தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்


PUBLISHED ON : ஏப் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது, 38: கணவர் வயது, 39. பெற்றோர் அனுமதியுடன், காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவருமே, ஐ.டி., துறையில் பணிபுரிகிறோம். இருவருமே, வேலையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால், துறை ரீதியாக, உயர் பதவிகளில் உள்ளோம். பல நாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகளை பெற்று, சென்று வந்துள்ளோம். சொந்தமாக வீடு, கார் மற்றும் பேங்க் பேலன்ஸ் என, வசதியாக உள்ளோம். மகள் பிறந்து, எங்கள் மகிழ்ச்சியை மேலும் கூட்டினாள்.

படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு, ஆண் மற்றும் பெண் நண்பர்கள் அதிகம். ஒரு சின்ன விசேஷம் என்றாலும், அனைவரும் ஒன்று கூடி, பெரிய விழாவாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

என் நண்பர்கள் அனைவரும், கணவருக்கும் நண்பர்கள் தான்; அவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடுவார். ஆனால், மனதிற்குள் சந்தேக விதையை ஊன்றி, வளர்த்து வந்துள்ளார். அது, இன்று மரமாகி, என்னை கடுமையான வார்த்தையில் சாடுவதில் வந்து முடிந்துள்ளது.

ஒரு நாள் இரவு, வேலையில் இருந்து வீடு திரும்ப கால தாமதமாகி விட்டது. வேக வேகமாக சமையல் செய்து கொண்டிருந்த போது, 'இவ்வளவு நேரமா எங்கே போய் ஊர் சுற்றி விட்டு வந்தே...' என்று கேட்டபடியே, என் மீது பெட்ரோலை ஊற்ற, கேஸ் ஸ்டவ்விலிருந்து நெருப்பு பிடித்துக் கொண்டது.

நான் போட்ட கூச்சலில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, என்னை காப்பாற்றினர். அன்று, நானும், என் குழந்தையும், பெற்றோர் வீட்டிற்கு வந்தவர்கள் தான்; அவர் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பவில்லை.

ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறுகிறார். ஆனால், எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை.

மகள் எதிர்காலத்துக்காவது, கணவருடன் சேர்ந்து வாழுமாறு கூறுகின்றனர் பெற்றோர்.

என்னை சந்தேகப்பட்டு, தீ வைத்த போது, அவர் முகத்தில் தெரிந்த வன்மம், இன்னும் மனதில் ஆழப் பதிந்துள்ளது. கொடிய சிங்கத்தின் முகத்தில் தெரியும் ஆக்ரோஷத்தை அதில் கண்டேன். 'மனம் எவ்வளவு துாரம் வக்கரித்து போயிருந்தால், இத்தகைய தோற்றம் வரும்...' என, நினைக்காத நாளில்லை.

இந்நிலையில் எப்படி சேர்ந்து வாழ்வது... இப்போது தெளிந்த நீரோடை போல் செல்லும் என் வாழ்க்கையில், மீண்டும் கல்லெறிய விருப்பமில்லை.

இந்த பிரச்னையிலிருந்து எப்படி மீள்வது என, சொல்லுங்கள் அம்மா...

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

காதலிக்க மறுக்கும் பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றுவது, திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடுகிறாளோ என சந்தேகப்பட்டு, மனைவியின் உடலில்

பெட்ரோலை கொட்டி, தீ வைப்பது போன்றவை காட்டுமிராண்டித்தனமான செயல். ஒரு பெண், நம்மை காதலிக்க மறுக்கிறாள் என்றால், நம்மிடம் உள்ள எதிர்மறை குணங்களை களைந்து, அவளை ஈர்க்க வேண்டும்; ஈர்க்க முடியாவிட்டால், அவள் விரும்பியபடி நல்ல வாழ்க்கையை அவளே தேர்ந்தெடுத்து கொள்ளட்டும் என, கண்ணியமாய் விலகி நிற்க வேண்டும்.

மனைவி மீது சந்தேகப்படுகிறோம் என்றால், அந்த சந்தேகம் உண்மையானது தானா என, ஆராய வேண்டும். உண்மையானது என்றால், மனைவியின் நடத்தைக்கு நாமும் ஒரு காரணமாய் இருந்திருக்கிறோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும். மனைவியிடம் பேசி, தவறான நடத்தையிலிருந்து விலக வாய்ப்பு தரவேண்டும். அப்படியும் திருந்தவில்லை என்றால், விவாகரத்து பெற்று, அவரவர் வழியில் பயணத்தை தொடர வேண்டும். இவை தான் ஆக்கப்பூர்வமான, மனிதாபிமானமுள்ள செயல்பாடுகள்.

