தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

நீண்ட நாட்களுக்கு பிறகு, நண்பர் ஒருவர் பார்க்க வந்திருந்தார். நல விசாரிப்பு, பொதுவான பேச்சுக்களுக்கு பின், 'மணி, உனக்கு ஒரு நல்ல, 'மேட்டர்' கொண்டு வந்திருக்கிறேன். நீ, பா.கே.ப.,வில் எழுத வசதியாக இருக்கும்...' என்றார்.

ஆவலுடன், 'எதைப் பற்றியது?' எனக் கேட்டேன்.

'சென்னைவாசிகள் பேசும் தமிழ் பற்றி தான். 'வாட்ஸ் -ஆப்'பில் பார்த்தேன்... சொல்லவா...' எனக் கேட்டார்.

'சொல்லுங்கள்...' என்றேன்.

அவர் கூறியது:

'இன்னாபா, ஷோக்கா கீறயா... நாஸ்டா துன்னுகினியா?' என்று யாராவது விசாரித்தால், மெர்சலாகி விடாதீர்கள்... அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகள் அன்பின் வெளிப்பாடாக, கரை புரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தில், நட்பு துளிகள் தான் அவை. மூன்றரை நுாற்றாண்டுகளை கடந்து விட்ட சென்னை மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது, இந்த மெட்ராஸ் பாஷை.

மெட்ராஸ் பாஷையின் அழகே அதன் வேகமும், எளிமையும் தான். ஆங்கிலம், தெலுங்கு, உருது என, இந்த பகுதியில் புழங்கிய அனைத்து மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து, தமிழோடு பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ் சோறு மொழி தான், மெட்ராஸ் பாஷை.

எவ்வளவு பெரிய சொற்றொடரையும், அப்படியே நசுக்கி, ஒற்றை சொல்லாய் வார்த்து எடுக்கிற, வார்த்தை சித்தர்களால் உருவானது தான், இந்த அழகிய மொழி.

உதாரணத்திற்கு, 'இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு...' என்பதை, ரத்தின சுருக்கமாக, 'இட்டாந்துரு...' என்று மெட்ராஸ் பாஷையில் சொல்லி விடலாம். அதேசமயம், 'இட்டுகினு வா...' என்பதற்கும், 'இஸ்துகுனு வா...' என்பதற்கும், கடலளவு வித்தியாசம் இருக்கிறது.

முன்னது அழைத்துக் கொண்டு வருவது, பின்னது இழுத்துக் கொண்டு வருவது. இந்த வார்த்தை விளையாட்டுகள், தமிழோடு நின்று விடுவதில்லை; ஆங்கிலத்தின் பங்களிப்பும் பெருமளவு இருக்கிறது.

அந்த காலத்தில், ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகியது, ரிக் ஷாக்காரர்கள் தான்; மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள். 'உன்னோட படா பேஜாரா பூட்சுபா...' என, அலுத்துக் கொள்பவர்கள், அந்த வார்த்தைக்குள் ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது என்பதை, அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த காலத்தில், இங்கிலாந்தில் இருந்து வந்திறங்கும் ஆங்கிலேயர்களை, இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையை பிடித்து இழுப்பது போல், ரிக் ஷாக்காரர்கள் அன்பு தொல்லையில் பிய்த்தெடுப்பர். இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள், 'டோன்ட் பாட்ஜர் மீ' - 'என்னை நச்சரிக்காதே...' என்று சொல்லி, தவிர்த்து விடுவர்.

வெள்ளைக்காரன் சொன்ன அந்த, 'பாட்ஜர்' ஐ, நம்ம ரிக் ஷாக்காரர்கள் அப்படியே தங்கள் குப்பத்துக்கு எடுத்துச் சென்று, 'பேஜார்' ஆக்கி விட்டனர். இவை போக, 'பக்கெட் - பக்கிட்டி; பாம் ஆயில் - பாமாயிலு; பிஸ்கெட் - பிஸ்கோத்து' என, நிறைய பெயர்களை அப்படியே ஆங்கிலத்தில் இருந்தும், எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆங்கிலம் மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் மெட்ராஸ் பாஷையை கலந்திருக்கின்றனர். 'பஜாரி' என்ற சொல், உருது மொழியில் இருந்து உருவானது. உருதில், பஜார் என்றால் சந்தை. இதனால், சந்தைக்கடையில் நின்று சத்தம் போடுபவள், 'பஜாரி' ஆகி விட்டாள். 'பேக்கு' என்ற வார்த்தையும், உருதில் இருந்து வந்தது தான். 'பேவ் கூப்' என்றால், உருது மொழியில் முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள், பேவ் கூப்பை தான் சுருக்கமாக, 'பேக்கு' என்று ஆக்கி விட்டனர்.

இப்படி, ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும், ஒரு மொழியின் வரலாறே இருக்கிறது. சென்னையில், ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை, நாடறியச் செய்த பெருமை, தமிழ் திரையுலகிற்கு உண்டு. நடிகர்

எம்.ஆர்.ராதா, சந்திரபாபு துவங்கி, பலரும் இந்த பாஷையை பேசி, இதன் பெருமையை பறைசாற்றி இருக்கின்றனர்.

'வா வாத்யாரே ஊட்டாண்ட...' என்ற மெட்ராஸ் பாஷை திரைப்பட பாடல், தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அலறியது. எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றோர், இதே பணியை எழுத்து மூலம் செய்திருக்கின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், அதில் இருக்கும் வேகமும், ஒலி நயமும் தான்.

'அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்சா' போன்ற சொற்களுக்கு, எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும், அதன் ஓசை நயம் கேட்பவர்களை, திக்குமுக்காட வைத்து விடுகிறது என்பதை, யாரும் மறுக்க முடியாது. அதேபோல, எவ்வளவு அரிய கருத்தையும், பாமரனுக்கும் புரியும் வகையில் பதிய வைக்கவும், இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பதும், இதன் பலம்.

ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும், இன்று பேசப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து விட்டன. ஆனாலும், புதுப்புது சொற்கள் அப்படியே அல்லது சற்று நம் வசதிக்கேற்ப உருமாற்றி பயன்படுத்துவது, தொடர்ந்தபடியே இருக்கிறது.

- இப்படி முடித்தார், நண்பர்.

'மெட்ராஸ் பாஷை, ஷோக்கா கீது பா...' என, நினைத்துக் கொண்டேன்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us