
எம்.கணேஷன், பொள்ளாச்சி: மார்கழி மாதம் கோவிலுக்குப் போகும் கன்னிகளின் வேண்டுதல் என்ன?
'அடக்கியாள ஒரு ஆம்பளை சீக்கிரம் கிடைக்கணும்...' என்பதாக இருக்கலாம்!
ஜி.செந்தில்குமார், கீழக்கரை: கஜானா காலியாவதற்குரிய காரணங்கள் என்ன?
'வந்த மாட்டை கட்டுபவர் இல்லை; போன மாட்டை தேடுபவர் இல்லை' என, கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல, ஆட்சியாளர்களுக்கு நாடு மற்றும் மக்கள் மீது அக்கறை இல்லை. தாம், தம்மை சார்ந்தவர்கள் முன்னேற்றத்துக்கு, ஆட்சிப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருப்பதால், இந்த இழி நிலை! காமராஜர் ஆட்சி காலத்தில் மக்கள் மீது சுமத்தப்பட்ட வரிச்சுமை வெறும், 75 கோடி ரூபாய்; இன்றோ, பல மடங்கு அதிகம்!
என்.சுந்தரி, ராஜபாளையம்: பழங்கள், காய்கறிகள் அதனதன் சீசன் நேரங்களில் விலை இல்லாமல் சீரழிகின்றனவே... இதனால், நஷ்டமடையும் விவசாயிகளை காப்பாற்ற முடியாதா?
முடியும்; அதற்கு நிறைய செலவாகும். பணம் படைத்த பெரிய நிறுவனங்கள் நினைத்தால், விவசாயிகளை காப்பாற்ற முடியும். சமீப காலங்களில் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதற்கு வழி வகுத்துள்ளன. பழ உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் நாம்! ஆனால், உற்பத்தியில் ௨ சதவீதம் மட்டுமே ஜூசாகவோ, வேறு வழியிலோ பதப்படுத்த முடிகிறது. பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளில், இது, 75 சதவீதமாக இருக்கிறது!
எஸ்.வேணுகோபாலன், குமுளி: இதுவரை தாராளமாக செலவு செய்து வந்த நான், உங்கள் ஆலோசனைகளைப் படித்து, சிக்கனமாக இருக்கிறேன்; உடன் இருப்போர், என்னை, 'கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்துள்ளனரே...
உடன் இருப்பவர் முன், படாடோபம் காட்ட நினைத்து செலவழித்தால், கையில் காசு இல்லாதபோது இவர்கள் யாரும் உதவப் போவதில்லை. 'கஞ்சன்' என்ற பட்டத்தை, கவுரவமாக நினையுங்கள்!
கே.விக்டர், தாம்பரம்: தமிழன் முன்னேற இப்போது மிகத் தேவையானது எது, தேவையற்றது எது?
பகுத்தறிவது, தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்போரை அடையாளம் கண்டு கொள்வது, கொடி பிடித்து கோஷம் போட்டு, போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் போய் நேரத்தை வீணாக்குவது!
எஸ்.எம்.மணி, திண்டுக்கல்: இந்த சமுதாயத்தில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வாழ முடியுமா?
எந்த விதத்தில் இக்கேள்வியை கேட்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை. பணத்தை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்வி என்றால், ஆண் துணை இல்லாமல் வாழ முடியும். எனக்குத் தெரிந்து சென்னையில் மட்டுமல்லாது, தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் சுய சம்பாத்தியம் மூலம் பெண்கள் பலர் தனியாக வாழ்வதை அறிவேன். அவர்களில் சிலர், 'ஆண் துணை இருப்பது, வாழ்வை பூரணத்துவம் அடைய வைக்கும்...' எனக் கூறுவதையும் கேட்டிருக்கிறேன்!
ஏ.ரமணி, விழுப்புரம்: எழுத்து மூலம் எல்லார் மனதிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியுமா?
எல்லார் மனதிலும் என்று கூற முடியாவிட்டாலும், பெரும்பான்மை யினரிடம் முடியும். லெனின், பாரதியார், அண்ணாதுரை போன்றோர் தம் எழுத்தால் தானே சரித்திரம் படைத்தனர். அவ்வளவு ஏன்... ஏதோ பேனா கிடைத்தது என எழுத ஆரம்பித்த என்னால் கூட, சிலரின் மனதில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடிந்துள்ளதே!