உன் கணவன், உன் மீது சந்தேகப்படும் அளவுக்கு உன் நடத்தை இருந்ததா... உன் மீது தீ வைக்க முயன்ற அன்று, இரவு, வீடு திரும்ப தாமதம் ஆகும் என்பதையும், அதற்கான காரணத்தையும், கணவனிடம் முன்பே தகவல் தெரிவித்தாயா... நீ, உன் ஆண் நண்பர்களுடன் பழகும் விதத்தில், எல்லைக்கோடு தாண்டினாயா அல்லது எல்லைக்கோடு தாண்டுவது போல ஒரு மாயை தெரிந்ததா... மொத்தத்தில், உனக்கும், உன் கணவனுக்கும் நடந்த தாம்பத்யத்தில் ஒரு வெளிப்படை தன்மை இருந்ததா என்பதை உன்னை நீயே கேட்டுக் கொள்.

ஒரு பெண், திருமணத்திற்கு பின், நிறைய ஆண் நண்பர்களை வைத்திருப்பதும், ஒரு ஆண், திருமணத்திற்கு பின் நிறைய பெண் நண்பர்களை வைத்திருப்பதும், மனித வெடிகுண்டாய் உலவுவதற்கு சமம். தானும் வெடித்து சிதறி, தன்னைச் சுற்றி இருப்போரையும் வெடித்து சிதறடித்து விடுவர்.

ஓர் அவலட்சணமானவனை, காதலாய் பார்த்தால், ஈர்க்கக்கூடிய அம்சங்கள் நுாறு தெரியும். ஓர் ஆணழகனை, வெறுப்பாய் பார்த்தால், அருவருக்கத் தக்க அம்சங்கள் நுாறு தெரியும். அப்படித்தான் உன் மீது பெட்ரோல் கொட்டிய கணவனின் முகம், ரத்த வெறி பிடித்த சிங்கமாய் உனக்கு தெரிந்திருக்கிறது. இச்சம்பவத்திற்கு முந்தைய ஏழு ஆண்டுகள், உன் கணவன், உன்னிடம் நடத்திய தாம்பத்யம் எத்தகையது என, மன தராசில் எடை போடு. பிரிந்து வாழும் ஐந்து

ஆண்டுகளில், பல தடவை உன்னிடம் மன்னிப்பு கோரியிருப்பான்; அந்த மன்னிப்பின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்.

கணவன் என்ற ஸ்தானத்தில் உனக்கும், தந்தை என்கிற ஸ்தானத்தில் உன் மகளுக்கும் அவன் மெய்யாலுமே தேவைப்படுகிறானா என்பதை உன் ஆழ்மனதிடம் கேட்டுப் பார். நீயும், உன் கணவனும் சேர்ந்து வாழ்வது பொருத்தமானதா என்று உன் பெற்றோரிடம் ஆலோசனை கேள். உன்னை பிரிந்திருந்த ஐந்து ஆண்டுகளில், உன் கணவனின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பதை, அவன் பணிபுரியும் இடத்திலும், அவன் நண்பர்களிடத்திலும் பிரச்னை ஏற்படுத்தாமல் விசாரி.

நீயும், உன் கணவனும் மீண்டும் சேர்ந்து வாழும் பட்சத்தில், குறைந்தபட்ச செயல்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உன் கணவன் மீண்டும் சந்தேகப்பட்டு, பெட்ரோல் குளியல் நடத்த கிளம்பிவிடக் கூடாது.

உன் கணவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் உன் நடவடிக்கைகள் அமையக் கூடாது. எதையும் சாத்வீகமாக பேசி, தீர்த்துக் கொள்ள வேண்டும். இருவரும் அலுவலகம் சென்று வருதலிலும், ஸ்மார்ட்போன் பேசுவதிலும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.

மகளின் எதிர்காலத்திற்காக, ஒரு போதும் சண்டையிடக் கூடாது என்று கண்ணியம் காக்க வேண்டும். வீட்டிற்குள் பணம், பதவி, அதிகாரத்தை கழற்றி வைத்து, நல்ல கணவன் - மனைவியாக இருங்கள்.

விட்டுப் போன ஐந்து ஆண்டு தாம்பத்யத்தை கூடுதலாய் சேர்த்து அள்ளிப் பருகுங்கள். வாழ்த்துகள் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us