தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மோசமான நண்பர்களை தலை முழுகுங்கள்!

என் நண்பன் ஒருவனுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. நண்பனும், அவன் மனைவியும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

திருமணமான மூன்றாம் மாதமே, அவன் மனைவி கருத்தரித்தார். ஆனால், அவனோ, 'கரு உருவான நேரம் சரியில்லை என்று ஜோசியர் கூறியுள்ளார்...' எனச் சொல்லி, கருக்கலைப்பு செய்ய வைத்து விட்டான்.

அதன் பிறகு, திருமணமான இரண்டாம் ஆண்டில் தான், அவன் மனைவி கர்ப்பமானார். அப்போதும் அவன், 'இந்த குழந்தை பிறந்தால், குடும்பத்திற்கு ஆகாது என, ஜோசியர் சொல்லி விட்டார்...' என, மீண்டும் கருவை கலைக்க செய்து விட்டான்.

சமீபத்தில், அவன் மனைவி, மூன்றாவது முறையாக கருத்தரித்ததை அறிந்து, ஜோசியரை காரணம் காட்டி, கருக்கலைப்புக்கு முயன்றவனிடம், உண்மையான காரணத்தை கூறுமாறு கேட்டேன்.

அதற்கு அவன், 'மாமனார் வீட்டார் எனக்கு தரவேண்டிய வரதட்சணையில் நிலுவை இருக்கிறது. பேசிய வரதட்சணை முழுமையாக வசூலான பிறகே குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் இருக்கிறேன்...' என, சிறிதும் இரக்கமில்லாமல் சொன்னான்.

இப்படிப்பட்ட மோசமான நண்பர்களோடு பழக்கம் வைத்துக் கொள்வது, கேவலத்திலும் கேவலம் என, அத்தோடு அவன் நட்பை தலை முழுகினேன்.

ஆண்களே... இதுபோன்ற இழிவான செயல்களால், ஆண் இனத்துக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை உணருங்கள்.

பெண்களின் மன நலம், உடல் நலத்திலும் அக்கறை செலுத்தி, எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

எச். சண்முகசுந்தரம், சேலம்.

முன்(பெண்) யோசனை...

பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிருக்கு சென்றிருந்தேன். பொருட்களை வாங்கி வெளியேறும் முன், அங்கு, 'வாடிக்கையாளரின் திருப்தி மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன; பதிவிடவும்...' என்ற வாசகமும், அதன் கீழ் நோட்டுப்புத்தகமும் கண்ணில் பட்டது. எடுத்து புரட்டினேன்.

சிறந்த ஆலோசனைகள் தேர்வு பெற்று, நடைமுறைப் படுத்தப்பட்ட விபரம், நடைமுறைக்கு வந்த நாள், ஆலோசனை வழங்கியவர் போன்ற குறிப்புகள், அதில் இருந்தன.

குடும்ப தலைவி ஒருவர், 'விசேஷ தினங்களில், வெல்லம் கட்டியாக வாங்கி, துாளாக்குவது, பெண்களுக்கு, மேலும் வேலை பளுவை கூட்டுகிறது. எனவே, பொடித்த வெல்லம் பாக்கெட்டுகளில் வந்தால் வரவேற்கிறோம். பெருங்காய துாள் போல, ஏலக்காய் பொடித்து வந்தால், நன்றாக இருக்கும்...' என, ஆலோசனை கூறியிருந்தார்.

அவரின் ஆலோசனை, சோதனை வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது, பொடித்த வெல்லம் பாக்கெட்டுகளிலும், சிறு டப்பாக்களில் ஏலக்காய் துாள் விற்பனையும் துவங்கி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அறிய முடிந்தது.

ஆலோசனை வழங்கிய குடும்ப தலைவியின் புகைப்படமும், அவர் பற்றிய குறிப்பும், அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

பிரச்னைகளை எதிர்கொள்கிற போது தான், அதை பொடி பொடியாய் தகர்க்கும் தீர்வுக்கான வழியும் கண்டறிய முடிகிறது.

- தி. பூபாலன், காவேரிப்பாக்கம், வேலுார்.

வாழ வை, வாழு!

நான், மளிகை கடை வைத்திருக்கிறேன். சமீபத்தில் ஒருநாள், என் கடைக்கு கால் ஊனமான மாற்றுத்திறனாளி ஒருவர் வந்தார்.

தர்மம் கேட்டு வந்திருக்கிறார் என்று, நான், ஐந்து ரூபாய் எடுத்து கொடுக்க முற்பட்டேன்.

அப்போது, 'வேண்டாம் ஐயா... நான் தர்மம் கேட்டு வரவில்லை. என் ஊனத்தை காரணம் காட்டி, பிச்சையெடுக்க விரும்பவில்லை. உழைத்து பிழைக்க வேண்டும் என, நினைக்கிறேன்.

'ஆதலால், உங்கள் கடையில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள்; எந்த வேலை என்றாலும் செய்வேன். நம்பிக்கையாக இருப்பேன். என் வேலையை பார்த்து, கூலி கொடுங்கள்...' என்றார்.

வேலையாள் வைக்கும் அளவிற்கு, கடையில் வியாபாரம் இல்லை என்பதாலும், அவரை பார்க்க நல்லவராக தெரிந்ததாலும், ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் போல் தோன்றியது.

என் கடையின் அருகில் கிடந்த காலியிடம் ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஒரு, 'ஷெட்' போட்டு, காய்கறி கடை வைத்துக் கொடுத்தேன்.

இப்போது, காய்கறி நல்ல வியாபாரம். நான், விடியற்காலையிலேயே காய்கறி வாங்கி போட்டு விடுவேன். நியாயமான விலை, சரியான எடை, கனிவான பேச்சு என்று, அவர் வியாபாரம் செய்ததால், விற்பனை அமோகமாக இருக்கிறது.

முதலீடும் குறைவு தான். முதலில் அவருக்கு கூலி கொடுத்த நான், இப்போது லாபத்தில் பாதியை கொடுக்கிறேன். அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

மாற்றுத்திறனாளிகளுக்கு, தர்மம் அளித்து, அவர்கள் வாழ்க்கை பாதையை முடக்கி விடாமல், உங்களால் முடிந்த ஏதாவது வழி செய்வது நல்லது.

அது, அவர்களை மட்டும் வாழ வைக்காமல், அவர்கள் குடும்பத்தையும் வாழ வைக்கும். அந்த புண்ணியம், உங்களையும், உங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கும். செய்வீர்களா?

பெ.பொன்ராஜபாண்டி, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us