PUBLISHED ON : செப் 13, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
வேணு கானம் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்! என்.சி.வசந்தகோகிலம், வி.வி.சடகோபன் மற்றும் எம்.வி.மணி போன்றோர் நடித்துக் கொண்டு இருந்தனர். ஓர் ஓரமாக சின்னப்பா தேவரும், அவரது அண்ணன் சுப்பையாவும் காத்திருந்தனர்.
'திலோத்தமை படத்துல நம்ம நிழல் உருவம் மட்டும் தான் தெரிஞ்சுது. இந்த படத்துலயாவது முழு உருவம் வருமாண்ணே...' என்று ரகசியமாக தன் சகோதரனை கேட்டு நச்சரித்தார் சின்னப்பா.
'கவலைப்படாதே... இந்த படத்து மூலம் எல்லா ஊருலயும் நம்ம நிஜ மூஞ்சிய ஜனங்க பாப்பாங்க...' என்று கூறினாலும், மனதுக்குள், 'சிறிய வேடம்; அடியாளாக வந்து கத்தி வீசவோ, கம்பு சுழற்றவோ சொல்லப் போறாங்க. அதுக்கு ஏன் இவன் இத்தனை குதூகலம் காட்டுகிறான்... இருந்தாலும், இவனுக்கு சினிமா பைத்தியம் ரொம்பவே முற்றி போச்சு; இனி, ஒழுங்கா வேலைக்கு வருவானோ, மாட்டானோ...' என, நினைத்தார் சுப்பையா.
'அண்ணே... ஒண்ணுக்கு வருது; போயிட்டு வந்துடறேன்...' என்று கூறி ஒதுங்கிய சின்னப்பாவிடம், 'தம்பி... ஷூட்டிங்ல மணி இருக்காரா?' என்று கேட்டு, 'இவரு அவருடைய நண்பராம்.. அவருகிட்ட இவரை அழைச்சுட்டுப் போ...'என்றார் ஒருவர்.
மணியின் நண்பர் என்று கூறப்பட்ட மனிதரை நிமிர்ந்து பார்த்த சின்னப்பா பிரமித்தார். பார்வையை திரும்ப பெறவே முடியவில்லை. அந்திச் சூரியன் ஓர் ஆளாகி வந்து அருகில் நிற்பது போன்று செக்கச் செவேலென்ற கம்பீரமான தோற்றம்; பாகவதர் கிராப்; களையான முகம்; தும்பைப் பூவைப் போல கதர் வேட்டி, ஜிப்பா; இதழ்களில் எவரையும் அசத்திவிடும் வசீகரச் சிரிப்பு.
தன்னையும் அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார் சின்னப்பா. 'அண்ணே ஒருத்தர் வந்தாரே... யாருண்ணே அவரு? எவ்வளவு அழகா ஜோரா இருக்காரு... இவரு நடிக்கிற சினிமாவுலயா, நாமும் வாய்ப்புத் தேடி நிக்கிறோம்...' என்றார் மனத்தில் சிறு தாழ்வுணர்வுடன்!
சாயா படத்தின் கதாநாயகனான, அந்த மணியின் நண்பர் தான் எம்.ஜி.ராமச்சந்திரன்!
மில் வேலைகளுக்கு நடுவில், சினிமாவில் நடிப்பது சின்னப்பாவிற்கும் சிரமமாகவே இருந்தது; ஆனாலும், ஆசை விடாமல் துரத்தியது.
சாலிவாகனன் ஷூட்டிங்! அதில், சின்னப்பாவிற்கு பட்டி வேடம். விக்ரமாதித்தனாக நடிக்க இருந்தவர் சின்னப்பாவை நோக்கி, 'உன் பேரென்ன?'என்று கேட்டார்.
'சின்னப்பா...' என்றதும், அவரை, மேலிருந்து கீழாக பார்வையால் அளந்தார் அவர்.
