவண்யா, இந்த ஞாயிற்றுக் கிழமையும் பேசவில்லை. போன புதிதில், தினமும் இல்லையென்றாலும், ஞாயிற்றுக் கிழமையாவது பேசி விடுவாள். ஆனால், இப்போதெல்லாம் மாதத்தில், ஒன்றிரண்டு முறை அழைப்பு வருவதே, அபூர்வமானது. அதுவும், 'நான் நலம், நீ நலமா?' என்ற சம்பிரதாயமான வார்த்தைகள்.

மகன் அமெரிக்கா போன போதும் இப்படித்தான் நடந்தது; அதனால், ராஜேஸ்வரிக்கு, லாவண்யாவின் செயல்பாடு ஆச்சரியத்தை தரவில்லை.

'உன் கூட யாராவது பேசிக்கிட்டே இருந்தாப் போதும்; உனக்கு பசி தாகம் கூட தெரியாது...' என்று கிண்டல் செய்வார், அவளது கணவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்த அவர், தினமும் தன் அனுபவங்களை கதை போல சொல்வார். மகனும் - மகளும், 'அப்பா போரடிக்க ஆரம்பிச்சுட்டார்; இனி, ரெண்டு பேருக்கும் உலகமே மறந்து போகும்...' என, கேலி செய்வர்.

ராஜேஸ்வரிக்கு அப்படி ஒரு பழக்கம்; சிறு வயது முதலே எல்லாரிடமும், 'லொட லொட' பேச்சு தான்; பள்ளித் தோழிகள், இவளை ஓட்டை வாய், 'லவுட் ஸ்பீக்கர்' என்று கிண்டல் செய்வர்.

சென்னை, தி.நகரில், 20 ஆண்டுக்கு மேல் குடியிருந்தனர். அரை கிரவுண்ட் பிளாட்டில், இரண்டு பெட்ரூம் வீடு; ரியல் எஸ்டேட்டில் நன்றாக சம்பாதித்த போது, தனக்கென்று ஒதுக்கிய இடம். கூடவே, எதிர்காலத்துக்கு பயன்படட்டுமே என்று தாம்பரம் தாண்டி, சதானந்தபுரத்தில், ஒன்றரை கிரவுண்ட் மனையும் வாங்கிப் போட்டிருந்தார்.

தி.நகரில் இருக்கும்போதே, அண்ணா பல்கலைக் கழகத்தில், இன்ஜினியரிங் முடித்து விட்டான், மகன் மணிவண்ணன். அவன், யு.எஸ்., சென்று, மேல் படிப்பு படிப்பதற்கும், அவனை விட இரண்டு வயது சிறியவளான லாவண்யா, அமெரிக்காவில், எம்.எஸ்., படிப்பதற்காகவும், வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டார், ராஜேஸ்வரியின் கணவர். மகன் - மகள் படிப்பு செலவு தவிர, சதானந்தபுரத்தில், 1,000 சதுர அடியில், வசதியான வீட்டையும் கட்ட முடிந்தது. மகன் அமெரிக்கா சென்றதும், அவர்கள் சதானந்த புரம் வீட்டிற்கு மாறினர்; பல லட்சங்கள் பாங்கில் டிபாசிட்டாக மாறின.

ரியல் எஸ்டேட்  பிசினஸிலிருந்து, ராஜேஸ்வரியின் கணவர் ஓய்வு எடுத்துக் கொள்ள, பேச்சு, அரட்டைக்கு பஞ்சமில்லை.

எல்லாம் கணவர் விபத்தில் இறக்கும் வரை தான்.

அது, மணிவண்ணன், அமெரிக்காவில் படிப்பை முடித்து, வேலை தேடிக்கொண்டிருந்த சமயம் என்பதால், தந்தையின் இறப்புக்கு வந்தவன், 'அதிக நாள் தங்க முடியாது; சீக்கிரம் கிளம்பணும்...' என்று சொல்லி, அப்பாவின் இறுதிச் சடங்குகளை அவசர அவசரமாக முடித்து, சென்று விட்டான்.

