PUBLISHED ON : ஜூலை 08, 2018

டீச்சர் ஜெயந்தி, நீல நிற காட்டன் புடவையில் வேலைக்கு கிளம்பினாள். அவள் பதவி உயர்வால், முதுகலை ஆசிரியராக பணியாற்றுவதால், முதல் முறையாக பிளஸ் 2 கணக்குப் பாட தேர்வு தாள்களை திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தாள்.
அந்த சென்டரை அடைந்ததும், முதலில் மீட்டிங் என கூறி, நிறைய அறிவுரைகள் தரப்பட்டன. ஜெயந்தியும், கவனமாக கேட்டுக் கொண்டாள். அருகில் உள்ள சக ஆசிரியை, ''திருத்தறது கூட ஈசி... டேலி ஆகறது தான் கஷ்டம்,'' என்று அலுத்துக் கொண்டாள்.
பின் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. அனைவரும் தத்தமது அறைகளுக்கு செல்ல, அங்கு அவர்களின் மேற்பார்வையாளரால், விடைத்தாள்கள் வழங்கப்பட, ஜெயந்தி, மனதில் கடவுளை வேண்டி, திருத்த ஆரம்பித்தாள்.
அவளுக்கு வந்த முதல் பேப்பரில் முத்து முத்தான கையெழுத்துடன், கேள்விகளுக்கான பதில்கள் முறையான வரிசையில், எழுதப்பட்டிருந்தன. ஜெயந்திக்கு அது சுலபமாகவும் இருந்தது. சுமார், 15 நிமிடங்களில்... மதிப்பெண்களை டேலி செய்து... முதல் விடைத்தாளை குழப்பமின்றி முடித்தாள் ஜெயந்தி. மனதில் சந்தோஷமும் வந்தது. கூடவே குழந்தை வினு ஞாபகமும் வந்தது. பாவம், பாட்டியிடம் சமர்த்தாக இருக்கும்.
அடுத்த விடைத்தாளை எடுத்தாள். முதல் பக்கத்தை முடித்து, இரண்டாவது பக்கத்தை திருப்பியபோது, கணக்கிற்கு பதில் பக்கம் முழுவதும் வாக்கியங்களாக இருந்தன. வினா எண்ணும் இல்லை, படிக்க ஆரம்பித்தாள்...
''இந்த பேப்பரை திருத்தும் ஆசிரியருக்கு, ப்ளீஸ்... இதை படித்து விட்டு பிறகு முடிவெடுங்கள். என் வேண்டுகோளை நிறைவேற்றலாமா அல்லது புகார் செய்யலாமா என்று. சுருக்கமாகவே சொல்கிறேன்...
''என் பெயர் கல்யாணி... நான் ஒரு பிரைவேட் கேண்டிடேட்... வயது, 30. எனக்கு, 20 வயதில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வெளியூர். புது இடம். அவரது அழகு, படிப்பு, வேலை, வசதி காரணமாக எனக்கு அவரை மிகவும் பிடித்து விட, எல்லார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. ஒரே ஒரு பொய்யின் அடிப்படையில், அது நான் பிளஸ் 2 தேர்வில், கணக்கு பாடத்தில் தவறி விட்டேன் என்பதை மறைத்ததே...
''ஸ்கூல் சர்டிபிகேட்டை யார் பார்க்கப் போகின்றனர்... என்ற தைரியத்தில் அந்தப் பொய்யை சொன்னதால்... பெரிய குற்ற உணர்வு இல்லாமல் இருந்தேன்.
''வந்தது வினை. என் மகளை ஒரு பெரிய பள்ளியில் சேர்க்கும்போது அவர்கள் எங்களின் கல்வி சான்றிதழ்களை கேட்க, நான் மறுத்தும், முடியாமல் கடைசியாக காட்ட வேண்டியதாய் போனது. அப்போது தான் என் கணவரின் சுயரூபம் தெரிந்தது. அவருக்கு நான் பிளஸ் 2வில் பெயில் என்பதை விட, உண்மையை மறைத்து விட்டேன் என்பதை பெரிய துரோகமாக சித்தரித்து, உறவினர் முன் பஞ்சாயத்து வரை கொண்டு செல்ல... முடிவில், நான் மீண்டும் கணக்கு தேர்வெழுதி தேர்வு பெற்றால் மட்டுமே, இணையலாம் என்று அனுப்பி விட்டார்.
