
ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பின்னாளில் சட்ட மொழி பெயர்ப்புத் துறை தலைவராக பதவி வகித்தார். அப்போது, அவர் சொன்னது:
ஷேக்ஸ்பியரின், 'கிங்லியர்' நூலை மொழி பெயர்க்கும் போது, எனக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்லியா இறந்து விட்டாள்; அவளுடைய பிரேதத்தை தூக்கிக் கொண்டு ஓடுகிறான் அரசன், லியர். அவனுக்கு, தன் அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற சந்தேகம், உள் மனதில் எழுகிறது.
உடனே, தன் வீரர்களிடம், 'ஒரு கண்ணாடியை கொண்டு வாருங்கள்... அவள் மூக்குக்கு எதிரே அதைப் பிடித்தால் சுவாசம் இருக்கிறதா, இல்லயா என்று தெரிந்து விடும்...' என்று கூறினான்.
இவ்விடத்தில், 'It with mist the mirror' எனும் ஆங்கில வாக்கியத்தை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என யோசித்தேன்.
பத்து நாட்கள் ஆகியும், இதற்கு பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. ஒருநாள் சமையலறையில், என் மனைவி இட்லி தயார் செய்து கொண்டிருந்தாள். அதை பார்த்தவுடன், 'கொப்பரையின் மூடியில் ஆவி படிகிறபோது, அதற்கு என்ன சொல்வது வழக்கம்?' என்று கேட்டேன்.
அவள், 'வேர்த்து விடறதைக் கேட்கிறீங்களா...' என்றாள்.
கண்ணாடியை மூக்குக்கு எதிரே கொண்டு போனால், 'கண்ணாடி வேர்த்து விடும்!' என்று மொழி பெயர்த்தால், எவ்வளவு பொருத்தமாக
இருக்கும்... 'mist' என்ற வார்த்தைக்கு, அப்படியே பொருள் கொண்டேன்.
சற்றே சிரமம் எடுத்துக் கொண்டால், எந்த ஒரு ஆங்கிலச் சொல்லுக்கும், பொருத்தமான தமிழ்ச் சொல், புழக்கத்திலுள்ள தமிழிலேயே இருப்பதைக் காணலாம்.
மூலத்தினுடைய அந்தராத்மாவை எப்படியாவது சொல்லித் தீர்த்துவிட வேண்டும் என்பதே, நம்முடைய உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்குப் புறம்பான எந்த கருத்தையும் புறக்கணிக்க வேண்டியது, மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.
ஒரு குறிப்பிட்ட சொல், சுயம்பான தமிழ்ச் சொல்லா, பிற மொழி சொல்லா என்பது அல்ல பிரச்னை. அது உயிருள்ள சொல்லா, செத்த சொல்லா, மூல நூலின் சுவையையும், மணத்தையும் தமிழில் தரவல்ல சொல்லா, இல்லையா என்பது தான் பிரச்னை.
உயிருள்ள, தமிழ்நாட்டில், சமபந்தி போஜனம் செய்து கொண்டிருக்கிற சொல்லானால், அதை விட்டுக் கொடுக்கக் கூடாது; அது கிடைக்காது.
கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்... கதே என்பது சீனச் சொல். அதை, தமிழில் கத்தரிக்காய் என்று புழக்கத்தில் கொண்டு வந்து விட்டோம். கத்தரிக்காய்க்குள் சீன மொழி இருக்கிறது. அதனால், கத்தரிக்காய்க்கு வேறு சொல்லையா கண்டுபிடிக்க வேண்டும்?
'கஷ்டம்' என்ற சொல்லும் அம்மாதிரிதான். அது சமஸ்கிருதச் சொல்; ஆயினும், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழில் ஏற்றுக் கொண்டு விட்டோம்.
'டாய்லெட்' என்பதை, பிரெஞ்சு மொழியில், 'துவாலே' என்று உச்சரிக்க வேண்டும். நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்துகிற, 'துவாலைத் துண்டு' என்கிற தமிழ் சொல், இந்த பிரெஞ்சு சொல்லிலிருந்து தான், நம்முடைய பழக்கத்திற்கு வந்திருக்கிறது.
மயில் தோகையில் உள்ள, 'தோகை' என்கிற சொல்லையே ரோமில், 'தோகா' என்று குறிப்பிடுகின்றனர். 'தோகை' என்ற சொல், தமிழிலிருந்து ரோமுக்குப் போயிருக்கிறது.
துருக்கி மொழியில், 'கூலி' என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். துருக்கியிலிருந்து வந்திருந்த தூது கோஷ்டி, நம் ஊர், 'ஹார்பரில்' பேசப்படுகிற, 'கூலி' என்கிற வார்த்தையை கேட்டு, 'இந்த சொல்லை எப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டார்களாம்.
அப்போது ரா.பி.சேதுபிள்ளை, 'எவ்வளவு காலமாக துருக்கி இலக்கியத்தில் இந்த சொல் பயன்படுகிறது?' என்று கேட்டார். 'துருக்கி இலக்கியம் பிறந்தே 1,000 ஆண்டுகளுக்குள் தான்...' என்று பதில் வந்தது.
'மெய் வருத்தக் கூலி தரும்...' என்று, 3,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்...' என்று, சேது பிள்ளை விளக்கம் தந்தபோது, 'கூலி' என்ற சொல், தமிழ் சொல்தான் என்று, ஒப்புக் கொண்டனர்.
ஆகவே, தாராள மனப்பான்மையுடன் கொடுக்கல், - வாங்கல் செய்ய வேண்டும்.
'Unless the context other wise required' என்று, சட்ட சம்பந்தமான ஆங்கிலச் சொற்றொடர் உண்டு. இதை, 'தருவாயின் தேவை வேறானால் அன்றி' என்று மொழி பெயர்த்துள்ளனர்.
