கை முறுக்கு சுற்றி கல்லூரி படிப்பை தொடரும் மாணவி!
கை முறுக்கு சுற்றி கல்லூரி படிப்பை தொடரும் மாணவி!
PUBLISHED ON : மே 20, 2018

கல்லுாரி மாணவர்கள் என்றாலே, அரட்டை அடிப்பது, சினிமா பார்ப்பது என, பொழுதுபோக்குவர் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால், சேலம் மாவட்டம், மருளையம் பாளையத்தில் வசிக்கும் மாணவி பூங்கொடியோ, தன் குடும்ப ஏழ்மை புரிந்து, கை முறுக்கு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம், தன் கல்லுாரி படிப்பு செலவுகளை பார்த்துக் கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியது:
என் குடும்பத்தில், யாரும் பள்ளிப் படிப்பை தாண்டவில்லை; தந்தை வேல்முருகன் கூலித் தொழிலாளி. தாய் விஜயா தான், ஐந்து ஆண்டுகளாக கை முறுக்கு சுற்றும் வேலைக்கு செல்கிறார். அக்காவுக்கு திருமணமாகி விட்டது; அண்ணன்,'பைப்' கடைக்கு வேலைக்கு செல்கிறார்.
நான், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்; 10ம் வகுப்பில், 371 மற்றும் பிளஸ் 2 தேர்வில், 853 மதிப்பெண்ணும் பெற்றேன். தற்போது, நெய்காரப்பட்டி, வித்யா மந்திர் கல்லுாரியில், பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கிறேன்.
குடும்பத் பிரச்னையால், நான்கு ஆண்டுகளுக்கு முன், எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார், தந்தை. அன்றிலிருந்து, நாங்கள் அனைவரும் கிடைத்த வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி முடிந்து வந்த பின்பும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் கை முறுக்கு சுற்றும் வேலை செய்து, வாரம், 200 முதல், 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இதன் மூலம் கல்லுாரி படிப்புக்கான செலவுகளை சமாளிக்கிறேன்.
முதலாம் ஆண்டு கட்டணம் இலவசம் என்பதால், இந்த ஆண்டு சிரமமில்லை. அடுத்த ஆண்டு முதல், 23 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். என் அம்மாவும், அண்ணனும் சம்பாதிப்பது, வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவுக்கே பற்றாக்குறையாக உள்ளது.
இந்நிலையில், படிப்பை தொடர, அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. அதிக நேரம் வேலை செய்தால், படிப்பின் மீது கவனம் செலுத்த முடியவில்லை. வேற வழி தெரியாததால், பணியை தொடர்கிறேன்.
- இவ்வாறு அவர் கூறினார்.
அவர், கல்லுாரி படிப்புக்கு உதவ விரும்புவோர், 88708 52126 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-கே.ஆர்.சரவணன்
