PUBLISHED ON : ஜன 03, 2016
உங்களுக்கு பிடித்தமான வேலையில் தான் இருக்கிறீர்களா என்பதை, கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து, அதை பரிசோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கேள்விக்கும், இரண்டு அல்லது மூன்று பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களது பதிலை, 'டிக்' செய்து வாருங்கள். இறுதியில், மொத்த மதிப்பெண் எப்படி என்று பார்ப்போம்!
1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்:
முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்...
இரண்டாமவன்: நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் சம்பாதிக்கிறேன்...
மூன்றாமவன்: ஏழு மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்...
- இதில் உங்களது பதில் என்ன?
2. சினிமா ஒரு பயனுள்ள துறை தான்; ஏனென்றால்...
அ. நடிக - நடிகையருக்கு பிழைப்பு தருகின்றன.
ஆ. மக்கள் மகிழ்ச்சியடைய உதவுகின்றன.
இ. பல துறையைச் சேர்ந்தவர்கள், இதனால் பிழைக்கின்றனர்.
3. கட்சி, இனம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை பாராட்டாமல், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வேட்பாளருக்குத் தான் என் ஓட்டு.
அ. ஆமாம்.
ஆ. அப்படியில்லை; என் கட்சிக் காரருக்கு தான்.
4. சமூக உயர்வுக்கு பாடுபடும் தலைவர்களை விட, சந்தர்ப்பவாத தலைவர்களே அதிகம் உருவாகின்றனர்.
அ.உண்மை.
ஆ.தவறு.
5. லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்...
அ.வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்திக் கொள்வேன்.
ஆ.நினைத்திருந்த லட்சியத்தை, அதன் மூலம் செய்து முடிப்பேன்.
இ.மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவுவேன்.
6. நீங்கள் இப்போது பார்க்கும் வேலையில் இருப்பதற்கு காரணம்?
அ. பெரும் சிபாரிசு மூலம் கிடைத்த, அதிக சம்பளம் வரும் வேலை.
ஆ. தானாக வந்தது.
இ. இந்த வேலை தான் நான் விரும்பியது.
7. 'டிவி' பயனுள்ள கண்டுபிடிப்பு. ஏனென்றால்...
அ. அது மக்களின் பொது அறிவை வளரச் செய்கிறது.
ஆ. குடும்பத்துடன் பொழுதுபோக்க உதவுகிறது.
இ. ஏதாவது செய்வதற்கு வழி காட்டுகிறது.
விடை:
1 - இரண்டாமவன்.
2 - ஆ.
3 - அ.
4 - அ.
5 - இ.
6 - இ.
7 - அ.
சரியான விடை ஒவ்வொன்றுக்கும், 10 மார்க்; மற்றவற்றுக்கு, 5 மார்க்.
50 அல்லது அதற்கும் மேல் வாங்கினால், வேலையில் மகிழ்வுடன் இருக்கும் அதிர்ஷ்டக்காரர் நீங்கள்!
40 முதல் 45 வரை: நீங்கள் உண்மையாகத்தான் பாடுபடுகிறீர்கள்; ஆனால், உங்கள் வேலை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
30 முதல் 35 வரை: நீங்கள் செய்ய விரும்பும் வேலை என்ன என்ற தீர்மானத்துக்கு வர வேண்டியவர் நீங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் மாறிவிடுவது நல்லது.
20 -க்கும் கீழே: 'வான்டட் காலம்' பார்த்து, உடனே வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்.

