தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவனமாக இருங்கள்...

நண்பரின், முகநுாலுக்கு, சமீபத்தில், லண்டனில் இருந்து ஒரு பெண், 'பிரெண்ட் ரிக்வொஸ்ட்' அனுப்பியிருந்தாள். அதுவரை, பெண் நண்பிகளை தவிர்த்து வந்தவர், லண்டன் பெண் தானே என்று, அவரது நட்பை ஏற்றுக்கொண்டார். தினமும், 'குட்மார்னிங்... குட்நைட்...' என்று, நட்பு தொடர்ந்தது.

ஒருநாள், நண்பரின், 'வாட்ஸ் - ஆப்' எண்ணை கேட்டு, அதில், செய்தி ஒன்று அனுப்பினாள்.

'நேற்று, கடைத் தெருவிற்கு சென்றேன். உங்கள் ஞாபகம் வந்தது. உடனே, உங்களுக்கு ஒரு ஆப்பிள் கை கடிகாரம், ஒரு ஆப்பிள் மொபைல் போன், 20 கிராமில் ஒரு தங்க சங்கிலி, இத்துடன், ஐந்து பாட்டில் வாசனை திரவியங்கள் வாங்கி அனுப்பி உள்ளேன்...' என்று குறிப்பிட்டிருந்தாள்; பரிசு பொருட்களின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தாள்.

மேலும், 'இதே பார்சலில், 80 ஆயிரம் லண்டன் பவுண்டு, பணம் வைத்துள்ளேன். அதன் இந்திய மதிப்பு, 73 லட்சம் ரூபாய். அந்த பணத்தில், உங்கள் தேவைக்கு எடுத்து, மீதியை, ஏழைகளுக்கு உதவுங்கள்...' என்று குறிப்பிட்டிருந்தாள்.

அத்துடன், தலைநகர் டில்லியில் உள்ள பிரபலமான கூரியர் சர்வீசிலிருந்து, அந்த பார்சல் அனுப்பியதற்கான ரசீதின் நகலையும், 'வாட்ஸ் - ஆப்'பில் பதிவிட்டிருந்தாள்.

மறுநாள், 'டில்லி கூரியர் ஆபீசிலிருந்து பேசுகிறேன்; 40 ஆயிரம் ரூபாய் கட்டி, உங்களுக்கான பார்சலை வாங்கிக் கொள்ளவும்...' என்று கூறினான், ஒருவன்.

நண்பர் சற்று தயங்கி, லண்டன் தோழிக்கு செய்தி அனுப்பினார். உடனே, அவள், 'நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, உங்களுக்கு, பணமும், பொருளும் அனுப்பி இருக்கிறேன். கிட்டத்தட்ட, 75 லட்சம்; வெறும், 40 ஆயிரம் ரூபாய் கட்ட முடியாதா? கூரியர்காரன் நாளை பேசி, வங்கி கணக்கு எண் தருவான்; பணம் கட்டி, பார்சலை வாங்கி, 'எஞ்சாய்' பண்ணுங்க...' என்று, செய்தி அனுப்பினாள்.

வட்டிக்கு வாங்கி, பணத்தை கட்டினார்.

உடனே போனில் பேசியவன், 'உங்கள் பணம் வந்தது. ஆனால், சுங்க அதிகாரிகள், பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதை, 'ஸ்கேனில்' கண்டுபிடித்து விட்டனர். 'அந்த பணம், தீவிரவாதிகளுக்காக அனுப்பப்பட்டதல்ல...' என்று, ஒரு கடிதம் எழுதி, மத்திய அரசுக்கு அனுப்பணும்; அதற்கு, 80 ஆயிரம் ரூபாய் ஆகும்...' என்றான்.

தான் ஏமாந்ததை அப்போது தான் உணர்ந்தார், நண்பர்.

இந்த காலத்தில், யாராவது, 70 லட்சம் ரூபாயை, சும்மா தருவரா? யோசியுங்கள் நண்பர்களே... அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படாதீர், உங்கள் உழைப்பை மட்டுமே நம்புங்கள்!

— பிரித்திவ் சேது, காஞ்சிபுரம்.

முருங்கைக்காய் சாம்பார் மணக்க...

அலுவலக மதிய சாப்பாட்டு நேரம். ஊழியர்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தோம். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சக பெண் ஊழியரிடம், 'என்ன குழம்பு... கொஞ்சம் தாருங்களேன்...' என்றேன்.

'முருங்கைக்காய் சாம்பார்...' என்று கூறி, அவரது டப்பாவை, என் பக்கம் நகர்த்தினார். அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த, எங்களால், 'நள மகாராஜா' என்று குறிப்பிடப்படும், சமையலில் கில்லாடியானவர், சாம்பார் டப்பாவை எடுத்து, முகர்ந்து, 'மேடம்... முருங்கைக்காய் சாம்பார் மணக்கவேயில்லையே... எப்படி செய்றீங்க?' என்றார்.

உடனே, பருப்பு வேக வைப்பதிலிருந்து, ஆதியோடு அந்தமாக சாம்பார் தயாரித்தல் முறையை விவரித்தார், பெண் ஊழியர்.

