
லென்ஸ் மாமாவின் அமெரிக்க தோழி... வெள்ளைக்காரப் பெண்... இவருக்கு இசை ஆர்வம் அதிகம். அதிலும், தமிழ் படித்தவர்! தன் பெயரை மீனாட்சி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.
'அவ, சென்னை வந்து இருக்காளாம்... போன் பண்ணினா... சாயங்காலமா கன்னிமாரா ஓட்டல் வரச் சொல்லி இருக்கா... உன்னையும் தான்...' என்றார் லென்ஸ் மாமா.
மாலை — கன்னிமாரா ஓட்டல்!
முதலிலேயே கிளம்பிச் சென்று இருந்தார் மாமா! அங்கு, என்னை, 'ரெஸ்டரன்ட்'க்கு வரச் சொல்லி இருந்தார்...
அங்கே —
மீனாட்சியும், லென்ஸ் மாமாவும் வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின், சீரியசான மீனாட்சி, 'உங்களுக்கு பேஸ் பால் தெரியுமா?' என்று இலக்கண சுத்தமான தமிழில் கேட்டார்.
'விளையாடத் தெரியாது... ஆனால், அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டு என்று தெரியும்...'
'பைபிள் படித்திருக்கிறீர்களா?' என்று அடுத்த கேள்விக் கணையை எடுத்து விட்டார் அப்பெண்மணி. 'முழுமையாகப் படித்ததில்லை; ஆனாலும், சாராம்சம் தெரியும்...' என்றேன். இப்படி பதில் சொல்லி விட்டாலும், எனக்குள் ஒரு பயங்கலந்த சந்தேகம்... எதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்?
மீனாட்சியே தொடர்ந்தார்... 'பயப்படாதீர்கள்... ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் இதையெல்லாம் கேட்கிறேன். இன்னும் ஒரே ஒரு கேள்வி... கூரத்தாழ்வார் கதை தெரியுமா உங்களுக்கு?'
'தெரியாது...' என்று சங்கடமாக பதில் சொல்லி, மாமாவைப் பார்த்தேன். அவரோ வைத்த கண் வாங்காமல் மீனாட்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.
'சரி... அந்த கூரத்தாழ்வார் கதையை இப்போது சொல்கிறேன்...' என்று ஆரம்பித்தார் மீனாட்சி. கதையின் சுருக்கம்...
அந்தக் காலத்தில் திருவரங்கத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவன் வைணவர்களையெல்லாம் மிகவும் துன்புறுத்தி வந்தான். ஆனால், எவ்வளவு துன்புறுத்தினாலும் மக்களின் ஆதரவு மட்டும் வைணவத்திற்கு குறைந்தபாடில்லை. குழம்பிய மன்னன், மந்திரி நாலூரானிடம் காரணம் கேட்டான்...
'அந்த ராமானுஜன் என்ற பேர்வழியைப் பிடித்து சிரசேதம் செய்து விட்டால் சரியாய் போய் விடும்...' என்றார் மந்திரி.
இந்தியாவின் ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவரான ராமானுஜரை பிடித்து வர கிளம்பியது வீரர் கூட்டம். அப்போது ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான கூரத்தாழ்வார் தன் குருவைப் பார்த்து, 'தாங்கள் வேறு எங்காவது சென்று விடுங்கள்; தங்களை பிடிக்க அரசனின் வீரர்கள் வருகின்றனர்...' என்று பதறினார்.
சம்மதிக்கவில்லை குரு; ஆனால், சீடரும் விடவில்லை...
'தாங்கள் உயிரோடு இருக்க வேண்டியது உங்களுக்காக அல்ல; எங்களுக்காக, மக்களுக்காக...' என்று வாதாடி ராமானுஜரை வெளி தேசத்திற்கு ரகசியமாக அனுப்பி வைத்தார் சிஷ்யரான கூரத்தாழ்வார்!
இதை அறிந்த மந்திரி நாலூரான், கூரத்தாழ்வாரைப் பிடித்து, அவரது இரு கண்களையும் தோண்டியெடுத்து விட்டான்.
காலம் மாறியது... ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் சந்தித்தனர். கூரத்தாழ்வாரின் நிலையைப் பார்த்து கலங்கிய ராமானுஜர், 'பெருமாளிடம் வேண்டிக் கொள். இழந்த கண்களை திரும்பப் பெறுவாய்...' என்றார்.
கூரத்தாழ்வாரும், பெருமாளை தரிசித்தார்.
இதற்கு மேல் தான் கதையில் முக்கியமான பாயின்ட்!
திரும்பவும் ராமானுஜரிடம் வந்தார் கூரத்தாழ்வார். ஆனால், ராமானுஜருக்கு ஒரே குழப்பம். கூரத்தாழ்வாரின் கண்கள் குழிகளாகவே இருந்தன.
'ஏன், பெருமாளிடம் கேட்கவில்லையா?' ராமானுஜர்.
'கேட்டேனே!'
'என்ன கேட்டீர்... கண்களைத் தானே?'
அதற்கு கூரத்தாழ்வார் சொன்ன பதில் இது:
'நாலூரான் அறியாமல் செய்து விட்டான். பிழைத்துப் போகட்டும் என்று பெருமாளிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்...' என்றார்.
— கதையைக் கேட்ட பிறகும், இந்த கதையை சொல்வதற்கு முன், ஏன் பைபிள் பற்றி மீனாட்சி கேட்டார் என்று எனக்கு புரியவில்லை.