'சூழ்நிலை வேறு; பொருள் குறித்தாலன்றி' என்று, எவரும் புரிந்து கொள்ளக் கூடியவாறு மொழி பெயர்க்கலாமே!
'In any other case' என்பதை, 'பிற எந்த தேர்விலும்' என்று மொழி பெயர்த்து வந்துள்ளனர். இதை, 'பிற தருணம் எதிலும்' என்று மாற்றி அமைக்கலாம். இதைவிட நல்ல சொற்களை மற்றவர்கள் சொல்லக் கூடும்.
— இவ்வாறு அவர் கூறினார்.
விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளை தமிழர்கள், தமிழில் படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நம்மில் பலரிடையே உண்டு. அவற்றை தமிழில் மாற்றும் போது, எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, யோசித்துப் பாருங்கள்!
'அடுத்த வாரம் மும்பை போறேன்; தாதர் எக்ஸ்பிரசில் ரிசர்வ் செய்திருக்கேன்...' என்றார் நடுத்தெரு நாராயணன்.
'ஜாக்ரதை! எவனாவது மயக்க பிஸ்கட் கொடுத்து, அகப்பட்டதை சுருட்டி, அம்பேல் ஆகப் போறான்...' என்றார் குப்பண்ணா.
மயக்க மருந்துகள் பற்றி, எனக்குத் தெரிந்த சரக்குகளை அவிழ்த்து விட்டேன்:
அறுவை சிகிச்சையின் போது, மயக்கம் உண்டாக்க, வாயுவாக அல்லது ஊசி மருந்தாக மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.
நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தால், உடல் முழுவதும் உணர்ச்சி இழக்கச் செய்து, மயக்கம் உண்டாகும்படி மயக்க மருந்து கொடுக்க வேண்டும்.
இடுப்பில், தண்டுவடத்தில் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தினால், இடுப்பிற்குக் கீழ் உணர்ச்சியற்றுப் போகும்.
இது தவிர கை மற்றும் கால் விரல்களில் மட்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், இம்மயக்க மருந்தை, அப்பகுதிகளில் மட்டும் செலுத்தலாம்.
சிரிப்பூட்டும் வாயு எனப்படும், நைட்ரஸ் ஆக்சைடு, ஈதர், குளோரோபார்ம் மற்றும் கோக்கயின் ஆகியவை முக்கியமான மயக்க மருந்துகள்.
மயக்க மருந்தாக நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தலாம் என்று, 1842ல், தெரிவித்தார், சர் ஹம்ப்ரி டேவி. இதை, முதன்முதலாக அமெரிக்க நாட்டினர் பயன்படுத்தினர்.
பின், ஜேம்ஸ் சிம்சன் என்ற ஆங்கிலேயர், குளோரோபாமை கண்டுபிடித்தார்; ஆனால், அதை பயன்படுத்த பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இம்மயக்க மருந்து, 1853ல், விக்டோரியா ராணிக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகே, பலரும் இம்மருந்தைப் பயன்படுத்த இசைந்தனர். மயக்க மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத் துறையில் சிறப்பான சாதனை தான் என, முடித்தேன்.
ஆமோதிக்கும் விதமாக, அனைவரும் தலையாட்டினர்.
'தாமஸ் ஆல்வா எடிசன், பெரிய விஞ்ஞானி என்று தெரியும்; ஆனால், பெரிய மோசடிக்காரன் என்பது தெரியுமா...' என்றார், குப்பண்ணா.
'உண்மையா, ரீல் விடுறீங்களா...' என்றேன்.
'உண்மை தான்...' என்றவர், 'தன் மின்சார சாதனங்களை விற்க, உலகின் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்திருந்தார் எடிசன். செர்பியா நாட்டுக் கிளையில், டெஸ்லா என்ற விஞ்ஞானி வேலை செய்து வந்தார். அவர் எடிசனை சந்தித்து, எடிசன் கண்டுபிடித்திருந்த டைனமோக்களில் பல முன்னேற்றங்களை செய்து தருவதாக கூறினார்.
'அவர் திறமைசாலி என்பதை உணர்ந்த எடிசன், அவர் கூறும் மாற்றங்களை செய்ய நீண்ட காலம் பிடிக்கும்; அவ்வளவு நாள் அவருக்கு சம்பளம் தருவது வீண் என நினைத்து, 'முதலில் நீங்கள் கூறும் மாற்றங்களை செய்து முடியுங்கள்; முடித்தால், 50 ஆயிரம் டாலர் தருகிறேன்...' என்றார்.
'பசி, தூக்கம் பாராமல் உழைத்து, டைனமோவில் சில மாறுதல்களை செய்து முடித்தார் டெஸ்லா. அதைப் பாராட்டிய எடிசன், பணம் தரவில்லை. '50 ஆயிரம் டாலரா... சும்மா வேடிக்கைக்கு கூறினேன்...' என்று கூறி, அதிக சம்பளத்தில் வேலை போட்டுக் கொடுத்தார்.
'இதனால், கோபித்துக் கொண்டு வேறு கம்பெனிக்குச் சென்று, கடுமையாக உழைத்து, அக்கம்பெனிகளின் தயாரிப்பு பொருட்களின் தரத்தை உயர்த்தினார் டெஸ்லா. இதைப் பயன்படுத்தி, கம்பெனியை நல்ல விலைக்கு விற்று விட்டார் அதன் முதலாளி. டெஸ்லாவுக்கு வர வேண்டிய பெயர், புகழ், பணம் எல்லாம் மற்றவர்களுக்கு போய் விட்டது. வறுமையில் இறந்தார் டெஸ்லா...' என்றார்.
சே... என்ன உலகம்!

