
வி.கே.தர்மலிங்கம், புதுப்பேட்டை: இந்தியாவில், எந்த நகரத்தில் வீட்டு வாடகை அதிகம்?
மும்பையில் தான்! இந்நகரில் வசிக்கும், 'அப்பர் மிடில் கிளாஸ்' மக்களின் வருமானத்தில், 40 சதவீதம் வாடகைக்கே சென்று விடுகிறது. 'காஸ்ட் ஆப் லிவ்விங்' இங்கு அதிகம். ஐதராபாத்தை விட, 60 சதவீதம் மும்பையில் செலவு அதிகம்!
எம்.சந்தியா, துடியலூர்: யாரை திருத்த முடியாது என்று நினைக்கிறீர்கள்?
மூடர்களை திருத்தவே முடியாது; அவர்களிடம் வண்டி வண்டியாய் புத்திமதி கூறினாலும் எடுபடாது. அவர்கள் மூளையில் ஏறாது. நாயின் வாலை என்றாவது நிமிர்த்த முடியுமோ? இப்படிப்பட்டவர்களின் சகவாசமில்லாமல் நாம் ஒதுங்கி இருப்பதே புத்திசாலித்தனம்!
ஏ.கீதாவெங்கடேசன், சைதாப்பேட்டை: தாலியை மறைத்துக் கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
சங்கிலித் திருடர்களுக்கு, 'டேக்கா' கொடுக்கும் கலையை நன்கு கற்று அறிந்தவர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது!
ஜெ.ஆர்.வைத்தியநாதன், பெரியகுறிச்சி: நேருஜிக்கு பதில், நேதாஜி இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருந்தால், இந்தியா இன்னும் முன்னேறி இருக்குமா?
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல பெரியவர்கள், அவர்களில் சிலர் எழுதிய நூல்கள் எல்லாம் கூறுவது: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், முதல் பிரதமராக அனுமதிக்கப்பட்டு இருந்தால், வழ வழ, கொழ கொழ நிலை இன்று இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்காது என்பதே! நேதாஜியைப் பொறுத்தவரை, 'மிலிட்டரி' குணம் கொண்டவர்; அதே குணத்தை ஆட்சியிலும் செலுத்துவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
மு.பாத்திமா, கீழ்புவனகிரி: பஸ் ஸ்டாண்ட், பிளாட் பார்ம், பீச் போன்ற இடங்களில் சுண்டல் விற்கும் சிறுவர்களை பார்க்கும் போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
இவர்களுக்கு, நாலு எழுத்துப் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்படும். மற்றபடி, சிறுவயதிலேயே ஏதோ ஒரு நியாயமான வேலை செய்து குடும்பத்திற்கு பாரமில்லாமல் இருப்பதை எண்ணி சந்தோஷம் தான்!
எல்.திருமலைசாமி, திருத்தணி: திராவிடம் - ஆரியம் இவற்றில் நம்பிக்கை உண்டா?
மனிதம்! இதில் மட்டுமே உண்டு நம்பிக்கை!
மு.காதர்மைதீன், வத்திபட்டி: 'கதர்' என்ற சொல் எப்படி வந்தது?
முகமது அலி ஜின்னா, ஒரு சமயம் காந்திஜியை கவுரவிக்கும் விதமாக கைத்தறி துண்டு ஒன்றை அணிவித்தார். அதை அணிவிக்கும் போது, 'கதராக, கவுரவமாக' ஏற்றுக் கொள்ள வேண்டினார். 'கதர்' என்பது அரபு மொழிச் சொல்; அதற்கு, கவுரவம் என்பது பொருள்!
ஜெ.விவேகானந்தன், ஆனைமலை: ஈசாப் நீதிக் கதைகள் என்று சொல்கிறோமே... இக்கதைகளை எழுதியது யார்?
ஈசாப் தான்! இவர் கிரீஸ் நாட்டில் அடிமையாக வாழ்ந்தவர். இவரது கதைகள் தலைமுறை தலை முறையாக வாய் வழியே பரவியது தான். 2,000 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க எழுத்தாளர் ஒருவர், இக்கதைகளுக்கு வரி வடிவம் கொடுத்தார். நாம் இப்போது படிக்கும் ஈசாப் கதைகள், 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க துறவி மாக்சிம்ஸ் என்பவரால் தொகுக்கப்பட்டவை!
அ.ப.சீனிவாசன், மடத்துக்குளம்: 'இளைஞர்' என, ஒரு ஆணை எந்த வயது வரை குறிப்பிடலாம்? அதேபோல பெண்ணை, எந்த வயது வரை, 'இளம் பெண்' என குறிப்பிடலாம்?
16 வயது வரை சிறுவன் - சிறுமி; 17 முதல், 30 வயது வரை இளம்பெண் - வாலிபன்; இளைஞன் எனக் குறிப்பிடலாம்!

