
ஊராட்சி செயலராக பணிபுரியும் வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது: அந்துமணி அவர்களுக்கு, மார்ச் 8, 2015 வாரமலர் இதழில் பா.கே.ப., படித்தேன். அதில், எங்கள் துறையை பற்றியும், என்னைப் போன்ற அரசு ஊழியர்களின் பிரச்னைகள் பற்றியும் எழுதியிருந்தீர்கள். மனதுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. ஆனால், நீங்கள் எழுதியிருந்தது அதில், நூற்றுக்கு, 10 சதவீதம் தான் என்பது என் கருத்து.
மத்திய, மாநில அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை, நாங்கள் செய்து வருகிறோம். சில திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்கள். ஆனால், மக்கள் அதை சரியாக பயன்படுத்துவது இல்லை. சில திட்டங்களோ என்னைப் போன்ற அரசு ஊழியர்களின் மனதை காயப்படுத்தும் திட்டங்கள். அதில் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனக் கூறினால், பல பேருக்கு தெரிவதில்லை; 'நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம்' எனக் கூறினால் தான் புரிகிறது. இத்திட்டத்தில், ஏரி - குளங்களை தூர்வாரும் பணியை சரியாக செய்திருந்தால், இன்று, தமிழகம், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. குறைந்த பட்டம் சீமைக்கருவேல மரங்களை அழித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்; ஆனால், அதையும் செய்யவில்லை. தற்போது, கட்டட வேலைகளுக்கு இத்திட்ட பயனாளிகளை பயன்படுத்த சொல்லியிருக்கின்றனர்.
ஆனால், கட்டட வேலை செய்ய பயனாளிகள் முன் வருவதில்லை. ஏனெனில், இவ்வளவு நாட்களாக ஏரி, குளங்களை தூர் வாருகிறேன் என வேலை செய்யாமல் அமர்ந்து, கூலி வாங்கி சென்றவர்கள், இப்போது வேலை செய்யுங்கள் எனக் கூறினால், எப்படி செய்வர்!
தற்போது, ஒவ்வொரு ஊராட்சியிலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிராம சேவை மையம் கட்டப்படுகிறது. இந்த வேலையில், 'ஓர்க் ஆர்டர்' ஊராட்சி செயலர் பெயரில் போடப்பட்டுள்ளது. ஆனால், வேலையோ ஒப்பந்தக்காரர்கள் மூலமாக நடந்து வருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த வேலையை நூறு நாள் வேலை திட்ட பயனாளிகள் செய்வது போல் கணக்கு காண்பிப்பது தான். இந்த கணக்கை எங்கள் துறை உயரதிகாரிகள் எழுதச் சொல்கின்றனர்.
ஊராட்சி செயலர், அந்த ஊராட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கும், 10 அல்லது 15 நபரை தேர்வு செய்து, வேலை செய்வது போல் தினசரி கையெழுத்து வாங்கி, கணக்கு காண்பிப்பதுடன், வார முடிவில் அவர்களது கூலித் தொகையை வாங்கி, ஒப்பந்தக்காரர் வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த வேலையை ஊராட்சி செயலர் செய்தே ஆக வேண்டும். இல்லையெனில் வரும் பிரச்னைகளை ஊராட்சி செயலர் தான் சந்திக்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, மத்திய அரசின் திட்டமான, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் மற்றும் மாநில அரசின் திட்டமான பசுமை வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் மேலே கூறியது போல, நூறு நாள் வேலை அட்டையில், வேலை செய்வது போல் கணக்கு காண்பிக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல, இனி கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கும் இம்முறை தான் அமல்படுத்தப்படும் என சொல்லி வருகின்றனர்.
அந்துமணி சார்... இது மட்டுமல்ல, அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டங்களிலும் இதே குளறுபடி தான். அத்துடன் எங்களுடைய தனிப்பட்ட பிரச்னை ஒன்று உள்ளது...
தமிழகத்தில், தற்போது, 12,524 கிராம ஊராட்சிகள் செயல்படுகின்றன. அனைத்து ஊராட்சியிலும் ஒரு ஊராட்சி செயலர் பணிபுரிந்து வருகிறார். இவரின் முதன்மை பணி, ஊராட்சித் தலைவருக்கு அடிபணிவது! மன்னிக்கவும், ஊராட்சி தலைவருடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்வது! இப்போது தங்களுக்கு புரிந்திருக்கும் எங்களது பணி எப்படிப்பட்டது என!