'அண்ணே... உங்கள ஏற்கனவே தெரியும்ண்ணே... வேணுகானம் பட ஷூட்டிங்குல மணி சாரைப் பாக்க வந்தீங்களே... அப்பவே உங்கள எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு... 'சின்ன குழந்தை போன்று கூறியவரின் தோள்களை இதமாக தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்., உயிர் வரை இனித்தது அந்த ஸ்பரிசம். இன்று முதல் நாம் நண்பர்கள் என்ற புதிய அன்பு அவர்களுக்குள் வேர்விட்டது.
ஆராய்ச்சி மணியில் நடிக்க சின்னப்பாவை அழைத்தனர். இயக்குனர், எம்.ஜி.ஆரின் திரையுலக குரு, ராஜா சாண்டோ! அவர் பயில்வான்களின் நலம் விரும்பி. அவரது ஆளுமை நிறைந்த தோற்றமே, அத்தனை பேரையும் நடுநடுங்கச் செய்யும்.
படத்தில் நடிக்கயிருக்கும் துணை நடிகர்களை வரிசையில் நிற்க சொன்னார் ராஜா சாண்டோ. அப்படத்தில், சேனாதிபதி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி யாராவது பொருந்தி வருகின்றனரா என்று அறிய விரும்பினார். ஏற்கனவே ஒருவர் அந்த கதாபாத்திரத்துக்காக நடிக்க வந்திருந்தார். வரிசையாக ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டு வந்தார் ராஜா சாண்டோ. சின்னப்பா அருகில் வந்ததும், மூச்சை உள் இழுத்து, நிமிர்ந்து நின்றார் சின்னப்பா. அவரது நெஞ்சுப் பகுதி, விம்மிப் புடைத்து, பார்ப்பவர் கண்களுக்கு பாறையாகத் தெரிந்தது.
அவர் மார்பில் ஒங்கிக் குத்தினார் ராஜா சாண்டோ. வலியைப் பொறுத்தபடியே மூன்றடி பின்னால் சென்ற சின்னப்பா, கீழே விழுந்து விடாமல் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால், சாண்டோவா கொக்கா!
'எவன்டா அவன் புரொடக் ஷன் பாக்குறவன்... இங்க வா. இவன் டிரஸ்ஸக் கழட்டு...'என்றார்.
சின்னப்பாவின் கண்கள் கலங்கி விட்டது. 'பாவி மனுஷா... நீயெல்லாம் ஒரு டைரக்டரு... உங்கையில கொள்ளி வைக்க. என்னமா என்னைக் குத்தினே... அப்படியும் எனக்கு வாய்ப்பு கிடையாதா... அடே ஆண்டி ஆறுமுகம்... ராமநாதபுரமே என்னைப் பார்த்து வணங்குது; இங்கே கண்டவன்கிட்ட எல்லாம் அடி வாங்க வேண்டியிருக்கே....' என்று நினைத்து, நொந்தபடியே மேக்-அப் அறைக்குள் நுழைந்தார்.
'சேனாதிபதி வேஷத்துக்கு நான் லாயக்கு இல்லியாம்; உனக்கு என் காஸ்ட்யூமை மாட்டிவிடச் சொல்லிட்டாரு டைரக்டரு...' என்றார் ஏற்கனவே, சேனாதிபதி வேடத்துக்காக, 'செலக்ட்' செய்யப்பட்டிருந்த நடிகர்.
அவர் அவிழ்த்துப் போட்ட ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டார் சின்னப்பா. அவரின் வரவுக்காக காத்திருந்த ராஜா சாண்டோ, அவரை பார்த்ததும், 'பாருங்க... இவன் எப்படி ஜோரா இருக்கான். முதல்ல ஒரு நரம்புப் பயல சேனாதிபதின்னு நிக்க வெச்சிருந்தீங்களே...' என்றவர், 'சின்னப்பா... கீப் இட் அப்...' என்றார்.
