PUBLISHED ON : ஜன 03, 2016

சர்வதேச காற்றாடி திருவிழா, ஜன.,7லிருந்து 10ம் தேதி வரை, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடை பெறவிருக்கிறது.
இந்த காற்றாடி திருவிழா, 1,000 ஆண்டுகளாக தொடர்ந்தாலும், எப்போது துவங்கியது என துல்லியமாக கூற முடியாது. பெர்ஷியாவிலிருந்து, இந்தியா வந்த இஸ்லாமியர்கள் அல்லது சீனாவிலிருந்து வந்த புத்த மதத்தினர் மூலம், இது பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்விழா, மகர சங்கராந்தி அதாவது பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும். அன்று உறவினர்கள் இனிப்புகளை பரிமாறி, பட்டம் விட்டு, சூரியனை வழிபடுவர்.
அத்துடன், இரவு விளக்குகளுடன் கூடிய காற்றாடி, ஒளி - ஒலியுடன் கூடியவை மற்றும் லேசர் காற்றாடிகள் என பலவற்றை விண்ணில் பறக்க விடுவர்.
ஆமதாபாத் பழைய டவுனில், பதாஸ் பஜார் என்ற இடம், காற்றாடிகளுக்கு பெயர் பெற்றது. நவம்பர் முதலே, இங்கு காற்றாடி தயாரிக்கும் பணி துவங்கி விடும். பல வகையான அளவு மற்றும் வடிவமைப்புகளில் காற்றாடிகளை செய்வர். சங்கராந்திக்கு முதல் வாரம், 24 மணி நேரமும் காற்றாடி கடைகள் திறந்து வைக்கப்பட்டு, விற்பனை ஆரம்பித்து விடும்.
காலை, 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடைபெறும் இந்த சர்வதேச காற்றாடி திருவிழாவில், மலேஷியா, இந்தோனேஷியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி மற்றும் சீனாவினர் கலந்து கொண்டு, அவரவர் நாட்டின் சிறப்பை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட காற்றாடிகளை பறக்க விட்டு மகிழ்வர். இது தவிர, உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் உருவம் கொண்ட காற்றாடிகளையும் பறக்க விடுவர்.
விழா நடக்கும் இடத்தில், காற்றாடி செய்வது எப்படி, காற்றாடி பற்றிய தகவல்கள் மற்றும் சிறப்புகளை விளக்கும், 'ஸ்டால்'கள் அமைக்கப்பட்டிருக்கும். இத்திருவிழாவை கண்டுகளிக்க, இத்தாலி, பிரிட்டன், ஜப்பான், கனடா, பிரேசில், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும், சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருவர்.
ஆமதாபாத் தவிர, ஜெய்பூரிலும், காற்றாடி திருவிழா பிரபலம். ஆமதாபாத்தைச் சேர்ந்த ரகிம்பாய் என்ற பெரியவர், காற்றாடி விடுவதில் கை தேர்ந்தவர்; 500 பட்டங்களை ஒரே நூலில் இணைத்து, அவர் பறக்க விடுவது, காணக்கிடைக்காத காட்சி!
அமெரிக்காவில், வாஷிங்டன் நகரத்தில், லாங் பீச் என்ற பகுதியில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறும். இங்கு, காற்றாடி சார்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது!
ராஜிராதா.