லாவண்யாவும், புராஜக்ட் ஒர்க், தேர்வு என்று பிசியாகி விட்டதால், வீட்டில் பேச்சு குறைந்தது. தனிமையின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் படர்வதை ராஜேஸ்வரியால் உணர முடிந்தது. மகளும் அமெரிக்கா சென்றதும், தனிமை அவளை முழுவதுமாக விழுங்கி விட்டதாக தோன்றியது. இருவரின் போன் கால்களை எதிர்பார்த்து, ஏமாந்த நாட்கள் அதிகமாயின. யாராவது வந்து பேச மாட்டார்களா என்ற ஏக்கம், மனதை வெறுமையாக்கியது. கணவர் இருந்த வரை, அக்கம் பக்கத்தில் யாரிடமும் பழக்கம் வைத்துக் கொள்ளவில்லை. இப்போது, புதுசாக பழக தயக்கமாக இருந்தது. 'டிவி' சீரியலில் என்றுமே நாட்டம் இருந்ததில்லை. மகனுடன் போய், கொஞ்ச நாள், அமெரிக்காவில் தங்கலாம் என்று பேச்செடுத்தபோது, 'அக்கம் பக்கத்தில் தமிழ் பேசறவங்க இல்லேம்மா... உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்; யார் கூடவும் பேசாம உங்களால இருக்க முடியாது...' என்று அவன் சொன்னதில் உண்மையும் இருந்தது.

இந்நிலையில், ஒருநாள் மாலை, 'ஆன்ட்டி... ஆன்ட்டி...' என்று, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, கதவை திறந்தாள், ராஜேஸ்வரி. மூன்று சிறுமியர் நின்றிருந்தனர். அவர்களில் அமுதா என்ற சிறுமி, ''எங்க தெருவில் கரன்ட் போயிடுச்சு; சரி பண்ண ரெண்டு நாள் ஆகுமாம். நாங்க, 'டென்த்' படிக்கிறோம்; எக்ஸாம் நடக்குது. கரன்ட் வர்ற வரைக்கும் நாங்க இங்க படிக்கலாமா... மத்தவங்க வீட்ல அவங்க பசங்க படிச்சிட்டிருக்காங்க. அதனால தான் உங்கள கேக்கறோம்; ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்...'' என்றாள். மற்ற இரு சிறுமியரும் எதிர்பார்ப்புடன் ராஜேஸ்வரியின் முகத்தையே பார்த்தனர்.

''வாங்க குழந்தைகளா... வந்து, தாராளமா படிங்க...'' என்றவள், ''ஒரு சின்ன கண்டிஷன்... தினமும் உங்க பள்ளியில் நடந்தது பத்தி சொல்லணும்; நானும் கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேசுவேன்; அப்புறம் படிக்கலாம்,'' என்றாள்.

'ஓ.கே., ஆன்ட்டி...' என்றனர், கோரஸாக! சின்னதாக அரட்டை அரங்கம் முடிந்து, அவர்கள் படிக்க ஆரம்பித்தனர். உரக்க படிப்பதற்கு, ஆளுக்கொரு அறையை உரிமையோடு எடுத்துக் கொண்டனர்.

மூன்று பேரும் கிளம்பும்போது, சூடான பால் கொடுத்தாள், ராஜேஸ்வரி.

தயக்கத்துடன் மறுத்த அவர்களிடம், செல்லமாக கோபித்து, பருக வைத்தாள்.

மறுநாள், அந்த மூவரணி வந்தபோது, அவர்களுக்காக கடலை உருண்டை செய்து வைத்திருந்தாள், ராஜேஸ்வரி. அதைச் சாப்பிட்டு, சிறிது நேரம் அரட்டை அடித்து, இரவு, 9:00 மணி வரை படித்தனர்.

'இந்த ரெண்டு நாளும் சாயந்திர வேளை மகிழ்ச்சியாக போனது; நாளை இவர்கள் வரமாட்டர்களே...' என்று நினைத்து ஏங்கினாள், ராஜேஸ்வரி.

பால் குடித்த பின், ''ஆன்டி... இங்க, அமைதியா நல்லா படிக்க முடியுது; தினமும் வரலாமா,'' என்று சிறு தயக்கத்துடன், கேட்டாள், அமுதா.

அளவுக்கு மீறிய உரிமை எடுத்துக் கொள்கிறோமோ என்ற தயக்கம் குரலில் தெரிந்தது.

''கட்டாயம் வாங்க என் செல்லங்களா... நானே சொல்லணும்ன்னு இருந்தேன்; நீங்களும் என் பசங்க தான்,'' என்றாள்.

அதன் பின், மாலை வேளைகள், மின்னல் வேகத்தில் பறந்தன.

அன்று, ஒரு கணக்கை போட முடியாமல் திணறிக் கொண்டிருந்தது, மூவரணி.

''டியூஷன் வச்சுக்கலாம் இல்ல...'' என்றாள், ராஜேஸ்வரி.