ஆராய்ச்சி மணியில் சேனாதிபதியாக முக்கிய வேடத்தில் நடித்ததில் சின்னப்பாவிற்கு திருப்தி!
அதன் பின், காரைக்கால் அம்மையார், சோகா மேளார், மற்றும் ஜம்புலிங்கம் என, பட வாய்ப்புகள் தொடர்ந்தன. எம்.ஜி.ஆரின் நட்பு, அவரது வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. சாலிவாகனன் மற்றும் ராஜகுமாரி என, படத்துக்குப் படம் அவர்களின் நெருக்கம் பலப்பட்டது.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில், தும்முவதற்குக் கூட அனுமதி பெற்றே தும்ம வேண்டும் என்பர். கட்டுப்பாடுகளினால் ஒரு கோட்டையையே உருவாக்கியிருந்தார் டி.ஆர்.சுந்தரம். சின்னப்பாவிற்காக, அதன் சட்ட திட்டங்களை மீறிச் செயல்பட்டார் எம்.ஜி.ஆர்.,
மாடர்ன் தியேட்டர்சின், சர்வாதிகாரி படத்திலும் சின்னப்பாவிற்கு விடாப்பிடியாக வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். எம்.ஜி.ஆர்., தன் மீது காட்டிய அதீத அன்பை எண்ணி மலைத்துப் போனார் சின்னப்பா.
'நமக்கு படம் கிடைப்பதற்காக நண்பர் எம்.ஜி.ஆர்., பல்வேறு சங்கடங்களுக்கும் ஆளாக நேரிடுகிறதே...' என்று அவருக்கு வேதனையாகவும் இருந்தது.
'அவர் செய்கிற உதவிகளுக்கு நாம் என்ன பதில் உதவி செய்யப் போகிறோம்...'என, மனதுக்குள் மலைத்தார்.
ஆலையிலும், குடும்பத்திலும் அவ்வப் போது பலத்த எதிர்காற்று வீசியது. முடிந்த வரையில் சமாளித்தார். அடிக்கடி ஷூட்டிங் என்று ஓடுவார். கதாநாயகன் சென்னையிலிருந்து கிளம்பியே இருக்க மாட்டார். 'சரி சின்னப்பா... கதாநாயகன் வந்துடட்டும்; நாளைக்குத் தகவல் சொல்றோம்...' என்பர்.
ஆண்டில் நாலு படங்களில் ஆறேழுக் காட்சிகள் தோன்றினாலே அதிகம். ஆனால், அவஸ்தைகள் ஆயிரம். ஆனாலும், சின்னப்பாவால் சினிமாவை விட முடியவில்லை.
'சின்னப்பா... நீ அடிக்கடி லீவு எடுக்கறே. ஒண்ணு படத்துல நடி; இல்லே இங்கேயே வேலையைப் பாரு. ஒரே சமயத்துல, எத்தனை குதிரையில போக முடியும். சீக்கிரத்திலேயே உன் சீட்டு கிழிஞ்சுடும்; எது நிரந்தரம்ன்னு நீயே யோசி...' என்றார் போர்மேன்.
சின்னப்பாவிற்கு, 'பக்'கென்றது. வெள்ளித் திரை நடிப்பு ஆகாய ஊஞ்சல். தொடர்ந்து ஆடியவர்கள் யாருமே கிடையாது. எப்போது வேண்டுமானாலும் ஆளைக் கவிழ்த்து விடும். ஆனாலும், சினிமா ஆசை அமுதசுரபி. வற்றவே வற்றாது. பிணமான பின்னும் நடிக்க எழும். போர்மேனிடம் தன் நிலையை உள்ளது உள்ளபடி கூறினார்.
'நான் மறுபடியும் வேலைக்கு வந்தா நீங்க என்னை சேர்த்துக்குவீங்களா?' என்று கேட்டார்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