கேட்டேன்.
'இந்தியர்களாகிய உங்களுக்கு அமெரிக்க விளையாட்டான பேஸ் பால் பற்றி தெரிந்திருக்கிறது. 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...' என்றும், தான் சிலுவையில் அறையப்படும் போது, 'இவர்கள் தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கின்றனர். பிதாவே; இவர்களை மன்னியும்...' என்றும் சொன்ன இயேசுவின் காவியம் தெரிகிறது. ஆனால், அதே போன்ற கூரத்தாழ்வாரின் கதை தெரியவில்லை...' என்றார் மீனாட்சி.
நட்சத்திர ஓட்டலில் அழகிய அமெரிக்கப் பெண், நம் நாட்டின் அற்புதமான வரலாற்றுச் சம்பவத்தைச் சொல்லக் கேட்டது அரிதான விஷயம் தான்... ஆனாலும், நம் வரலாற்றை வெளிநாட்டவர், நம்மிடமே சொல்ல வேண்டியிருப்பதை நினைத்து, நெளியத்தான் செய்தேன்!
***
எங்கள் தெரு கொஞ்சம் பெரியது. பல தரப்பட்ட, பல தட்டு மக்கள் வசிக்கும் பகுதி... அவர்களில் ஒருவர் அரசு பதவி வகிப்பவர். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, லென்ஸ் மாமாவின் நண்பர் என்பதால் எனக்கும் பழக்கம்.
ஆசாமி, அரசு அலுவலராயிற்றே... 'சைடு இன்கம்' தாராளம்... 'அது' தாராளம் என்றால், 'நல்ல' பழக்கங்களும் தாமாக தொற்றிக் கொள்ளும்தானே!
காலையில், டிப்-டாப்பாக, சட்டையை, 'டக்-இன்' செய்து, ஷூ அணிந்து, கம்பீரமாக ஆபிஸ் செல்வார். மாலையில் - மாலை எங்கே, இரவில் வீடு திரும்பும் போது, 'உற்சாக பானம்' ஏற்றிக் கொண்டு, தன் நிலை தெரியாமல்,'அங்கிள் ஜான் எக்ஷா' (உ.பா.,வின் பெயர்)வின் உத்தரவுக்குக் கட்டுபட்டு, தலைவிரி கோலமாக, சட்டையை வெளியே எடுத்துவிட்டு, இரண்டு, மூன்று பட்டன்கள் போடாமல் நடை பயிலும் குழந்தை, 'ஸ்டைலில்' வருவார்!
சமீபத்தில் ஒரு நாள் இரவு, அவர் வீட்டைக் கடந்து வரும் நேரத்தில், ஆசாமிக்கு மண்டகப்படி நடந்து கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது...
அவர் மனைவி... 'என்ன மனுஷன்யா நீ? காலையிலே அரச கட்டளை எம்.ஜி.ஆர்., மாதிரி ஆபிசுக்குப் போறே; ராத்திரி வரும்போது, அடிமைப் பெண் எம்.ஜி.ஆர்., மாதிரி வீடு திரும்புறியே... வெட்கமா இல்லயா?' என்றார்!
— அந்தப் பெண்மணியின் உவமை நயத்தை ரசித்தபடி அங்கிருந்து கிளம்பினேன்.
***
அவர் ஒரு காலத்தில் ஜமீந்தார் பட்டத்துடன் இருந்தவர். ஜமீந்தாரி முறை ஒழிந்த பின்னரும், அவ்வூர் மக்கள் அப்பெரியவரை, 'ஜமீந்தார்' என்றே அழைக்கின்றனர். பெரிய ஜமீந்தார், ஒரு வேட்டைப்பிரியர். வேட்டையாட தடை செய்யப்படாத காலத்தில், பெரிய ஜமீந்தார், வேட்டைக்கு சென்ற பகுதிகளுக்கெல்லாம் சமீபத்தில், எங்களை அழைத்துச் சென்று காட்டினார், அவரது மகனான சின்ன ஜமீந்தார். அப்படி சுற்றி வரும் போது, காட்டில், மரத்தின் மீது இருந்த ஒரு குருவியைக் காட்டி, 'இது ஆள் காட்டி குருவி தெரியுமா?' என்றார்.
'அதென்ன ஆள்காட்டி குருவி?' என்றேன்.
ஆள் காட்டி குருவி பற்றி மேலும் அவர் சொன்ன தகவல்கள் சுவையானவை:
நம் தமிழகக் காடுகளில் இக்குருவிகள் காணப்படுகின்றன... மனிதர்களை கண்டால் மட்டுமே இந்தக் குருவி பயங்கரமாக அலறி, கூச்சலிடும். இதனால், மனிதர்கள் வருவதை அறிந்து, வனவிலங்குகள் மறைவிடம் தேடி ஓடி விடும்.
இரவிலும், பகலிலும் இப்படி ஆளை காட்டிக் கொடுக்கக்கூடிய இந்தக் குருவியை, பழங்கால அரசர்கள் பிடித்து கூண்டில் அடைத்து, தங்களது கோட்டைக்கு சற்று தள்ளி வைத்து விடுவர். எதிரிகளோ, ஒற்றர்களோ ரகசியமாக மறைந்து வந்தால்கூட இந்தக் குருவிகள் உரக்கக் கத்தி, காட்டிக் கொடுத்து விடும்!' என்றார்.
— ஆச்சரியம் தான்!
***