''அதுக்கெல்லாம் வசதி இல்ல ஆன்ட்டி... பிளஸ் 2 வரைக்கும் எப்படியாவது படிச்சுடுவோம்; அதுக்கு மேல சூப்பர் மார்க்கெட், ஜவுளி கடைன்னு வேலைக்கு போக வேண்டியது தான்,'' யதார்த்தமாக சொன்னாள், அமுதா.

அவர்கள் சென்ற பின், அதைப் பற்றி வெகு நேரம் யோசனை செய்த ராஜேஸ்வரி, மறுநாள், மொட்டை மாடியை சுத்தம் செய்து, கீற்றுக் கொட்டகை போட ஏற்பாடு செய்தாள். கூடவே, பிளாக் போர்டு, டேபிள், சேர், பெஞ்ச்களும் வந்தன. கொஞ்சம் செலவு தான்; 'தனிமையில் நொந்து கொண்டிருக்காமல், கஷ்டப்படும் குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்யலாமே... மாதா மாதம் மகன் அனுப்பும், 100 டாலர்கள் இதற்காவது பயன்படட்டுமே...' என்று நினைத்தாள்.

அமுதாவின் பள்ளி ஆசிரியை இருவர், அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.

மாலை ஒரு மணி நேரம், டியூஷன் நடக்கவே, அமுதாவின் பள்ளியிலிருந்து இன்னும் சில சிறுமியர் படிக்க வந்தனர். டியூஷன் முடிந்த பின், இரவு, 9:00 மணி வரைக்கும் படிப்பர். மூவரணிக்கு மட்டும் சலுகை, கீழே படிக்கலாம்.

பால் எல்லாருக்கும் உண்டு.

ஒரு ஞாயிறு காலை -

ராஜேஸ்வரி, பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது, மூவரணியின் பெற்றோர், மண்வெட்டி மற்றும் காய்கறி, பூச்செடி கன்றுகளுடன் அங்கே வந்தனர்.

''ஆன்ட்டி... இங்கே நிறைய காலி இடம் இருக்கு... காய்கறி, பூச்செடி போடலாமே...'' என்ற அமுதா, ராஜேஸ்வரியின் காதில் ரகசியமாக, ''தாவரங்கள் கிட்டயும் அன்பா பேசலாமாம்... எங்க டீச்சர் சொன்னாங்க; நல்லா வளருமாம்...'' என்று சொன்னாள்.

'ஓ... இந்த குழந்தைகள் என்னை நல்லா புரிஞ்சிருக்காங்களே...' உணர்ச்சிவசப்பட்டாள், ராஜேஸ்வரி.

டீயை குடித்து, வேலையில் இறங்கிய அவர்களது பெற்றோர், அரை நாளில் அழகிய தோட்டத்தை உருவாக்கி விட்டனர்.

ராஜேஸ்வரி தயாரித்த உணவை சாப்பிட்டு, 'அடிக்கடி வந்து பாத்துக்கறோம்...' என்று உறுதியளித்து சென்றனர்.

அப்போது அமுதா, ''ஆன்ட்டி... நீங்க, உங்க மகன் - மகள்கிட்ட என்ன பேசணும்ன்னு நினைக்கிறீங்களோ அதை டைரியில எழுதலாமே...'' என்றாள்.

''சரிம்மா செய்யறேன்...'' என்றவளுக்கு, 'பொழுதும் போகும், மணி, லாவண்யாவுடன் பேசினா மாதிரியும் ஆகும்... இதுவரை, ஏன், இது தோணாம போச்சு...' என, நினைத்தாள்.

மாலையில், பக்கத்து வீட்டு அம்மாள், ''நாங்க பத்து பேர், ஒரு நாள் விட்டு ஒருநாள் தேவாரம், திருவாசகம் படிக்கறோம்; இட வசதி போதல, உங்க மாடிய யூஸ் பண்ணிக்கலாமா... மதியம் ஒரு மணி நேரம் தான்; பசங்க டியூஷன் பாதிக்காது,'' என்று வினயமாக கேட்டாள்.

ராஜேஸ்வரி ஒத்துக்கொள்ள, அவள் வாழ்வில் தனிமை என்பதே இல்லாமல் போய் விட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் முயற்சியில், இருந்தனர், அவளுடைய மகனும், மகளும். எப்போதாவது, அம்மாவை அழைத்து சுருக்கமாக பேசுவர்; ஆனால், இப்போதெல்லாம், அதைப் பற்றிய வருத்தம் ராஜேஸ்வரிக்கு இல்லை.