''பிளஸ் 2வில் தேர்வாகாதது பெரிய பிழையில்லை என்றாலும், அடிப்படையில் பொய் சொன்னது குற்றம் என்பதால், என்னால் வேறு கோணத்தில் சிந்திக்க முடியவில்லை.
'சரி என்று, இரண்டு முறை எழுதியும் பாசாகவில்லை. இது மூன்றாவது முறை... உங்களை கடவுளாக நினைத்து கேட்கிறேன். என் மகளிடமும், என் கணவரிடமும் இணைந்து நான் வாழப் போவது, உங்கள் கையில் தான் உள்ளது. என் வீட்டாரின் மன நிம்மதியும் உங்கள் கையில் தான் உள்ளது. தயவுசெய்து பாஸ் மார்க் போட்டு விடுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை! இப்படிக்கு,'
அந்த வேண்டுகோள் கடிதத்தை படித்ததும், ஜெயந்தி கொஞ்சம் உறைந்து போனாள். கண்கள் மூடி யோசித்தாள். எண்ண அலைகள் அவள் மனதில் மோதின. உன் முடிவு என்ன? முதல் முறையாக... இப்படி ஒரு வித்தியாசமான அனுபவமா... மனது கனத்து போனது. மீட்டிங்கில் விடைகள் சரியாக பார்த்து திருத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது.
ஜெயந்தியின் உள் மனது அந்த கல்யாணிக்கு உதவவே நினைத்தது. மேற்பார்வையாளரிடம் சொல்லலாம் என்றால், அவர் கடுமையானவராக இருந்து விட்டால்?
ஒரு சின்ன பொய்... ஒருத்தியின் மொத்த வாழ்க்கையையும் பாதிக்கும்போது... தான் போடும் மதிப்பெண்ணால் அவளது வாழ்க்கை சீராகும் என்றால், அந்த தப்பை செய்யலாம் என்று முடிவெடுத்தாள் ஜெயந்தி.
தான் செய்யப் போகும் இந்த தவறால் யாருமே பாதிக்கப்படப் போவதில்லை என்று, தானே ஆறுதல் படுத்திக் கொண்டாள். அவள் வணங்கும் கிருஷ்ணனை மனதில் வேண்டிக் கொண்டாள்.
அந்த விடைத்தாளை முழுவதுமாக திருத்தினாள். பாஸ் மார்க்கிற்கு பத்து மதிப்பெண் குறைந்தது. பாசாவதற்கான வழிகளை செய்தாள். தொடர்ந்து பணியில் மூழ்கினாள். மனசு மட்டும் குற்ற உணர்வில் தவித்தது.
தான் செய்தது சரியா?
அன்று மாலை -
பணி முடிந்து, வீட்டிற்கு வந்தாள். கையில் காபியுடன் வந்து நின்றாள் அம்மா.
''என்ன ஜெயந்தி, ஒரு மாதிரியா இருக்க?'' அம்மா கேட்டாள்.
சொல்லலாமா, வேண்டாமா? ம்ஹூம்... தன் மீதே அம்பு திரும்பும்!
''அம்மா... நாம இந்த வீட்ட காலி பண்ணப் போறோம், இந்த மாசமே!''
''என்னடி சொல்ற?''
''ஆமாம்... ஹவுஸ் ஓனர்கிட்ட சொல்லிடு... வினு, டியூஷன் விட்டு வந்ததும், அவ கூட வெளியில போய் வரணும்ன்னு இருக்கேன்.''
''அம்மாவிற்கு புரியவில்லை. ஏன் இந்த மாற்றம்?''
வினு வந்தாள். மகளை வாரி அணைத்துக் கொண்ட ஜெயந்தி, கண்ணீருடன், ''என்னை மன்னிச்சிடு... கண்ணு,'' முணுமுணுத்தாள்.
''ம்... சீக்கிரம் முகம் கழுவி வேற டிரஸ்ல வா... ஒரு இடத்துக்கு போகணும்.'' அடுத்த அரை மணியில், இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி, வேளச்சேரிக்கு சென்றனர்.
அந்த குறிப்பிட்ட முகவரியின் வீட்டு வாசலில் நின்று, காலிங் பெல்லை அழுத்தினாள் ஜெயந்தி.
கதவு திறந்தது. எதிரில் குமார். அவன் முகத்தில் ஆச்சரியக் குவியல்!