தெரு விளக்கு பராமரிப்பு, பைப்லைன் பராமரிப்பு, சாலை பராமரிப்பு இன்னும் நிறைய நடக்காத பணிகளை நடந்ததாக கூறி, கணக்கெழுதி, காசோலை கொடுப்பது தான் மிக முக்கியமான பணி.
ஊராட்சி தலைவர் மட்டும் அதிகாரம் செய்தால் பரவாயில்லை. தலைவர் பெண்ணாக இருந்தால், அவளுடைய கணவர், தம்பி, அண்ணன், மாமனார், மச்சினன், கொழுந்தன் என, அத்தனை பேருக்கும் கும்பிடு போட வேண்டும். வேடிக்கை என்னவென்றால், எழுத, படிக்க தெரியாத ஊராட்சி தலைவருக்கு, காசோலையில் கையொப்பம் இடுவது மற்றும் ஊராட்சியை நிர்வாகம் செய்யும் அதிகாரம்!
காசோலை மற்றும் பதிவேடுகளில் கையொப்பம் இடுவதற்கு முன், ஊராட்சி செயலரை, தலைவர் மற்றும் மேற்கூறிய உறவினர்கள் விசாரணை செய்த பின்னரே கையெழுத்து போடுவர்; எவ்வளவு ஊழல் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து விடுவர்.
ஆனால், ஏதாவது பிரச்னையில் மாட்டிக் கொண்டால், 'எனக்கு எழுத படிக்கத் தெரியாது; ஊராட்சி செயலரை நம்பி தான் கையெழுத்து போட்டேன்...' என, அப்படியே, 'பல்டி' அடித்து விடுவர். அப்படியே மாட்டிக் கொண்டாலும், தங்கள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சுலபமாக தப்பி விடுவர்.
இவ்வளவு பிரச்னைகளையும் தாங்கிக் கொண்டு மன உளைச்சலோடு, ஊராட்சி செயலர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலர் பணிகள்:
* அனைத்து வரியினங்களை வசூல் செய்து, வங்கியில் செலுத்துதல்.
* மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டணம் செலுத்துதல்.
* தெருவிளக்கு, பைப் லைன் மற்றும் சாலை பராமரிப்பு பணிகள்.
* மத்திய, மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
* கிராம சபா பணிகள்.
* ஊராட்சி உறுப்பினர் கூட்டங்கள் ஒருங்கிணைத்தல்.
* கிராமபுள்ளி விவரங்கள் கணக்கெடுத்தல்.
* ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.
* 1 - 31 பதிவேடுகள் பராமரித்தல்.
* ஒன்றியம் மற்றும் மாவட்ட அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டங்களுக்கு செல்லுதல்.
* உதவி பொது தகவல் அலுவலர் பணி செய்தல்.
* மகாத்மா காந்தி நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட பதிவேடுகளை பராமரித்தல்.
* கிராம ஊராட்சி தலைவருடன் ஒருங்கிணைத்து அரசு திட்டங்களை செயல்படுத்துதல்.
* ஆன் - லைனில், பஞ்சாயத்து ராஜ் கணக்குகளை பதிவு செய்தல்.
* பதிவேடுகளை ஆய்வுக்கு செலுத்துதல் மற்றும் தணிக்கைக்கு சமர்ப்பித்தல் - தணிக்கை தடை நீக்கம் செய்தல் என இவ்வளவு பணிகள் மற்றும் மன உளைச்சலோடு திரியும் ஊராட்சி செயலரின் மாத ஊதியமோ, 8,445 ரூபாய்! இந்த ஊதியமும், ஊராட்சி தலைவர் காசோலையில் கையொப்பம் இட்டால் தான் பெற முடியும். பெரும்பாலான ஊராட்சிகளில் ஊதியத்திற்கு கூட பணம் மிச்சம் வைக்காமல், ஊராட்சி தலைவர் செலவு செய்து விடுவார். இது தான் கொடுமையின் உச்சகட்டம்.
அந்துமணி சார்... என்னால் முடிந்த வரை என் மனக்குமுறலை உங்களிடம் கூறி விட்டேன். நான் கூறிய கருத்துகள் ஒரு சில ஊராட்சிகள் மற்றும் மாவட்டங்களில் வேறுபடலாம். உங்கள் எழுத்துகள் மூலம் ஊராட்சி செயலர்கள் சமுதாயத்திற்கு நல்ல பலனை பெற்று தருவீர்கள் என நம்புகிறேன்.
— இப்படிக்கு நம்பிக்கையுடன்
ஊராட்சி செயலர்.
— ஊதுகிற சங்கை ஊதியாச்சு...