மூவரணியை தொடர்ந்து பல மாணவியர் டியூஷன் வந்து சென்றனர். மூவரணியினர், கல்லுாரியில் சேர்ந்து படிக்க, பண உதவியும் செய்தாள் ராஜேஸ்வரி. சனி, ஞாயிறுகளில் அவர்கள் வந்து, ராஜேஸ்வரிக்கு ஓய்வு கொடுத்து, சமையலில் ஈடுபடுவர். அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவர்; வீடே கலகலப்பாக இருக்கும்.

இந்நிலையில், திடீரென, ராஜேஸ்வரிக்கு தலைசுற்றல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்த்த போது, இதயம் பலவீனமாக இருப்பதாகவும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டனர், டாக்டர்கள். சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேர்ந்த போது, கூடவே இருந்து கவனித்து, உதவி செய்தாள், அமுதா.

தேவாரம் படிக்க வரும் பெண்கள், ராஜேஸ்வரியின் உணவுத் தேவைகளை கவனித்து கொண்டனர். வீட்டில் எப்போதும் யாராவது இருந்துகொண்டே இருப்பர். மூவரணியினர் முறைபோட்டு, இரவில் அவளுக்கு துணை இருந்தனர்.

அதன்பின்பும், அடிக்கடி உடம்பு முடியாமல் போகவே, அமுதாவிடம், டைரியை எடுத்து வரச் சொல்லி, சில விஷயங்களை எழுதச் சொன்னாள், ராஜேஸ்வரி. எழுதி முடித்ததும், கையெழுத்து போட்டாள். பிள்ளைகளுக்கு தகவல் சொல்லச் சொன்ன ராஜேஸ்வரி, தன் கணவனை தேடிச் சென்று விட்டாள்.

ராஜேஸ்வரி இறந்த மறுநாள் வந்து சேர்ந்த பிள்ளைகள் இருவருக்கும் ஒரே வியப்பு. நுாற்றுக்கு மேல் சிறுமியர், ராஜேஸ்வரிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தேவாரம் ஓதப்பட்டுக் கொண்டிருக்க, மற்ற ஏற்பாடுகள் முறையாக நடந்து கொண்டிருந்தன.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்த பின், ராஜேஸ்வரியின் டைரிகளை படித்தனர், அவளது பிள்ளைகள். தினசரி நிகழ்வுகளை, நேரில் பேசுவது போலவே பதிவு செய்திருந்தாள், ராஜேஸ்வரி. மகன் - மகளை குறை சொல்லவில்லை; காலத்தின் கோலம் என்றுதான் பதிவு செய்திருந்தாள்... 'அமுதா மற்றும் அக்கம் பக்கத்தவர்களால், என் தனிமை துயர் நீங்கியது...' என்று குறிப்பிட்டு, 'தனி மரம், தோப்பானேன்...' என்றும், 'இந்த வீடு, உங்களுக்கு தான்; இதை விற்று, உங்கள் இஷ்டம் போல் செய்யலாம். ஆனால், நான் தனியாக உணராமல், என் வாழ்க்கையை முழுமையாக்கிய பலர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். பாங்கில் இருக்கும் பணத்தில் ஒரு டிரஸ்ட் அமைத்து, டியூஷன் மற்றும் தேவார வகுப்புகள் தொடர்ந்து நடைபெற உதவ வேண்டும். இதற்கு மாறான முடிவை நீங்கள் எடுத்தாலும், எனக்கு வருத்தம் இல்லை...' என்று எழுதியிருந்தாள்.

கையெழுத்துக்குக் கீழே, 'அமுதாவுக்கு என் ஸ்பெஷல் நன்றி; அன்பு!' என்று குறிப்பிட்டிருந்தாள்.

மணி, லாவண்யாவின் பொட்டில் அறைந்தது மாதிரி இருந்தது, அந்த வாசகம். அப்பாவின் மறைவுக்கு பின், அம்மாவை பற்றி நன்றாக தெரிந்த தாங்களே, அவளிடம் அதிகம் பேசாத குற்ற உணர்வு உறுத்தியது. மற்றவர்கள் செய்த உதவி மலை போல் தெரிந்தது.

'அம்மா... எங்கள மன்னிச்சிடுங்க; உங்க விருப்பம் போல இனிமேலாவது நடக்கறோம்...' என்று கண்ணீர் விட்டனர். அவர்களது தவறுகள் கண்ணீரால் துாய்மையாக்கப்பட்டன.

சதானந்தபுரம் போனால், 'ராஜேஸ்வரி படிப்பு மையம், தேவாரம், திருவாசகம் கற்றுக் கொள்ளலாம்' என்ற போர்டை பார்க்கலாம்.

அமுதாவின் மேற்பார்வையில் தான் என்று சொல்லவும் வேண்டுமா!

எஸ்.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us