கண்களில் நீர் வார்க்க... 'என்னை மன்னிச்சுடுங்க' என்று சொல்லி, குமாரின் காலில் விழுந்தாள் ஜெயந்தி. குழந்தை வினு இருவரையும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்ததாள்.
காலில் விழுந்த ஜெயந்தியை, தோள் தொட்டு துாக்கி விட்டான் குமார்.
''ப்ளீஸ்... அழாத உள்ள வா... வினு உள்ள வாடா செல்லம்,'' இருவரையும் அழைத்து உள்ளே சென்றான் குமார்.
குமாரின் பெற்றோர் அறையிலிருந்து வெளியே வந்தனர். ஜெயந்தியை பார்த்து பிரமித்தனர்.
இதோ இவர்களிடம், சில ஆண்டுகளுக்கு முன் நியாயம் பேசியது, ஜெயந்திக்கு முழுமையாக ஞாபகத்திற்கு வந்தது...
'இங்க பாருங்க... உங்கள பொறுத்தவரைக்கும் உங்க மகன் என்னை விட ஒரு வயசு சின்னவரு... ஆனா, ஜாதகத்தை திருத்தி ஒரு வயசு கூட சொல்லிட்டீங்க... பணத்தாலும் பிரச்னையில்ல... அப்பறம் ஏன் கல்யாணத்தின்போது பொய் சொல்லணும்? நல்லவேளை, ஒரு லோன் விஷயமா சர்டிபிகேட் பார்க்கும்போது கண்டுபிடிச்சேன். முன்னாலேயே இந்த உண்மையை சொன்னா எங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க...
'நான், என் வேலை, என் சம்பளம் எல்லாம் இழந்துடக் கூடாதுங்கிறதால, சுயநலத்துல பொய் சொன்னீங்க... ஆனா, என்னை பொறுத்தவரை... நான் கரெக்டா எவ்வளவு உண்மையா இருக்கிறேனோ, அதே அளவுக்கு அவரும் உண்மையா இருக்கணும். ஆனா, குமார் அப்படி இல்ல... கல்யாணத்துக்கப்பறம் கூட உண்மையை சொல்லல... இது மாதிரி எத்தனையோ இருக்கலாம்ன்னு எனக்கு தோணுது.
'எனக்குன்னு சில பாலிசி இருக்கு. அது தான் எனக்கு கவுரவம்ன்னு நினைக்கறேன். உங்க மகனும், நீங்களும் தப்ப உணரணும். அதுக்கு தண்டனை அனுபவிக்கணும். காலம் மாறட்டும்... அப்புறம் சேர்ந்து வாழலாம்...' என்று கத்தி விட்டு குழந்தை வினுவுடன் கிளம்பிய காட்சிகள் நினைவில் வந்தன.
சொந்தம், நண்பர்கள் என்று யார் சொல்லியும் மனசு மாறவில்லை ஜெயந்தி. குமாரும், மீண்டும் மீண்டும் பேசியும் பலனில்லை. அவர்களது தாம்பத்யம், ஜெயந்தியின் பிடிவாதத்தால் காலம் கடந்திருக்க, இன்று ஒரு கல்யாணியின் கடிதத்தில், ஒரு சுயபரிசோதனைக்கு உள்ளானாள் ஜெயந்தி.
குடும்ப வாழ்க்கையில், நுால் பிடித்தபடி நேர்மையா இருக்க முடியாது. சிறு சிறு குறைகள் ஏற்படும். அதை மன்னித்து, மறப்பதே இல்லறத்துக்கு ஏற்றதாகும். மாறாக, குற்றத்திற்கு தண்டனை என்று உறுதியாக இருந்தால், இன்பத்தை இழந்து, சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கவே நேரிடும். தங்கம் கூட சிறு செம்பு கலந்தே அழகிய அணிகலனாய் ஆகிறது. வாழ்க்கை சில தவறில் கூட சுவாரஸ்யத்தை கூட்டும்; அதுவே பல படிப்பினைகளையும் தரும்.
வாழ்க்கை பயணத்தில் மன்னிக்கக்கூடிய செயலை, பெரும் தவறாக ஜெயந்தி உணர்ந்தது; சிறு குற்றம், அதற்கு அவள், தனக்கும், வினு மற்றும் குமாருக்கும் சேர்த்து கொடுத்த தண்டனையே... இப்போது அவளுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அதிலிருந்து விடுபட்ட அவளை, குமாரும் மனமார ஏற்றுக் கொண்டான்.
டி.சீனிவாசன்
