
பூந்தொட்டிக்கு வரவேற்பு!
எங்கள் பகுதியிலுள்ள கோவில் வாசலில், பிச்சைக்காரர்கள் தொந்தரவு அதிகமாக இருக்கும். சமீபத்தில் கோவிலுக்கு சென்ற போது, பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்த இடத்தில், அழகான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதுபற்றி அருகில் பூக்கடை வைத்திருந்த பெண்மணியிடம் கேட்டதற்கு, 'கோவில் தர்மகர்த்தா, பிச்சைக்காரர்களிடம், 'நீங்க எல்லாரும் இங்கே உட்காந்து பிச்சை எடுக்கணும்ன்னா, காலையில, ரெண்டு பேர் கோவில் வளாகத்தை பெருக்கணும்; ரெண்டு பேர், தண்ணீர் தெளிக்கணும்; மத்தவங்க பராமரிப்பு வேலைகள செய்யணும்'ன்னு சொன்னார். அவங்களும் அதை ஏற்று, ரெண்டு நாட்கள் வேலை செஞ்சாங்க. தொடர்ந்து, உடம்ப வளைச்சு வேலை செய்ய பிடிக்காம எல்லாரும் வேறு கோவிலை தேடிப் போயிட்டாங்க. அவங்க இருந்த இடத்தில, பூந்தொட்டிகளை வைச்சு, மீண்டும் அவங்களுக்கு இடம் கிடைக்காம செய்துட்டார்...' என்றார். இதுபோல் எல்லா கோவில் நிர்வாகிகளும் செய்தால், பக்தர்கள் நிம்மதியாக சாமி கும்பிட்டு செல்வர்.
— எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி, சென்னை.
ஆசிரியரைப் பற்றி குறை கூறலாமா?
வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தனர் என் குழந்தைகள். ஊரிலிருந்து வந்திருந்த என் மாமனார், அவர்கள் எழுதுவதை பார்த்து, 'எது எழுதினாலும் அத வாய் விட்டு சொல்லியபடி எழுதுங்க; எழுதி முடிச்சதும், அது சரி தானான்னு பாருங்க...' என்றார்.
சிறிது நேரம் சென்றபின், என் பையன் எழுதியதில் ஏதோ பிழை இருக்க, அதை சுட்டிக் காட்டி, 'இது சரியான விடை இல்லயே...' என்றார். அதற்கு என் மகனோ, 'எங்க மிஸ் இப்படித் தான் சொல்லித் தந்தாங்க...' என்றான்.
உடனே, என் மாமனார், 'அப்ப சரியா தான் இருக்கும்; எதுக்கும், நாளைக்கு உங்க மிஸ்கிட்ட இந்த விடை சரியான்னு கேட்டு பாரேன்...' என்றார்; அவனும் ஆமோதித்தான்.
அவர்கள் வீட்டுப் பாடத்தை முடித்து, விளையாட சென்ற பின், 'தவறான விடைன்னா அதை திருத்தி, சரியான விடைய நீங்களே சொல்லி தந்திருக்கலாமே மாமா...' என்றதற்கு, 'நாம அப்படி செய்தா, குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதான நம்பிக்கை போயிடும்; அதோட, நாம ஆசிரியரை குறை கூறினா, நாளைக்கு பாடத்தில் இவங்க ஏதேனும் பிழைகள் செய்தாக் கூட, அந்தப் பழிய ஆசிரியர் மீது சுமத்திடுவாங்க. ஆசிரியர்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இருக்கும் வரை தான், அவங்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும்...' என்றார்.
என் மாமனாரின் பக்குவமான போதனை, என் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எனக்கும் நல்ல பாடமாக இருந்தது.
— கவிதா ராஜன், மதுரை.
காய் வாங்கப் போறீர்களா... கவனம்!
சமீபத்தில், காய்கறி வாங்க, 'ஏசி' வசதி கொண்ட நவீன காய்கறி கடைக்குச் சென்றிருந்தேன். காய்கறிகள் அழகாக அடுக்கப்பட்டு, சுத்தமாக இருந்தது. காய்கறிகளை, 'டிரேயில்' எடுத்தபடி, கேஷ் கவுன்டருக்கு சென்றேன்.
அங்கே, ஒரு பெண்மணி,முதலாளியிடம், கடை ஊழியர், கீரைகள் மற்றும் பழங்களின் மீது, கொசு மருந்து அடித்ததாகவும், அது தவறில்லையா என்று கோபமாக சப்தம் போட்டார். முதலாளியோ, அலட்சியமாக, 'அதுக்கு என்ன செய்றது... இந்த சீசனில், கொசு அதிகமாக மொய்க்குது; வாங்க வர்றவங்க அதை விரும்புறதில்ல...' என்றார். அங்கிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, 'இனிமே அப்படி செய்யாம பாத்துக்கறேன்...' என்று சமாளித்தார். நான் காய்கறி வாங்காமல் திரும்பி விட்டேன்.
இது, கண்ணுக்கு எதிரே நடந்ததால், கண்டிக்க முடிந்தது. இதுபோல், எத்தனையோ கடைக்காரர்கள், நமக்கு தெரியாமல், மக்களின் ஆரோக்கியத்துடனும், உயிருடனும் விளையாடுகின்றனர்.
இனிமேல், இதுபோல், நவநாகரிக கடைகளில் காய்கறி வாங்குவோர், கவனமாக பார்த்து வாங்கவும்.
ஏற்கனவே, ரசாயன உரங்களில் விளைந்த பொருட்களின் மேல், கொசு மருந்து அடித்து, மக்களின் உயிரோடு விளையாடும் வியாபாரிகள் எப்போது தான் திருந்துவரோ?
— கி.புஷ்பலதா, சென்னை.

