தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

நன்றியை வெளிப்படுத்தும் விதம்!

நன்றியை வெளிப்படுத்தும் விதம்!


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நன்றிக்குரியவர்கள் என்ற பட்டியலை, மனசாட்சியுடன் எழுதி வாசித்தால், அது, பெரும்பாலும், மிக நீண்டதாகவே இருக்கும்; சிறியது எனில், தயாரித்தவர் மனமும், சுருங்கியதாகவே இருக்கும்.

பட்டியல் பெரிதோ, சிறிதோ, நம் நன்றியுணர்வை, உரிய காலத்தில், உரிய நேரத்தில், உரியவர்களிடம் தெரிவிக்க, ஏனோ பெரும்பாலும் தவறியிருக்கிறோம்.

அதே நேரத்தில், நம் நன்றி உணர்வுகளை வாங்கிக் கொள்ளாமல், இறந்து போனவர்கள் கூட உண்டு. காலங்கடந்து விட்டதால், வெறுப்பாகி, நம் உணர்வு புரியாமல், 'உன் நன்றியை நீயே வச்சுக்கோ... போ...' என்று, நம் மீது வெறுப்பு கொண்டு, நம்மை நிராகரித்தவர்களையும் பார்க்கிறோம்.

'சே... இப்படி நம் மனசு புரியாமல், அவசரப்பட்டு விட்டாரே...' என, மனம் வெறுத்து, நம் நன்றிக்குரியவர்களை, நாம் நிந்தித்து விலகி விட்டதும் உண்டு. ஆனால், உடனேயோ, சமய சந்தர்ப்பங்கள் வாய்த்துமே நம் நன்றி உணர்வை, இவர்களிடம் தெரிவிக்காமல் போனது யாருடைய தவறு? இதற்கிடையில், இந்த விஷயத்தில், நம் மீது, மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதும் உண்டு...

நன்றி கெட்டவர், கொஞ்சங் கூட நன்றி விசுவாசம் இல்லாதவர் என்கிற குற்றச்சாட்டு வேறு, நம் காதுகளை வந்து அடையும் போது, 'ஆகா... தவறு நிகழ்ந்து விட்டதே...' என்று, நாக்கை கடித்து கொள்வோரும் உண்டு.

இதன் தொடர்ச்சியாக, 'அந்தப் புரியாத மனுஷனுக்கு, இதையெல்லாம் புளி போட்டு விளக்க நான் தயாரில்லை...' என்று, வெறுத்து பேசுவோரையும் பார்க்கிறோம்.

இத்தகைய விபத்துகள் நிகழாது இருக்க, நாம் தான் முந்திக் கொள்ள வேண்டும்; ஆனால், ஒரு பிரிவினர், 'நன்றியுணர்வை, நம் இதயத்தில் வைத்து போற்றினால் போதும்... இதை தெரிவிக்க வேண்டிய, வெளிக்காட்ட வேண்டுமென்கிற அவசியமில்லை...' என்கிற கருத்தை கொண்டிருக்கின்றனர்.

இதற்கு, இவர்கள் கூறுகிற காரணங்கள் வேடிக்கையானவை!

'நன்றியுணர்வை வெளிப்படுத்தினால், அதை அனுகூலமாக்கி, நம்மிடம் வேலை வாங்குகின்றனர். இவர்கள் கூறுவதையெல்லாம், நாம் கேட்க வேண்டும்; பின், ஏதேனும் பெரிய உதவி கேட்பர். அப்புறம், அடிமைத்தனமாக நடத்துவர்...' என்பன இவர்கள் அடுக்கும் காரணங்கள்.

இதை, ஒரு கற்பனையான அணுகுமுறை என்பேன். காரணம், நன்றியுணர்வை வெளிப்படுத்திய பின், இவை மூன்றும் நடக்கின்றனவா என, இவர்கள் நடைமுறையில் பார்க்கட்டும். இவர்களின் கணிப்பு உண்மையாகிவிட்டால், அதன்பின், இவர்கள் தங்களுக்கான தற்காப்பு கவசங்களை அணிந்து கொள்ளட்டும்; தவறில்லை. வரம்பு மீறுகிறவர்களை எல்லைக்கோடு போட்டு நிறுத்தட்டும்.

மாறாக, எடுத்த எடுப்பிலேயே, ஊகமாக, 'அவர்கள் அப்படியாக்கும், இவர்கள் இப்படியாக்கும்...' என, ஒதுங்கி நின்று கொள்வதை ஏற்க முடியாது.

நன்றியை வெளிப்படுத்த, எத்தனையோ முறைகள் இருக்கின்றன.

நம் இல்லத்து விழாக்களுக்கு அழைத்து, நான்கு பேருக்கு அறிமுகம் செய்யும் போது, 'அன்னைக்கு, ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது...' என ஆரம்பித்து, நம் உள் உணர்வுகளை, அழகுற வெளிக் கொட்டலாம்.

'என் வீட்டு புதுமனை பூஜையில், நீங்க தான், முதல் கல் எடுத்து வைக்கணும்...' என்று அழைக்கலாம். 'அம்மா... புதுசா தொழில் துவங்குகிறேன்; நீங்கள் தான் ரிப்பன் வெட்டணும்...' என்று பரணுக்கு போய்விட்ட நன்றியுணர்வை புதுப்பிக்கிற விதத்தில், பல்லக்கில் தூக்க வைக்கலாம்.

'எங்களோட, 25வது மணநாள். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்க; தாய் - தகப்பன் ஆசீர்வாதத்திற்கு அப்பறம் உங்க ஆசீர்வாதம் தான்...' என்று தூக்கி நிறுத்தலாம்.

நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த, இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும்; இல்லாவிட்டாலும் உருவாக்கவும் செய்யலாம்.

இதுபோக, யாரை தொட்டு முன்னுக்கு வந்தோமோ, அந்த குடும்பங்களின் விசேஷங்களுக்கு போய், இடுப்பில் துண்டை கட்டி, வேலை செய்யலாம். 'பழைய விசுவாசம்; இன்னைய வரைக்கும் மறக்கல...' என, நம்மை நோக்கி சுட்டு விரல்கள் திரும்பும்.

இடுப்பில் என்றா கூறினேன்... தலைப்பாகை கட்டிக் கொண்டு கூட, எடுத்து போட்டு செய்யலாமே!

நம் நன்றிக்குரிய குடும்பம் துன்பப்பட்டால், பொருத்தமான உதவிகளை செய்யலாம். அள்ளி கொடுக்க வேண்டாம்; கிள்ளி கொடுக்கலாமே! 'காலங்களை கடந்தாலும் கரையாதது என் நன்றியுணர்ச்சி...' என்று உரியவர்களுக்கு உணர்த்துவதில், நமக்கு ஒரு நன்மை இருக்கிறது.

ஆம்... நம் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியதன் மூலம், நம்மை சுட்டுக் கொண்டிருந்த குற்ற உணர்வு, நம்மிலிருந்து நீங்குகிறது.

இந்த இடத்தில், அளவு கடந்த மன நிறைவு குடி கொள்கிறது; இந்த சுகானுபவத்தை அனுபவித்து தான் பார்ப்போமே!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us