தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அமர்ந்திருக்கும் கருடன்!

அமர்ந்திருக்கும் கருடன்!

அமர்ந்திருக்கும் கருடன்!


PUBLISHED ON : செப் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருமாளின் வாகனமான கருடாழ்வார், பெருமாள் சன்னிதி எதிரில், நின்ற நிலையில் வணங்கியபடி காட்சி தருவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அமர்ந்த நிலையில் அவரைக் காண வேண்டுமானால், திருவள்ளூர் மாவட்டம், கோயில் பதாகை, சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பிருகு, மார்கண்டயே மகரிஷிகளின் தவத்தை மெச்சி, திருப்புல்லாணி - ராமநாதபுரம், பூரி - ஒடிசா, திருமழிசை - திருவள்ளூர் ஆகிய இடங்களில் காட்சி தந்தார், பெருமாள்.

இது போதாதென்று அவர்கள், உலகிலேயே மிக அருமையான, சேதாரண்ய க்ஷேத்திரத்தில் - துாய்மையான இடத்தில், பூரண சேவை கிடைக்க வேண்டும் என்று, 12 ஆண்டு தவம் செய்தனர்.

அதன்படி, கோயில் பதாகையில் பூரண சேவையளித்தார், பெருமாள். அவர் அழகாக இருந்ததால், சுந்தரராஜ பெருமாள் எனப்பட்டார். 'பதாகை' என்றால், வழி. இந்த ஊர் வழியாக மாசிலாமணீஸ்வரர் கோவிலுக்கு, சோழ மன்னன் ஒருவன் சென்று வருவான். அதனால், இவ்வூர், கோயில் பதாகை என்று, பெயர் பெற்றது.

பெரும்பாலான பெருமாள் கோவில்களில் கருடாழ்வார், பெருமாள் எதிரே, நின்ற நிலையில் தான் காட்சி தருவார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது, ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். ஆனால், இங்கு தவக்கோலத்தில், அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார்.

இது தவிர, நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார், கருவறையின் பின்பக்கம் உள்ளார். இந்தச் சிலை மிகப் பழமையானது. கருடனின் முகம் சற்று வித்தியாசமாக உள்ளது.

மாங்காடு காமாட்சியம்மன், சிவனை அடையும் நோக்கத்தில், ஊசி முனையில் நின்று கடும் தவம் செய்த போது, உலகமே நடுங்கியது. அக்னி பிழம்புகள் வெளிப்பட்டன. அவளது உக்கிரத்தை தணிக்க, சங்கு, சக்கரத்துடன் வந்தார், பெருமாள்.

சக்கரத்தின் வலிமை கண்ட அக்னி, கட்டுக்குள் வந்தது. சக்கரத்தை ஏவும்போது, பெருமாள் எதிரில் நின்றால் தலை போய் விடுமோ என கருதிய கருடாழ்வார், தரையில் அமர்ந்து, தியானம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில், அமர்ந்த நிலையில் கருடாழ்வார் விக்ரகம் அமைக்கப்பட்டது.

இங்குள்ள தாயாரை, சுந்தரவல்லி என்பர்.

ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் நிகமாந்த வேதாந்த தேசிகர் சன்னிதிகளும் உள்ளன.

ஆவடி - ரெட்ஹில்ஸ் வழியில், 3 கி.மீ., துாரத்தில் கோயில் பதாகை உள்ளது. இங்குள்ள ரேஷன் கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, நடந்து செல்லும் துாரத்தில் கோவில் இருக்கிறது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us