PUBLISHED ON : ஜூன் 30, 2019

சில பெண்களுக்கு, வயது அதிகமாகியும், ருதுவாகாத நிலை இருக்கும். மாதவிடாய் பிரச்னையில், அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டும், கர்ப்பப்பை தொடர்பாகவும் சிலருக்கு பிரச்னை இருக்கும்.
எவ்வளவோ வைத்தியம் செய்தும், சிலருக்கு புத்திர பாக்கியம் இருக்காது. காரணமே இல்லாமல், திருமணம் தள்ளிப்போகும். கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து, சேர முடியாத நிலை இருக்கும்.
இப்படி, பெண்களுக்கான பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கென்றே, கும்பகோணம் மகாமக குளத்தின் வடக்கு கரையில், சிறப்பு கோவில் இருக்கிறது.
காசி விஸ்வநாதர் கோவில் எனப்படும், இங்குள்ள, நவ கன்னியரை வழிபட்டால், பெண்களின் பிரச்னைகளுக்கு விடிவுகாலம் ஏற்படும்.
தன் மனைவி சீதையை பிரிந்தார், ராமபிரான். சாந்தமான இவர், ராவணனை கொல்ல, ருத்ராம்சம், அதாவது, கோப குணம் பெற, அகத்தியரை வேண்டினார்.
'கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டால், எண்ணியது ஈடேறும்...' என, யோசனை கூறினார், அகத்தியர். ராமரும், அவரை வணங்கி, ருத்ராம்சம் பெற்றார்.
நவ கன்னிகளான கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகியோர், தங்களிடம், மக்கள் தொலைத்த பாவங்களை போக்கும் வழி தெரியாமல் கயிலாயம் சென்று, சிவபெருமானை வணங்கினர்.
'மாசி மாதம், மகா மகத்தன்று, கும்பகோணம் சென்று நீராடினால், உங்கள் பாவம் நீங்கும்...' எனக் கூறினார், சிவன்.
அவ்வாறே ஒன்பது கன்னிகளும், நீராடி, கரையில் இருந்த, காசி விஸ்வநாதரை தரிசித்தனர். அந்தக் குளத்தின் மகிமையை அறிந்து, அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும் என, விஸ்வநாதரிடம் வேண்டினர்; சிவனும் அனுமதித்தார்.
ஒன்பது கன்னியரின் சிலைகளும் இந்த கோவிலில் உள்ளன. தங்கள் பிரச்னைகள் தீர, வெள்ளிக்கிழமை விரதமிருந்து, நவ கன்னியரை பூஜிக்கின்றனர், பெண்கள்.
இத்தலத்தில் உள்ள ஷேத்திரலிங்கம் அதிக உயரம் கொண்டது. சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது, வேறு எந்த கோவிலிலும் இல்லாத விசேஷம்.
சப்த மாதர்கள், பைரவர், சூரியன், சந்திரன், ஜேஷ்டாதேவி, லிங்கோத்பவர், ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உள்ளனர்.
நவ கன்னிகளின் பாவம் போக்க, காசியிலிருந்து, சிவன், இங்கு வந்து குடிகொண்டதால், காசி விஸ்வநாதர் என, பெயர் பெற்றார். அம்பாள், விசாலாட்சியும், இங்கு இருக்கிறாள். ராஜகோபுரம் உள்ளது.
மாசி மகத்தை ஒட்டி, 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடக்கும்.
தி. செல்லப்பா