'எல்லாம் சரி, மேடம்... அடுத்த முறை, முருங்கைக்காய் சாம்பார் வைக்கும்போது, முருங்கைக்காயை, விரல் அளவுக்கு வெட்டுங்கள். பின், அதை குறுக்குவாட்டில் மூன்றாக பிளந்து, சாம்பாரோ, காரக் குழம்போ வைத்துப் பாருங்கள். மணமும், ருசியும் ஆளையே அசத்தும்...' என்று, 'டிப்ஸ்' கொடுத்தார்.

சில நாட்களுக்கு பின், அந்த பெண் ஊழியர், முகமலர்ச்சியோடு, 'நள மகாராஜா'வை அணுகி, 'சார்... நீங்க சொன்ன முறையில், இன்று, முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். அதன் வாசனை வீட்டையே மணக்க வைத்ததோடு, எதிர் வீடு வரை பரவியும் விட்டது.

'எதிர் வீட்டு மாமி, வீட்டுக்கே வந்து விட்டார். 'முருங்கைக்காய் சாம்பார், மூக்கை துளைக்குதே... தோட்டத்தில் பறித்த முருங்கைக்காயா அல்லது கிராமத்திலிருந்து யாராவது கொடுத்ததா...' என்று கேட்டு, தயங்கித் தயங்கி நின்றார். புரிந்து விட்டது எனக்கு. ஒரு கிண்ணம் நிறைய சாம்பார் கொடுத்து அனுப்பினேன்.

'எல்லாவற்றுக்கும் மேலாக, என் சமையலை என்றுமே பாராட்டாத, கணவர், 'நீ வச்சதா, முருங்கைக்காய் சாம்பார். இப்படி மணக்குதே...' என்று கூறி, கையில் ஊற்றி ஊற்றி குடித்தார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

'எல்லா பெருமையும்  உங்களுக்கு தான். ஆனா, ஒரே ஒரு வருத்தம் தான். எனக்கே ருசி பார்க்க சாம்பார் கிடைக்கவில்லை. அடுத்த முறை, சற்று கூடுதலாக செய்து, திருப்தியா சாப்பிட போறேன்; உங்களுக்கும் எடுத்து வருகிறேன்...' என்றார்.

அதே முறையை பின்பற்றி, நானும், மணக்க, ருசிக்க முருங்கைக்காய் சாம்பார் தயாரித்தேன். 'ஆஹா... ஓஹோ... பேஷ்... பேஷ்... ரொம்ப நல்லாயிருக்கு...' என்று, குடும்பமே சப்பு கொட்டி சாப்பிட்டது; நானும் தான்!

என்ன, குறுக்குவாட்டில் வெட்டி, முருங்கைக்காய் சாம்பார் வைக்க, தயாராகி விட்டீர்களா?

— கே. வினாயகம், சென்னை.

கொஞ்சம் அனுசரித்து செல்லுங்களேன்!

தினமும், மாலையில் நடை பயிற்சிக்கு போகும்போது, இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பொதுவாக, பல விஷயங்களையும் பேசுவோம். ஒரு சமயம், அவர் முகம் வாட்டமாக இருக்கவே, காரணம் கேட்டேன்.

'சார்... உங்களிடம் சொல்வதற்கென்ன... பெற்றோர் என்னுடன் வசிக்கின்றனர். என் மனைவிக்கு இதில் அவ்வளவாக இஷ்டமில்லை. கடனே என்று அவர்களுக்கு பணிவிடை செய்கிறாள்.

'அவர்களின் பெரும்பாலான தேவைகளை நான் பூர்த்தி செய்தாலும், உணவு விஷயங்களை அவள் தான் கவனிக்க முடியும். இதில் சுணக்கம் காட்டி, அரைகுறையாக செய்வதால் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது...' என்றார்.

'உங்கள் பெற்றோருக்கு, குறைவின்றி பணிவிடை செய்ய வேண்டும் என்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. சரி... உங்களின், மாமனார் - மாமியார் இருவரும், நிரந்தரமாக வந்து தங்கினால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்...' என்றேன்.

அதிர்ச்சியுடன், 'அது எப்படி முடியும்; எனக்கு, 'செட்' ஆகாது. நான் எங்கேயாவது போய் விடுவேன்...' என்றார்.

'உங்கள் மனைவி, அப்படி சொல்லாமல், மாமனார் - மாமியாருக்கு, அரை மனதாக செய்தாலும், சேவை செய்வதே பெரிய விஷயம். அந்த கோணத்தில் நினைத்து பாருங்கள்; அவர் கஷ்டம் புரியும். 'உங்கள் பெற்றோரை, முதியோர் இல்லத்திற்கு அனுப்புங்கள்...' என்று சொல்லும் நிலை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், கொஞ்சம் அக்கறையுடன், மனைவிக்கு ஆதரவாக இருக்க முயற்சியுங்கள்...' என்றேன்.

சிறிது நேரம் யோசித்தவர், 'சார்... ரொம்ப நன்றி! நீங்க சொல்றது தான் சரி. இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து, மனைவிக்கும், பெற்றோருக்கும் உதவியாக இருக்க முயற்சிக்கிறேன்...' என்று, கண்கலங்கியபடி கூறினார்.

குடும்பத்தை பிரிக்கும்படியான பிரச்னை ஏற்படும்போது, சற்று அனுசரித்து நடந்தால், அனைவருக்குமே நல்லது!

— ஆர். ரகோத்தமன், பெங்களூரு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us