
மே 11 - மங்கையர்கரசியார் குருபூஜை
கல்வியறிவு பெருகி விட்ட இந்தக் காலத்தில், பெண்கள் சாதிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், புராண காலத்திலேயே ஒரு பெண்மணி தன் மதத்தைக் காக்கும் பொருட்டு பெரும் சாதனை புரிந்திருக்கிறார். அவர் தான் மங்கையர்க்கரசி. மதுரையை ஆண்ட மகாராணி.
மதுரையில் நின்றசீர் நெடுமாறன் ஆட்சி செய்து வந்த வேளை. அவர் மானி என்னும் பெயர் கொண்ட சோழநாட்டு பெண்மணியை திருமணம் செய்தார். மானி என்றால், மானம் மிக்கவள், மானம் காத்தவள் என்று பொருள். அந்த பெண்மணி, மங்கையர்க்கெல்லாம் தலைவி என்ற பொருளில் மங்கையர்க்கரசி என அழைக்கப் பட்டார்.
மதுரையில் சைவ மதத்தின் கை ஓங்கியிருந்த வேளையில், சமணர்கள் அங்கே வந்தனர். அவர்கள் தங்கள் மதத்தின் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரப்பினர். இந்த கோட்பாடுகள் நின்றசீர் நெடுமாறனுக்கும் பிடித்து விட்டது. அவன் சமண மதத்திற்கு மாறி விட்டான். மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலோ, சைவம் சார்ந்தது. அங்கே பூஜை, புனஸ்காரங்கள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மன்னனை எதிர்த்து யாரால் கோவிலுக்குச் செல்ல முடியும்?
சைவத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள மங்கையர்க்கரசியும், பாண்டியநாட்டு அமைச்சர் குலச்சிறையாரும் மன்னரின் போக்கால் வருந்தினர். மகாராணியின் ஆணைப்படி, சைவம் காக்க குலச்சிறையார், ஞானசம்பந்தரை சந்திக்க கிளம்பினார். சம்பந்தர் அப்போது திருமறைக் காட்டில் (வேதாரண்யம்) முகாமிட்டிருந்தார். அதே ஊருக்கு திருநாவுக்கரசரும் வந்திருந்தார். குலச்சிறையார் சம்பந்தரைச் சந்தித்து சைவம் காக்க மதுரை வரும்படி அழைத்தார். சம்பந்தரும் புறப்பட்டார். நாவுக்கரசர் அவரைத் தடுத்து, 'ஐயனே... தாங்கள் கிளம்பும் இந்நாளில், கிரகங்களின் சூழல் நன்றாக இல்லையே... பொறுத்துப் போகலாமே...' என்று அறிவுரை சொன்னார். 'நாவுக்கரசரே... கவலை வேண்டாம். 'நமசிவாய'என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் முன்னால் நவக்கிரகங்களுக்கு என்ன வேலை? நான் புறப்படுகிறேன்...' என்றார். அப்போது அவர் பாடிய வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்ற பதிகம் தான், இன்று நவக்கிரக சந்நிதியில் பக்தர்களால் பாடப் படுகிறது.
சம்பந்தர் மதுரை வருவதற்குள், சுந்தரேஸ்வரரிடம், தன் கணவரின் மனநிலை மாற வேண்டி மன்றாடினார் மங்கையர்க்கரசி. சுந்தரேஸ்வரரும் லீலையைத் துவங்கினார். நின்றசீர் நெடுமாறனுக்கு தீராத வயிற்றுவலியைக் கொடுத்தார். அவனை குணமாக்க சமணர்கள் செய்த மந்திர தந்திரங்கள் பலிக்கவில்லை. பாண்டியனால் நிமிர்ந்து நிற்க முடியாமல், குனிந்து வளைந்து வயிற்றைப் பிடித்து வலியை தாங்க வேண்டிய தாயிற்று. இதனால், 'நின்ற சீர் நெடுமாறனாக' இருந்தவன், 'கூன் பாண்டியன்' என்று பட்டப்பெயர் பெற்று விட்டான்.
சம்பந்தர் மதுரை வந்து, சுந்தரேவரர் மடப்பள்ளியில் இருந்த சாம்பலை எடுத்து மன்னனுக்கு தடவினார். நோய் குணமானது. அப்போது அவர் பாடியது தான், மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு என்னும் பதிகம்.
இதையடுத்து மன்னன் சைவத்திற்கு மாறினான். தன் கணவர் மீண்டும் தாய் மதம் மாற காரணமாக இருந்தவர் மங்கையர்க்கரசியார். சிவபெருமான், தன் கருணை மழையை இவர் மீது பொழிந்தார். அவர் நாயன்மார் வரிசையில் இடம் பிடித்தார். பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல, அவரது கணவர் நின்றசீர் நெடுமாறன் மற்றும் அமைச்சர் குலச்சிறையாருக்கும் நாயன்மார் அந்தஸ்து கிடைத்தது.
பெண்கள் தங்கள் கணவரை உத்தியோக அளவில் உயர்த்திப் பார்த்தால் மட்டும் போதாது; அவர்களது பழக்க வழக்கங்களையும் உயர்ந்ததாக மாற்ற முயற்சிக்க வேண்டும். மங்கையர்க் கரசியாரின் வாழ்க்கை வரலாறு, நமக்கு உணர்த்தும் பாடம் இதுவே.
***
தி. செல்லப்பா