PUBLISHED ON : ஜூலை 08, 2018

எல்லா உயிர்களிலும் தெய்வம் இருக்கிறது என்றனர் நம் முன்னோர். இதன் அடிப்படையில் பாம்புகளுக்கும், பல்லிகளுக்கும் கூட கோவில்களில் சன்னிதி அமைத்துள்ளனர்.
காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஒரு உத்தரத்தில் பல்லிகளுக்கு சிற்பம் உள்ளது. தங்கம், வெள்ளி கவசம் பொறித்த இந்த பல்லிகளைத் தரிசித்தால், பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.
சரஸ்வதியின் துணை இல்லாமல் யாகம் நடத்தினார் பிரம்மா. அதைத் தடுக்க நினைத்த சரஸ்வதி, வேகவதி என்னும் நதியாக பெருக்கெடுத்து ஓடினாள். திருமால் அதைத் தடுத்து, அக்னி வடிவத்தில் மாறி, யாகம் நடத்த அருள்புரிந்தார். யாக முடிவில் அவிர்பாகத்தை (யாக பலன்) ஏற்று, கேட்ட வரத்தை அருளினார். வரம் தந்த பெருமாளுக்கு, 'வரதராஜர்' என்ற பெயர் ஏற்பட்டது. 'வரம் அருள்பவர்களில் முதன்மையானவர்' என்று இதற்கு அர்த்தம். காஞ்சிபுரத்தில், வரதராஜருக்கு கோவில் எழுப்பப்பட்டது.
புண்ணியகோடி என்ற கோடி புண்ணியம் தரும் விமானத்தின் கீழ் இவர் வீற்றிருக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி இருக்கும் பெருமாள், இங்கு மேற்கு நோக்கி இருக்கிறார். பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னிதி உண்டு. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வாரால் பாடப்பட்டது. ஆளவந்தார், ராமானுஜர், தேசிகன் சுவாமி, மணவாள மாமுனிகள், திருக்கச்சிநம்பி, பெரியநம்பி ஆகிய அருளாளர்களுக்கு இந்த பெருமாள் அருள் செய்துள்ளார்.
கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை செய்து பார்த்திருப்பீர்கள். இங்கு, இட்லி பிரசாதம் விசேஷம். சாதாரண இட்லி போல் இல்லாமல், இது வித்தியாசமான சுவை கொண்டதாக உள்ளது. அரிசி, உளுந்து சேர்த்து சாதாரண இட்லி செய்வர். ஆனால், பெருமாளுக்கு அர்ப்பணிக்கும் இட்லியில், சீரகம், மிளகு, சுக்கு, இஞ்சி, நெய்யில் வறுத்த கடுகு, உளுந்து, கருவேப்பிலை, கொத்தமல்லி, முந்திரி சேர்த்து தயாரிப்பர். இந்த இட்லிக்கு, புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியும் சேர்த்து மாவு அரைப்பர்.
ஒரு சன்னிதியில், இரண்டு பல்லிகள் உள்ளன. பக்தர்கள் ஒரு ஏணியின் மீது ஏறிச்சென்று தரிசிப்பர்.
கவுதம முனிவரின் சீடர்களான ஹேமன், சுக்லன் இருவரும், குரு செய்யும் பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை எடுத்து, மூடாமல் வைத்து விட்டனர். அபிஷேக நேரத்தின் போது, அதை குருவிடம் கொடுக்க, அதனுள் விழுந்து கிடந்த பல்லி குதித்து ஓடியது. இந்த அலட்சிய செயலால் கோபமடைந்த கவுதமர், அந்த சீடர்களைப் பல்லிகளாக மாறும்படி சபித்து விட்டார்.
அவர்கள் சாப விமோசனம் கேட்ட போது, 'பெருமாளைத் தரிசித்தால், பாவம் தீரும்...' என்றார். அவர்கள், காஞ்சிபுரம் வந்து, உத்தரத்தில் தங்கி, தவமிருந்து, சாபம் நீங்கப் பெற்றனர்.
அதன் அடிப்படையில் தங்கம், வெள்ளியால் ஆன பல்லிகளை பிரதிஷ்டை செய்தனர். இவற்றைத் தரிசித்தால், அறியாமல் மற்றும் கவனக்குறைவாக நடந்த செயல்களால் ஏற்பட்ட பாவத்திற்கு நிவர்த்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆங்கிலேயர் காலத்தில், கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ், ஆற்காடு நவாபை சந்திக்கக் கிளம்பினார். வழியில், காஞ்சிபுரத்தில் தங்கினார். அவர், வயிற்று வலியால் அவதிப்பட்டார். வரதராஜர் கோவிலில் இருந்த பட்டரின் அறிவுரையை ஏற்று, பெருமாளின் தீர்த்தத்தை கிளைவ் அருந்த, வயிற்று வலி நின்றது. நன்றியுடன் மகரகண்டிகை என்னும் ஆரத்தை, பெருமாளுக்கு காணிக்கையாக்கினார். கருடசேவை மற்றும் தேர்த் திருவிழா ஆகிய நாட்களில் இந்த கண்டிகை, பெருமாளுக்கு அணிவிக்கப்படும்.
இருபத்திநான்கு படிகள் ஏறி, இந்த பெருமாளையும், பல்லிகளையும் தரிசிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
தி.செல்லப்பா
